Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இயேசுவைப் போல சமூக மாற்றத்தை உருவாக்குவோம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் 13ஆம் வெள்ளி
I : ஆமோ: 8:4-6,9-12
II : திபா 118:2,10,20,30,40,131
III : மத்: 9:9-13
இச்சமூகத்தில் புரட்சியாளர்கள் அதிகம் நினைவுகூறப்படுகிறார்கள். இறந்து பல நூற்றாண்டுகள் ஆன பின்னும் பேசப்படுகிறார்கள்.
அதற்கு காரணம் அவர்கள் சமூகத்தில் கொண்டுவந்த மாற்றங்கள். இவ்வகை மாற்றங்கள் ஒடுக்கப்பட்டோருக்கு உயர்வு அளிப்பதாவும் அதிகார வர்க்கத்தினருக்கு சவால் விடுவதாகவும் இருக்கின்றது என்று கூறினால் அது மிகையாகாது.
ஆபிரகாம் லிங்கன், நெல்சன் மண்டேலா போன்றோர் ஒடுக்கப்பட்ட கருப்பின மக்களுக்காக போராடி புரட்சியை ஏற்படுத்தியவர்கள். நம் தேசித் தந்தை காந்தியடிகள் அகிம்சை வழியில் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடி புரட்சியை ஏற்படுத்தினார். இவ்வாறாக நாம் பலரைப் பேசிக்கொண்டே செல்லலாம்.
ஆனால் ஈராயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே இயேசு மிகப் பெரும் சமூக மாற்றத்தைக் கொணர்ந்தார்.
இன்றைய முதல் வாசகத்தையும் நற்செய்தியையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இயேசுவின் மாறுட்ட புரட்சிகரமான மனநிலையை நாம் அறிந்து கொள்ளலாம்.இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் பலர் ஏழைகள் ,நோயுற்றோர், பாவிகள் என கருதப்பட்டோரை மனிதர்களாகக் கூட மதிக்கவில்லை.அவர்களை செருப்புக்கு வாங்கினார்கள். விற்றார்கள். ஆனால் திருவிழாக்களை மட்டும் கொண்டாடினார்கள். பலி செலுத்தினார்கள்.
இயேசு அவரோடு வாழ்ந்த யூதர்களின் மனநிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டவராக இருந்தார். அவருக்கு திருவிழாவே ஏழைகளோடும் பாவிகளோடும் இணைந்திருப்பதும், உறவாடுவதுமே. இயேசு ஏற்படுத்திய உண்மையான புரட்சி என்ன? அனைவரும் கடவுளின் பிள்ளைகள் ,அனைவரும் அன்பு செய்யப்படவும் மதிக்கப்படவும் தகுதியானவர்கள் என்பதே. அதைப் பெறாத ஏழைகள், நோயாளிகள், பாவிகள் என்று சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களை அணுகிச் சென்று தந்தையின் அன்பையும் மனிதனுக்குத் தரவேண்டிய மதிப்பையும் இயேசு கொடுத்தார். புரட்சியாளரானார்.
இயேசு இங்கே தந்தையின் மனநிலையை அப்படியே வெளிப்படுத்துகிறார். "உங்கள் விழாக்களை யும் பலிகளையும் அருவருக்கிறேன் "என்று ஆமோஸ் இறைவாக்கினர் வழியாக தந்தை கூறுகிறார்.இயேசுவும் அதை உணர்ந்தவராய் பிறருக்கும் உணர்த்தக்கூடியவராய் வாழ்ந்து "பலியை அல்ல இரக்கத்தை விரும்புகிறேன் "என்ற வார்த்தையை மெய்ப்பித்தார்.
இயேசுவின் வழியில் நாமும் விண்ணகத் தந்தையின் விருப்பத்திற்கிணங்க அனைவரையும் மதித்து ஏற்றுக்கொண்டு அன்பு செய்து மன்னித்து வாழ முயற்சிப்போம். அதுவே இறைவன் விரும்பும் பலி. அதுவே உண்மையான புரட்சி. சாதி மதம் பொருளாதாரம் நிறம் இனம் என அனைத்தையும் கடந்து அனைவரோடும் உறவாடி புதிய சமூக மாற்றத்தை இயேசுவின் வழியில் கொணர முயற்சிப்போம்.
இறைவேண்டல்
இறைவா! உம் அன்பை அனைவருக்கும் பகிர்ந்து வாழ்ந்து சமூகத்தில் இயேசுவைப் போல மாற்றத்தைக் கொணர வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment