இயேசுவைப் போல் நம் இதயத்தை அன்பால் நிறைப்போம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் பனிரெண்டாம் வெள்ளி
இயேசுவின் திரு இருதயம் பெருவிழா

I: எசே 34:11-16
II: திபா22:1-6
III :உரோ 5:5-11
IV: லூக் 15:3-7

இன்று நாம் திருஅவையோடு இணைந்து இயேசுவின் இதய அன்பைக் கொண்டாடி மகிழ்கிறோம். இயேசுவின் தூய்மை மிகு இதயம் நம் அனைவரையும் அவருடைய அன்பில் இளைப்பாற அழைக்கிறது. அத்தோடு மட்டும் நாம் நின்றுவிடக்கூடாது நமது இதயங்களும் அவருடைய இதயத்தைப் போல மாற்றம் பெறவேண்டும் என்பதே இன்றைய விழா நமக்கு விடுக்கும் அழைப்பு.

பொதுவாக இதயம்  என்றாலே அது அன்பின் சின்னமாகக் கருதப்படுகிறது. " நான் உன்னை அன்பு செய்கிறேன் " என ஒருவர் மற்றவரிடம் வெளிப்படுத்தும் வாக்கியங்களில் இதயங்களை வரைந்து அதை வெளிப்படுத்துவது வழக்கம். விரல்களைக் கொண்டு இதய வடிவம் அமைத்து சைகை காட்டி தங்களின் அன்பை வெளிப்படுத்துவது இளைஞர்களின் வழக்கமாகி விட்டது. அவ்வாறாக இதயம் என்றால் அன்பு என உலகமே ஏற்றுக்கொள்கிறது. அது உண்மையாகவும் இருக்கிறது.மனித இதயமே அன்பை வெளிப்படுத்தும் சின்னமாக விளங்கும் போது இறைவனின் இதயத்தைப்பற்றி சொல்லவா வேண்டும்?

ஆயினும் ஒரு வேறுபாடு உள்ளது. மனித இதயம் எல்லாருக்கும் ஒருபோல அன்பை வழங்குவதில்லை. தனக்கு விருப்பான சிலருக்கு மட்டுமே அன்பை வழங்குகிறது. அவர்களை மட்டுமே மன்னிக்கிறது. அவர்களுக்காக மட்டுமே எல்லாவற்றையும் செய்கிறது.ஆனால் இயேசுவின் இதயம் குறிப்பிட்ட சிலரை மட்டுமல்ல எல்லாரையும் தனக்குள் அடக்கிறது. அனைவருக்கும் அனைத்தையும் கொடுக்கிறது. அனைவரையும் மன்னிக்கிறது. இந்த அன்பு நம்மால் புரிந்து கொள்ள இயலாததாகவும், விளக்கம் கொடுக்க முடியாததாகவும் உள்ளது. இதையே "விவரிக்க விவரிக்க விரிந்திடும் அன்பு " என ஒரு  பாடல் வரி நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

இயேசுவின் இதயம் கடவுள் அன்பின் முகமாகும்.
இன்றைய நாளின் மூன்று வாசகங்களும் கடவுளின் இந்த அளப்பரிய அன்பை மிக அழகாக ஆழமாக எடுத்துரைக்கின்றன.முதல் வாசகமும் திருப்பாடலும் நற்செய்தியும் கடவுளை ஆயனாக உருவகப்படுத்துகின்றன. ஆயன் தன் மந்தையிலுள்ள எல்லா ஆடுகளையும் கண்ணும் கருத்துமாகப் பராமரிக்கிறார். தன் பராமரிப்பினின்று விலகிப் போகும் ஆடுகளை தாமாகத் தேடிச் சென்று மீட்டு அன்பை வழங்குகிறார். அதே போல நம் ஆண்டவரும் தம் மக்கள் அனைவரையும் சமமாக அன்பு செய்து பராமரிக்கிறார். பாவத்தால் விலகிச் செல்பவர்களைக் கூட விட்டுவிடாமல் தம் அன்பால் மீட்கிறார்.

இக்கருத்தை இன்னும் ஆழமாக இரண்டாம் வாசகம் விளக்குகிறது. நேர்மையாளர்களுக்காக உயிரை ஒருவர் கொடுப்பதே அரிதான காரியம். ஆனால் நாம் பாவிகளாய் இருக்கும் போதே இயேசு நமக்காக உயிர் துறந்தாரென்றால் அந்த அன்பை என்னென்று சொல்வது! இயேசுவின் இதயத்தின் அன்பை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை எனலாம். 

நமது இதயங்களும் இயேசுவின் அன்பால் நிரப்பப்பட்டால் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அனைவரையும் நம்மாலும் பாரபட்சமின்றி அன்பு செய்ய இயலும்.  மன்னிக்க இயலும்.  குறை நிறைகளோடு ஏற்றுக்கொள்ள இயலும்.  ஆனால் நாமோ பல சமயங்களில் நமது இதயத்தை கடினப்படுத்திக் கொண்டு நான், எனது, என் விருப்பம், நான் விரும்பியவர்கள் என நம் அன்பைக் குறுக்கிக் கொள்கிறோம். நமது இதயம் இயேசுவின் இதயத்தைப் போல மாறினால் ஒவ்வொரு நாளும் நமக்கு அன்பின் விழாதான். எனவே இயேசுவின் இதயத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் அன்பில் நம் இதயத்தைத் தூய்மைப்படுத்துவோம். அவருடைய இதயத்தைப் போல நமது இதயமும் அவருடைய அன்பால் பற்றி எரியட்டும். உலகம் அன்பாய் மாறட்டும்.

 இறைவேண்டல் 
 இயேசுவே !உமது இதயத்தைப் போல எங்கள் இதயங்களையும் அன்பால் நிறைக்கப்பட்ட இதயங்களாக மாற்றுவீராக.  ஆமென்.

Add new comment

1 + 16 =