இறையனுபவத்தை வாழ்வாக்கிட | குழந்தைஇயேசு பாபு |Daily Reflection


பொதுக்காலத்தின் 18 ஆம் சனி
ஆண்டவரின் தோற்ற மாற்ற விழா
I: தானியேல் 7: 9-10, 13-14
II:  தி பா :97: 1-2. 5-6. 9 
III :2 பேதுரு 1: 16-19
IV: லூக் 1: 16-19
இன்று நாம் தாய்த்திருஅவையோடு இயேசுவின் உருமாற்றப் பெருவிழாவை கொண்டாடுகின்றோம். "மாற்றத்தை விரும்பாத மனிதமும், சமுதாயமும் அழிந்தே போகும் "என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப இவ்வுலகில் மாற்றம் என்ற சொல் மட்டுமே மாறாத ஒன்றாக இருக்கிறது. மாற்றம் என்பது தனக்கும், மற்றவர்களுக்கும் பயனளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த மாற்றம் வெறும் வார்த்தையாகவே இருந்து விடும். சூழ்நிலைக்கு ஏற்றவாறும் காலத்தின் அறிகுறிகளுக்கு ஏற்றவாறும் திருஅவை தன்னை புதுப்பித்து மாற்றிக் கொண்டதால்தான், 2000 ஆண்டுகளுக்கு பிறகும் மிகவும் உறுதியாக இருக்கின்றது. இம்மண்ணில் இறையாட்சி மலர பல வாழ்வியல் கருத்துக்களை கொடுத்துக் கொண்டு வருகிறது. மாற்றம்தான் நாமும் பிறரும் புது வாழ்வைப் பெற வழி காட்டுகின்றது. இன்றைய நாளில் ஆண்டவரின் உருமாற்ற பெருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றோம். இயேசுவின் உருமாற்றம் இறை அனுபவத்தை வாழ்வாக்கிட  அழைப்பு விடுகிறது.

இன்றைய நற்செய்தி மூன்று நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டுகின்றது. முதலில் இயேசு சீடர்களுடன் மலைமேல் ஏறிச் செல்லுதல். இரண்டாவதாக இயேசுவின் உருமாற்றம் நிகழ்வு. மூன்றாவதாக இறை அனுபவத்தை பெற்றுவிட்டு மலையிலிருந்து பணிக்வாழ்வுக்காக கீழிறங்குதல் . நாமும் நம்முடைய அன்றாட வாழ்விலே இயேசுவைப் போல இறை அனுபவத்தை பெற இறைவேண்டல் வழியாக இறைவனிடம் நம்மையே ஒப்புக் கொடுக்க வேண்டும். இது முதல் நிலையாக கருதப்படுகிறது.  அதன்பிறகு இறை அனுபவத்தின் வழியாக நம்முடைய தீய வாழ்வில் இருந்தும் இலக்கில்லாத வாழ்வில் இருந்தும் உருமாறி புனித உள்ளத்தோடு இலக்கு நோக்கி பயணிக்கும் மனநிலையை வளர்த்துக் கொள்ள இறைவேண்டல் செய்ய வேண்டும். இவர் இரண்டாவது நிலையாக கருதப்படுகிறது.  நாம்  உருமாற்றத்தின் வழியாக பெற்ற இறை அனுபவத்தை நம்மோடு வாழக்கூடிய மக்களும் பெற இயேசுவைப் போல நாமும் மலையிலிருந்து மக்களை நோக்கி வரவேண்டும். இறை அனுபவத்தை பெற்ற பிறகு பணி வாழ்வுக்காக கீழே இறங்கும் நிலையைச் சுட்டிக்காட்டுகிறது. இது மூன்றாவது நிலை. இந்த மூன்று நிலைகளும் ஒவ்வொருவரின் ஆன்மிக வாழ்விலும் நடைபெற வேண்டிய நிலைகளை எடுத்துக்காட்டுகின்றன. 

இந்த மூன்று நிலைகளின்  இறையியல் பின்னணிகளை பின்வருமாறு அறிவோம். முதலாவதாக இயேசு தனக்கு நெருக்கமான சீடர்களாகிய பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோருடன் மலைக்கு ஏறிச் சென்றார். இறை அனுபவத்தைப் பெற்று உருமாற்றமடைய மலைமேல் ஏறியதின் இறையியல் பின்னணி என்னவென்றால் இஸ்ரயேல் மக்கள் மலையில்தான் இறைவனுடைய பிரசன்னம் இருப்பதாக நம்பினர்.  இயேசு உருமாற்றம்  மலையில்  அடைந்தது இதற்குச் சான்றாக இருக்கின்றது.  ஏனெனில்  யூத மக்கள் மலைப்பகுதியில் கடவுளின் பிரசன்னத்தை உணர்ந்ததாக        விவிலியத்தின் பிற பகுதிகளிலும் காணமுடிகின்றது. மேலும்  மலைப்பகுதி கடவுளுடைய உடனிருப்பை  உணர்த்தும் இடமாகவும் கடவுளை சந்திக்கும்  ஒரு இடமாகவும் திகழ்கின்றது. 

கடவுள் இஸ்ரயேல் மக்களை சந்திக்க சீனாய் மலை மேல் இறங்கி வந்ததையும், மக்களை சந்திக்க வந்த யாவே இறைவன் அவர்களோடு புதிய உறவில் இணைவதையும் விளக்குகின்றது என்பதற்கு விப: 19:16-25 வரையுள்ள வசனங்கள் சான்றாக இருக்கின்றன .  யாவே இறைவன் இந்த மலையில் தான் இறைவாக்கினர் எலியா முன்பாக கடந்து சென்றதாக 1அரச: 20:11-12 வரை உள்ள பகுதிகள் சான்று பகர்கின்றன. மலையனுபவம் துன்பங்களைக் கண்டு துவண்டுவிடாமல் துணிவோடு பணி செய்யும் உந்து சக்தியாக அமைகின்றது.  

புதிய ஏற்பாட்டிலும்  இயேசு மலைக்கு தனியாகச் சென்று செபம்  செய்தார் என்பதை நான்கு நற்செய்தி நூல்களும் சான்று பகர்கின்றன.  எனவே மலை கடவுளின் வாழும் இடமாக விவிலியத்தில்  காண்பிக்கப்படுகின்றது. இப்போது இயேசுவும் சீடர்களும் தாங்கள் வாழ்ந்த எதார்த்த நிலையை இன்றைய நற்செய்தியில்  கடந்து செல்கின்றனர். சீடர்களின் எதார்த்த நிலை என்ன என்பதை இயேசுவின் உருமாற்றத்திற்கு  முன்புள்ள பகுதியில் காணலாம். இயேசுவின் உருமாற்றத்திற்கு ஆறு நாட்களுக்கு முன்புதான் தன்னுடைய இறப்பை முதல்முறையாக அறிவித்திருந்தார். மேலும் இயேசுவின் இறையாட்சி பணியில் உடனிருந்த சீடர்கள் இயேசு சந்திக்க இருக்கும் எதிர்ப்புகளையும் ஏமாற்றங்களையும் அவர் துன்பப்பட்டு இறக்க நேரிடும் என்பதையும் கேட்டு நம்பிக்கையில் தளர்ந்து காணப்பட்டிருந்தார்கள். இந்த எதார்த்தங்களைக் கடந்து செல்வதற்கான அழைப்புதான் இயேசு அவர்களைத் தனியாக ஓர் உயர்ந்த மலைக்கு அழைத்துச் சென்றது. இந்த அழைப்பானது குழப்பங்களிலும் புதிர்களிலும் வாழ்வின் சோதனைகளிலும் சோர்ந்து போகும் போது கடவுளின் உடனிருப்பைப் புரிந்து கொள்வதற்கான அழைப்பாகும்.

இரண்டாவது இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வு. இது சீடர்களின் நம்பிக்கையைத் திடப்படுத்த, மனிதத்தில் கரைந்த இயேசுவின் இறைமை அவரின் பாடுகள் மூலமே வெளிப்படும் என்பதையும், பாடுகளின்றி  இயேசுவின் தெய்வீகத் தன்மையைக் காணவியலாது  என்பதையும் விளக்குகின்றது. துன்பங்கள் இல்லாத வாழ்வை வாழ்பவர்களல்ல; மாறாக, துன்பங்களை ஏற்று வாழத் தெரிந்தவர்கள் மட்டுமே தன் வாழ்விலும் தான் வாழும் குடும்பம் மற்றும் சமுதாயத்திலும் மாற்றங்களை அனுபவிக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. இதைத்தான் இயேசு "கோதுமை மணி மண்ணில் விழுந்து  மடிந்தால் தான் மிகுந்த விளைச்சலைத் தரும் "என்று கூறுகிறார்.  இயேசு தோற்ற மாற்றத்தின் வழியாக ஒரு புது பார்வையை தருகின்றார்.

மூன்றாவதாக, மலையிலிருந்து கீழே இறங்குதல். இந்த நிகழ்வு பெற்றுக்கொண்ட புதிய பார்வையுடன் வாழ்க்கையை வாழ்வதற்கான அழைப்பு. இயேசுவின் மகிமையைகக் கண்ட பேதுரு அங்கேயே தங்கிவிடுவதற்கான தன் விருப்பத்தை தெரிவிக்கிறார். ஆனால் இயேசு சீடர்கள் எந்த வாழ்வு சூழலிலிருந்து வந்தனரோ மீண்டும் அதே நிலைக்கு அழைத்துச் செல்கின்றார்.  இறை அழைப்பையும் இறைவனின் உடனிருப்பையும் அனுபவிப்பதுடன் நாம் பயணம் முடியுமானால், அது முழுமையற்றதாகி விடும். மாறாக, பிறர் வாழ அதை பகிர்ந்து கொள்வதில்தான் இறையனுபவம் முழுமை பெறும் என்பதை எடுத்துக்காட்டுகின்றது.  

எனவே இறை அனுபவத்தை பெற்றுக்கொள்ள மலைமேல் ஏற வேண்டும். அதாவது இறைவேண்டலில் இணையவேண்டும். நாம்   உருமாற்றம் பெறவேண்டும். அதாவது பழைய தீய வாழ்வை விட்டுவிட்டு புனிதத்தில் இறைவனின் உடனிருப்பை உணர வேண்டும். இதன் வழியாக இறை அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். அதன்பிறகு நாம் பெற்றுக் கொண்ட இறை அனுபவத்தை நம்முடைய வாழ்வின் வழியாக மற்றவர்களும் பெற்றுக்கொள்ள ஒரு கருவியாகப் பயன்பட அழைக்கப்பட்டுள்ளோம்.  இத்தகைய நிலைகளை அடைந்து இறை அனுபவத்தை வாழ்வாக்கவே, இயேசுவின் உருமாற்றப் பெருவிழா  நமக்கு அழைப்பு விடுக்கின்றது.  

இறையனுபவம் நாம்  மட்டும் வாழ அல்ல ; மாறாக, பிறரையும் வாழ வைக்க தூண்டவேண்டும். ஆலயத்திலும் ஆலய வழிபாடுகளிலும் முடிவதல்ல  இறையனுபவம். நாம் வாழும் இடங்களில், பணிசெய்யும் தளங்களில், நம் பங்குகளில், நம் குடும்பத்தில் வாழ்வாக்கப்பட வேண்டும். இறை அனுபவத்தை அனுபவிப்பதன் வழியாக மட்டும் நின்றுவிடாமல் கடவுளைத் தந்தையாக அனுபவிக்க அழைக்கப்பட்டுள்ளோம். அதனைத் தொடர்ந்து நம்மோடு வாழும் நம் சமூகத்தில் நிலவும் அரசியல், பொருளாதார, சமூக குழப்பங்களையும் வேறுபாடுகளையும் தாண்டி வாழத் துடிக்கின்ற அனைவரும் நம் சகோதர சகோதரிகள் என்ற பார்வையும் நம்மில் வளர்த்துக் கொள்ளவும்இன்றைய விழாஅழைப்பு விடுக்கிறது. இறை அனுபவத்தில் இறைவன் நம் சுமைகளை சுமக்கிறார் என்பதை உணர்ந்து, நாமும் நம்மோடு வாழக்கூடியவர்களின்  சுமைகளை சுமக்க அழைக்கப்பட்டுள்ளோம். மேலும் அகம் சார்ந்தவற்றிலுள்ள பாவங்களை விட்டு விட்டு,  புறம் சார்ந்த தூய வாழ்வின் வழியாக  இயேசுவுக்கு சான்று பகர முயற்சி செய்வோம்.  இதன் வழியாக இறை அனுபவத்தை நம்மோடு வாழக்கூடிய அனைவரும் பெற்றுக்கொள்ள நாம் ஒரு கருவியாகப் பயன்பட முடியும். இறை அனுபவத்தை வாழ்வாக்கி பிறருக்கு வாழ்வு கொடுத்திடும் மனப்பக்குவத்தை பெறத் தேவையான இறையருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் :
வல்லமையுள்ள தெய்வமே இறைவா!  உம் திருமகன் இயேசுவின் உருமாற்ற திருவிழா நாளிலே உமக்கு நன்றி செலுத்துகின்றோம். நாங்கள் எங்கள் பாவத்தை விட்டு விட்டு தூயவர்களாக உருமாற உமது அருளையும் இரக்கத்தையும் தாரும். தூய வாழ்வின் வழியாக நாங்கள் இறை அனுபவத்தை பெற்று அதை வாழ்வாக்கிட உமது அருளை பொழிந்தருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

2 + 2 =