இயேசுவின் ஐந்தாவது இறுதி வார்த்தைகள் - யோவான் 19:28

இயேசு தாகமாய் இருக்கிறது என்றார். இதுவரை அடுத்தவரைப் பற்றி பேசிய இயேசு, இப்பொழுது தன்னைப் பற்றிப் பேச ஆரம்பிக்கின்றார். சிலுவையில் தொங்கவிடப்பட்ட இயேசுவுக்கு நேரம் நகர்ந்துகொண்டே செல்கின்றது. உடல் சோர்ந்து போகிறது, இரத்த நாளங்கள் வெடிக்கின்றன, முள்முடி நெருக்குகின்றது. எல்லாம் நிறைவேறிவிட்டது என்பதை உணர்ந்த இயேசு தாகமாய் இருக்கிறது என்கிறார். 

தொடக்கத்தில் வானத்தையும் பாதாளத்தின் நீரையும் பிரித்த இறைவன், மேசேயிடம் இஸ்ரயேல் மக்கள் முணுமுணுத்து தண்ணீர் கேட்டபோது பாறையை பிளந்து தண்ணீர் கொடுத்த இறைவன். இப்பொழுது தாகமாய் இருக்கின்றது என்கிறார். 

சிக்கார் என்ற இடத்தில் இயேசு அமர்ந்து சமாரியப் பெண்ணிடம் தண்ணீர் கேட்கின்றார். அன்று அவர் தண்ணீர் கேட்டது வாழ்வுதரும் தண்ணீரைக் கொடுப்பதற்காகக் கேட்டார்,  இன்று வாழ்வுதரும் தண்ணீரைக் கொடுத்துக்கொண்டே தாகமாய் இருக்கின்றது என்கிறார். அன்று கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றிய இறைவன், இன்று எதாவது புதுமை செய்து மாற்றியிருக்கலாம். புதுமை செய்யவில்லை. காரணம் அவரின் தாகம் உடல் தாகமல்ல.

உடல் தாகம் என்று நினைத்தவர்கள் ஈசோப்பு தண்டில் காடியைக் குடிக்கக் கொடுத்தார். அவர் குடித்தார். பழைய ஏற்பாட்டில் உடன்படிக்கை செய்து கொள்கின்றபோது ஈசோப்பு தண்டினால் தண்ணீர் அல்லது இரத்தம் தொளிக்கப்படும். இங்கு புதிய ஏற்பாட்டில் இயேசு புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துகின்றார். மனுக்குலம் தருகின்ற இந்த தண்ணீரை ஏற்றுக்கொள்கிறார். 

புதிய உடன்படிக்கையில் இறையாட்சி தாகத்திற்கான வாழ்வுதரும் தண்ணீரைக் கொடுக்கிறார். உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார். உங்களுக்கு நீரினால் ஆவியினால் திருமுழுக்குக் கொடுப்பேன் என்பதை நினைவுப்படுத்துகிறார். அவருடைய திருமுழுக்கையும் நினைவுகூறுகிறார். 

இவருடைய இந்த தாகம் பாவம் போக்க வந்த தாகம். எல்லா மக்களையும் மீட்கும் தாகம். நம்முடைய தாகம் எத்தகையதாக இருக்கின்றது. நம்முடைய உடல், உறவு, ஆன்மீக, உணர்வு தாகங்களை தீர்ப்பதற்கு இயேசுவை நாடிச் செல்;கிறோமா என சிந்திக்க அழைப்பதே இந்த ஐந்தாவது இறுதி வார்த்தை.
 

Add new comment

9 + 5 =