இயேசுவுக்காக அவமதிப்புகளை மகிழ்ச்சியுடன் ஏற்கத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம் இரண்டாம் வெள்ளி
I :தி ப :5:34-42
II :  தி பா: 26:1,4,13-14
III : யோவான் 6:1-15

ஒரு அருட்சகோதரி என்னுடன் இவ்வாறாகப் பகிர்ந்து கொண்டார். அவர் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைக்காக படித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு ஊரில் உள்ள நிறுவனத்திற்கு அனுபவத்திற்காகச் சென்றார். அந்நிறுவனத்திலிருந்து குழந்தைகளை கோவிலுக்குக் கூட்டிச் சென்றனர். அதுவும் ஒருவகையான கற்பித்தல் அனுபவமே. அக்கோவில் இந்து சமயத்தைத் தழுவுபவர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த கோவில். முதலில் தயங்கினாலும் அனுபவத்திற்குச் சென்ற இடத்தில் நிறுவனத்தார் சொல்வதைக் கேட்டுக் கீழ்படியவேண்டுமல்லவா. எனவே அச்சகோதரியும் சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு பெண் திடீரென அருட்சகோதரியைப் பார்த்து கத்த ஆரம்பித்தார். " பக்தி பரவசத்தோடு வழிபடுபவர்கள்தான் இங்கே வரவேண்டும். உங்களைப்போன்ற தீய சக்திகளை வழிபடுபவர்கள் இங்கே வரக்கூடாது. வெளியே போ" என கோபத்தோடு அப்பெண் கூறினார். அந்த சகோதரிக்கு மிகவும் வருத்தமாய் இருந்தது. அனைவரும் அவரை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அமைதியாக அவர் வெளியேறிவிட்டார். 
இந்த நிகழ்வைக் கூறிவிட்டு அந்தச் சகோதரி தான் அன்று அந்த இடத்தில் இயேசுவின் சாட்சியாக ஒரு கிறிஸ்தவளாக நின்றதில் பெருமைப்பட்டதாகக் கூறினார். 

அன்புக்குரியவர்களேமத்தேயு நற்செய்தியின் மலைப்பொழிவிலே இயேசு இவ்வாறாகக் கூறுவார். "என் பொருட்டு உங்களை இகழ்ந்து துன்புறுத்தி உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவை எல்லாம் கூறும்போது மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள். உங்களுக்குக் கிடைக்கும் கைமாறு மிகுதியாகும் ". இன்றைய முதல் வாசகத்தில் இவ்வார்த்தைகளை சீடர்கள் வாழ்ந்துகாட்டியதை நாம் வாசிக்கிறோம். இயேசுவின் பெயரால் நற்செய்தி அறிவித்ததை கண்டித்து அதிகாரம் கொண்ட யூத மதத்தலைவர்கள் அவர்களை துன்புறுத்தினர். நையப் புடைத்தனர் என்ற வார்த்தை தரப்பட்டுள்ளது. ஆனால் சீடர்களோ அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்கள் என நாம் வாசிக்கிறோம்.இவை தொடக்கம் தான்.அதற்கு பின்னும் அவர்கள் பல பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தது. ஆனால் அவர்களுக்கு கிடைத்த கைமாறு என்ன? இன்றளவும் அவர்களை திருஅவையின் தூண்களாய் நாம் போற்றி புகழுகிறோமே அதுவல்லவா கடவுள் அவர்களுக்களித்த கைமாறு.

நம்மில் எத்தனை பேருக்கு பிறர்முன் நம்மை கிறிஸ்தவர்களாக கிண்பிக்கத் துணிச்சல் இருக்கிறது? அதுவும் மதசார்பற்ற நாடாக இருந்த நம் நாடு மதவாதிகளின் பிடியில் சிக்கிக்கொண்டுள்ள இக்காலத்தில் கிறிஸ்துவை பகிரங்கமாக ஏற்று அறிக்கையிட்டு அதனால் வரும் அவமதிப்புகளையும் துன்பங்களையும் மகிழ்வோடு ஏற்க நாம் தயாராக இருக்கிறோமா என ஒவ்வொருவரும் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

பாலைநிலத்தில் அப்பத்தை பலுகச் செய்து ஐயாயிரம் பேருக்கு உண்ணக் கொடுத்த உடன் அரசராக்கப்பார்த்த  கூட்டத்தை இயேசு விரும்பவில்லை. அதிசயங்களையும் வல்ல செயல்களையும் தேடி ஓடும் மக்களாக நாம் இருப்பதையும் இயேசு விரும்பவில்லை. அவரை உலகின்முன் அறிக்கையிடக்கூடியவர்களாகவும் அவருக்காக துன்பங்களை மகிழ்வுடன் ஏற்க கூடியவர்களாகவும் வாழ்வதையே அவர் விரும்புகிறார். அப்படிப்பட்ட ஒருவனாக ஒருவளாக நான் மாறத் தயாரா?

 இறைவேண்டல் 
அன்பு இயேசுவே! உம் பெயர் பொருட்டு ஏற்படும் அவதிப்புகளையும் இன்னல்களையும் ஏற்கும் உறுதியுள்ள நம்பிக்கையாளர்களாக எம்மை மாற்றும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

10 + 3 =