இயேசுவின் உறவினராக விருப்பமா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் 16 ஆம் செவ்வாய் 
I: மீக்:  7: 14-15, 18-20
II: தி.பா: 85: 1-3. 4-5. 6-7
III: மத்: 12: 46-50

இன்றைய நற்செய்தியின் மூலம்  இயேசு நம் அனைவரையும் அவருடைய உறவினர்களாக மாற அழைக்கிறார். தன்னுடைய மூன்றாண்டுகால இறையாட்சி பணியில் இயேசு தன் தாயோடோ அல்லது உறவினர்கள் சகோதர சகோதரிகளோடோ வாழவில்லை. மாறாக தந்தையின் பணியை முன்னிலைப் படுத்தியதால் தன் சொந்த வீடு உறவுகள் அனைவரையும் விட்டு விட்டு மக்கள் அனைவரையும் தன் சொந்தங்களாக்கிக் கொள்ளப் புறப்பட்டார்.

இவ்வேளையில் "விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்று இயேசு கூறிய வார்த்தையின்  பொருளென்ன என்பதை நாம் ஆழமாக புரிந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். இயேசு மக்கள் அனைவரையும் தன் சொந்தங்களாக்க விரும்பினார். அதற்காகத்தான் அவர் தந்தையின் திருவுளத்தை ஏற்று, மீட்பின் நற்செய்தியை அறிவித்தார். நோய்களைக் குணமாக்கினார். பாவிகளை மன்னித்தார். இன்னும் பல நன்மைகளைச் செய்தார். 

ஆனால் மக்களின் பங்கு என்னவாக இருந்தது எனச் சிந்தித்தோமெனில் இயேசுவின் வல்ல செயல்களுக்காக அவரைப் பினதொடர்வதோடு
அவர்கள் நின்றுவிட்டனர். இயேசுவைப் பின்தொடர்வதால் மட்டும் அவருடைய உறவினராக முடியுமா என்ன? அதற்கு செய்ய வேண்டிய காரியம் விண்ணகத் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதே. 

மரியா இயேசுவைக் கருவில் சுமந்து பெற்றதால் மட்டும் அவருடைய தாயாகவில்லை. மாறாக அச்செயலை இறைவிருப்படிச் செய்ததாலேயே அவரின் தாயானார். சீடர்கள் தந்தையின் திருவுளத்தை இயேசுவின் மூலம் உணர்ந்து அவர் வழி சென்றதாலேயே அவரின் சகோதரரானார்கள். 

 நாம் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவர்களாய் இருப்பதாலும் திருவழிபாடுகளில் கலந்து கொள்வதாலும் இயேசுவின் உறவாக இயலாது. மாறாக நம் வாழ்வில் தந்தையின் திருவுளம் என்ன என்பதை அறிந்து அதை செயல்படுத்தினால் மட்டுமே அவரின் உறவுகளாக முடியும். இறைவுளத்தை நாம் அறிய இறைவார்த்தையும் இறைவேண்டலும் அனுபவமுள்ளோரின் வழிநடத்துதலும் நமக்கு துணை நிற்கும். எனவே இயேசுவின் உறவுகளாக மாற தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற முயலுவோம். 

வாழுகின்ற வாழ்க்கையில் இறைவனின் திருளத்தை நிறைவேற்றுவதை மட்டும் நம்முடைய இலக்காகக் கொள்வோம். ஏனெனில் இறைவனின் திருவுளம் நமக்கு புது வாழ்வையும் மீட்பையும் நிறைவையும் தருகிறது. நாம் இயேசுவின் உறவினர்களாக மாற வேண்டும் என்றால் நம்முடைய தந்தையாகிய இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதே நம்முடைய உயிர் மூச்சு என்பதை அறிந்து கொண்டு செயல்படுவோம். அப்பொழுது நிச்சயமாக நம்முடைய அன்றாட வாழ்வில் இயேசுவினுடைய உறவு சொந்தங்களாக மாற முடியும். இயேசுவின் சீடத்துவ வாழ்விற்கு நம்மை முழுமையாக கையளிக்க முடியும். எனவே இறைவனின் திருவுளத்தை நிறைவேற்ற தேவையான அருளை வேண்டுவோம். 

 இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! எங்களுடைய அன்றாட வாழ்வில் உம்முடைய திருவுளத்தை நிறைவேற்றி உமது பிள்ளைகள் என்பதற்கு சான்று பகிர்ந்திட நல்ல மனநிலையை தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

4 + 0 =