இயேசுவின் சீடர்களா நாம்! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் இரண்டாம் வெள்ளி  
I: எபிரேயர்  8: 6-13
II: திபா: 85: 7,9. 10-11. 12-13 
III:  3: 13-19

ஒரு ஊரில் ஆலயத்தைப் பராமரிக்க ஒரு நபர் இருந்தார். அந்த ஆலயம் மிகச் சிறந்த புகழ் வாய்ந்த ஆலயம். அந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பாஸ்கா பெருவிழா இயேசுவின் பிறப்பு முதல் விண்ணேற்பு  வரை  உள்ள நிகழ்வுகளை இரண்டு நாட்கள் கலைஞர்கள் நடித்துக் காட்டுவர். இதன் வழியாக எண்ணற்ற பிற சமய மக்கள் கூட இயேசுவினுடைய வாழ்க்கை வரலாற்றை ஆர்வமுடன் காண்பதற்காக வருவர். குறிப்பாக இந்த ஆலயத்தில் கலைஞர்களுக்கு அலங்காரம் செய்ய ஆலய பொறுப்பாளர் தான் முன்னின்று செய்வார். அவருக்கு மட்டும்தான் அனைத்து பொருட்களும் எங்கு இருக்கின்றது என்பது தெரியும். மற்றவர்களுக்கு அதை பற்றியத் தெளிவான விவரங்கள் தெரியாது. நாளைய பொறுப்பாளராகக்கூடியவருக்கு  இப்பொறுப்புகளைப் பற்றி
 சொல்லித் தர வேண்டும் என்ற ஒரு எண்ணம் இல்லாமல் அவர் மட்டுமே செய்யவேண்டும் என்ற பார்வையில் இருந்தார் அந்தப் பொறுப்பாளர். பாஸ்கா கலைநிகழ்ச்சி நடக்கக்கூடிய காலங்களில் தனக்கு உதவியாக ஒவ்வொரு ஆண்டும் ஆட்களை மாற்றிக் கொண்டே இருப்பார். இறுதிவரை யாருக்கும் எதையும் அவர் சொல்லிக் கொடுக்கவில்லை. அந்த பொறுப்பாளருக்கு வயது முதிர்ச்சியால் தனது பணிகளை செய்ய முடியாமல் இருக்கும் சூழல் ஏற்பட்டது. படுத்த படுக்கையில் அவர் இருந்தார். இப்படிப்பட்ட சூழலில் அந்த பாஸ்கா கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய ஆட்கள் முன் வந்த பொழுதும் அவற்றை சிறப்பாக செய்ய முடியவில்லை. எந்தப் பொருள் எங்கு இருக்கின்றது என்றும் எவ்வாறு பிறரை அலங்காரம் செய்ய வேண்டும் என்றும் புரிதல் இல்லா சூழலில் சற்று குழப்பமடைந்தனர். படுத்த படுக்கையில் இருக்கும் இவரிடம் ஒவ்வொன்றாக கேட்டபொழுதுதான் அவரின் தவற்றை உணர்ந்தார். நான் நன்றாக இருக்கும் பொழுதே பிறரைப் பழக்கி வைத்திருக்க வேண்டும். நான் சுயநலத்தோடு இருந்து பிறரை  வளரவிடாமல் இருந் திருக்கின்றேன். இது என்னுடைய தவறுதான் என்பதை உணர்ந்து விட்டேன் என உணர்ந்தார். பின்பு அவர் உடல் தெளிவு  பெற்ற பிறகு இரண்டு நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுத்தார். அதற்கு பிறகு அந்த இரண்டு நபர்களும்  சிறப்பாக செயல்பட்டு ஒவ்வொரு ஆண்டும் பாஸ்கா கலை நிகழ்ச்சியைச் சிறப்பாக கொண்டாடினர்.

நம்முடைய அன்றாட வாழ்விலும் ஒன்றை நாம் தெரிந்து வைத்திருந்தால் அதை நாம் பிறருக்கு கற்பிக்க அழைக்கப்பட்டுள்ளோம்.   ஆண்டவர் இயேசுவும் இத்தகைய வாழ்வியல் பாடத்தை  தான் நமக்கு சுட்டிக் காட்டியுள்ளார். 30 ஆண்டுகள் தன்னை ஆயத்தப்படுத்தி யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்கு யோவானிடம் ஆண்டவர் இயேசு திருமுழுக்குப் பெற்றார். அதன் பிறகு மூன்று ஆண்டுகள் இறையாட்சி பணியைச் செய்தார். அவர் செய்த இந்த மூன்றாண்டு இறையாட்சிப் பணியில் அவர் வாழ்ந்த சமூகத்தில் எண்ணற்ற மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் கொண்டுவர போதனை செய்தார். வல்ல செயல்கள் வழியாகவும் போதனைகளின் வழியாகவும் மக்களை மனம் மாற்றி நற்செய்தியை நம்பி இறையாட்சி கனவை நினைவாக்க வழிகாட்டினார். அவர்  செய்த பணியை  தனக்குப் பிறகும் செய்திட வேண்டும் என்பதற்காகவே மலைமீது ஏறி தாம் விரும்பியவர்களை அழைத்தார்.

இயேசு தன்னுடைய பணியைத் தொடர்ந்து செய்ய மலை மீது ஏறி தனது சீடர்களை அழைத்தார். மலை  என்பது இறையியல் பின்னணியில் கடவுளின் இறை பிரசன்னம் நிறைந்த இடமாக கருதப்பட்டது. இயேசு தன் தந்தையின்  உடனிருப்பையும் திருவுளத்தையும் செபத்தின் வழியாக அறிந்து தன் பணியைத் தொடர்ந்து செய்ய சீடர்களை அழைத்தார். இந்த செயல்பாடு நமக்கெல்லாம் முன்மாதிரியாக இருக்கின்றது. நம்முடைய வாழ்க்கையில் எத்தனை முன்னெடுப்புகளை எடுத்தாலும் இறை திருவுளத்தை செபத்தின்  வழியாக அறிந்து அதை  நோக்கி பயணிக்கின்ற பொழுது, நம் வாழ்வில் வெற்றியை சுவைக்க முடியும். இயேசு இறை திருவுளத்தை அறிந்து தனது பணியைத் தொடர்ந்து செய்ய தன் சீடர்களை அழைத்ததால் இன்றளவும் மிகப்பெரிய திருஅவையாக   உருவாகியுள்ளது.

இயேசு இந்த உலகில் வாழ்ந்த மற்ற குருக்களை  விட சற்று வேறுபட்டவராக இருக்கின்றார். குறிப்பாக நமது இந்திய மரபுப்படி சீடர்கள் தான் குருவைத் தேடி அறிவையும் ஞானத்தைப் பெற்றுக் கொள்ள செல்வர். ஆனால் குருவாகிய இயேசு தனக்கான சீடர்களைத் தேடி அவரே சென்று தேர்ந்தெடுப்பதை பார்க்கின்றோம். குரு என்பவர் அதிகாரத்தைக் கொண்டு இருப்பவர் அல்ல ; மாறாக, அதிகாரத்தை கற்பிப்பவர் ஆவார்.

இயேசு தன்னுடைய பணியைத் தொடர்ந்து செய்ய 12 சீடர்களை அழைத்து அவர்களுக்கு திருத்தூதர்கள் என்று பெயரிட்டார். இந்த 12 திருத்தூதர்களும் பழைய ஏற்பாட்டிலுள்ள 12 குலங்களைக் குறிக்கின்றனர். பழைய இஸ்ரேயல் எவ்வாறு குலங்களாக இருந்ததோ,  அதேபோல புதிய இஸ்ரேலாகிய திருஅவையும் இறையாட்சியின் பாதையை நோக்கி பயணிக்க இயேசு ஏற்படுத்தினார்.

உண்மையான சீடரின் பண்புநலன்கள் எவை  என்பது பற்றி இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம். "தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும்  பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் இயேசு சீடர்களை அழைத்தார். தம்மோடு இருப்பதென்பது இறைவேண்டலில் நிலைத்திருப்பது. திருமுழுக்கு பற்றி இயேசுவின் சீடர்களாக மாறியுள்ள ஒவ்வொரு கிறிஸ்தவரும் இறைவேண்டலில் நிலைத்து சிறந்த  கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளனர். இயேசுவின் சீடர்கள் இறை வேண்டலில் நிலைத்திருக்கும் பொழுது நாம் கடவுளோடு இணைந்திருக்க முடியும். நாம் கடவுளோடு இணைந்து இருக்கின்ற பொழுது நற்செய்தியின் மதிப்பீட்டிற்கு சான்று பகர முடியும்.

 இயேசுவின் சீடர்கள்  நற்செய்தியைப் பறைசாற்ற அழைக்கப்பட்டுள்ளனர். திருமுழுக்கு பெற்று இயேசுவை அனுபவித்த ஒவ்வொருவரும் அவரைப் பற்றிய நற்செய்தியை நம்முடைய சொல்லாலும் செயலாலும் அறிவித்து இறையாட்சியின் விழுமியங்களை வாழ அழைக்கப்பட்டுள்ளோம். நற்செய்தியைப் பறைசாற்றும் வாழ்வுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு.

இயேசுவின் சீடர்கள் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்க அழைக்கப்பட்டுள்ளனர். இங்கு பேய் என்பது தீய ஆவியை மட்டும் குறிப்பதல்ல ; மாறாக,  சமூகத்திலுள்ள சமூக அநீதிகளையும் குறிக்கின்றது. இயேசுவின் சீடர்கள் சமூக அநீதிகளை கண்டும் அவற்றை பொருட்படுத்தாமல் இருப்பவர்கள் அல்ல ; மாறாக,  சமூக அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள். இன்றைய காலகட்டத்தில் வேளாண் மசோதாவுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நம்மாலான உடனிருப்பை கொடுக்கும் பொழுது, நாம்   இயேசுவின் சீடத்துவ  வாழ்விற்கு சான்று பகிர்கின்றோம்.

இயேசு ஒவ்வொருவரையுமே இறையாட்சிப் பணிக்காக  அழைத்துள்ளார். இயேசு நம்மை அழைப்பது பணம், பட்டம், பதவி போன்ற தகுதியின் அடிப்படையில்  அல்ல; மாறாக, தகுதியற்ற ஏழை  மீனவர்களை அழைத்து தகுதிப்படுத்தினார்.  எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் நம்முடைய தகுதியற்ற தன்மையைக் கண்டு துவண்டுவிடாமல் இயேசுவிடம் நம்மையே முழுவதுமாக ஒப்படைப்போம். அப்பொழுது நம்மை தகுதி உள்ளவர்களாக மாற்றி அவரின் சீடத்துவ வாழ்வுக்கு சான்று பகர நம்மை இறை கருவியாகப் பயன்படுத்துவார்.  அத்தகைய நிலைக்கு செல்ல நாம் தயாரா? சிந்திப்போம்!

இறைவேண்டல் : 
சீடத்துவ வாழ்வுக்கு எங்களை அழைத்த  அன்பு இயேசுவே! நாங்கள் எந்நாளும் உமது சீடர்களாக வாழ்ந்து இறையாட்சி மதிப்பீட்டிற்கு சான்று பகரத் தேவையான ஞானத்தையும் அருளையும் தாரும். ஆமென்.

Add new comment

1 + 0 =