இயேசுவின் உயிர்ப்பு -கிறிஸ்தவ நம்பிக்கையின் பிறப்பிடமா! | குழந்தை இயேசு பாபு| Easter Sunday Reflection


பாஸ்கா காலம்-உயிர்ப்பு ஞாயிறு; I: திப: 10:34, 37-43; II தி.பா 118:1-2, 16-17, 22-23; III: கொலோ:3:1-4; IV :யோ: 20: 1-9

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு என்ற தனிமனிதருக்கு நடந்த நிகழ்வாக உயிர்ப்பைக் குறுக்கிவிட முடியாது. இயேசுவின் உயிர்ப்பு சாவின் சக்திகளுக்கு முடிவு. இறையாட்சி என்னும் சகோதரத்துவ, சமத்துவ வாழ்வு மலரும் என்ற நம்பிக்கையின் அடையாளம். நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கை முழுமை பெறுவதற்கு இயேசுவின் உயிர்ப்பு தான் அடிப்படையாக இருக்கின்றது. எனவேதான் திருத்தூதர் பவுல் தன்னுடைய திருமடலில் "கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும், நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் பொருளற்றதாகி விடும் " (1கொரி: 15:14) என்று கூறியுள்ளார். இன்றைய நாளில் இயேசுவின் உயிர்ப்பு நமக்குச் சுட்டிக்காட்டும் வாழ்வியல் பாடங்களைப் பின்வருமாறு தியானிப்போம்.

முதலாவதாக இயேசுவின் உயிர்ப்பைத் தந்தையுடன் ஒன்றுபட்ட நிலையாகக் காண வேண்டும். இயேசு தன் உயிரை தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதற்காக முழுவதுமாகக் கையளித்தார். தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் ' என்று கூறி தன் உயிரைத் தந்தையாம் கடவுளிடம் ஒப்படைத்தார். இது அவருடைய அர்ப்பணத்தைச் சுட்டிக்காட்டுகிறது. தந்தையாம் கடவுளும் தன்னை முற்றிலும் நம்பி  அர்ப்பணம் செய்த தன் மகனை கல்லறையில் அழிய விடவில்லை. மாறாக, உயிர்ப்பின் வழியாக தன் மகன் இயேசுவை தந்தையாம் கடவுள்  மாட்சிப் படுத்தினார்.

 நம்முடைய அன்றாட வாழ்விலும் கடவுளை முழுமையாக நம்பி நம்மை முழுமையாக அர்ப்பணம் செய்யும் பொழுது, கடவுள் ஒருபோதும் நம்மைக் கைவிடமாட்டார். நமக்கு துன்பம் வருகின்ற பொழுது அவற்றைக் கண்டு துவண்டுவிடாமல், கடவுள் தன்னை ஒருபோதும் கைவிடமாட்டார் என்ற ஆழமான நம்பிக்கையோடு இறையாட்சியின் மதிப்பீடுகளை வாழ்வாக்க இன்றைய நாள் நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

இரண்டாவதாக உயிர்த்த ஆண்டவர் இயேசு சிதறுண்ட சீடர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கிறார். இயேசு கைது செய்யப்பட்டு இறந்து அடக்கம் செய்யப்பட்ட பிறகு சீடர்கள் உயிருக்குப் பயந்து சிதறி ஓடினார்கள். அழைப்புக்கு முன் செய்த மீன் பிடிக்கும் பணியினைச் செய்யத் தொடங்கினர். அவர்களின் பழைய இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார்கள். இப்படிப்பட்ட சூழலில் இயேசு உயிர்ப்பின் வழியாக அவர்களின்  நம்பிக்கையை மீண்டுமாக உறுதிப்படுத்தினார். உயிர்த்த ஆண்டவர் இயேசுவைக் கண்டு நம்பிய பொழுது, சீடர்கள் வல்லமையோடு இறையாட்சி மதிப்பீடுகளை நற்செய்தியாக அறிவித்தார்கள். அதன் வழியாக இயேசுவின் விழுமியங்களை மக்களுக்கு அறிவித்து, திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவ நம்பிக்கையில் இணைய வழிகாட்டினார்கள். அவர்கள் திடப்படுத்திய நம்பிக்கையாளர்களின் கூட்டமே இன்றளவும் இருக்கும் திருஅவையாகும்.

நம்முடைய அன்றாட வாழ்விலும் உயிர்த்த ஆண்டவர் இயேசு நம்முடைய நம்பிக்கை வாழ்வைத் தூண்டி எழுப்புகிறார்.  ஒவ்வொரு ஆண்டும் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவை கொண்டாடுகிறோம். அந்த விழாவை கொண்டாடும் பொழுது இயேசுவோடு கூடிய நம்பிக்கையில் நிலைத்திருக்க அழைக்கப்பட்டுள்ளோம். அதற்கு நம்மையே இயேசுவிடம் முழுமையாக ஒப்படைத்து  நம்பிக்கை கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக இயேசுவின் உயிர்ப்பு அன்புக்காய், நீதிக்காய், உண்மைக்காய் உழைக்கின்றவர்களை கடவுள் ஒருபோதும் மறக்க மாட்டார் என்ற ஆழமானச் சிந்தனையை வழங்குகின்றது. இயேசுவின் இறையாட்சி பணியானது இம்மண்ணுலகத்தில் அன்பு, நீதி, உண்மை போன்ற மதிப்பீடுகள் உயிர் பெற்று எழ அடிப்படையாக இருந்தது. இப்படிப்பட்ட மதிப்பீடுகள் சுயநலவாதிகளாக வாழ்ந்த பரிசேயர்கள், சதுசேயர்கள், மறைநூல் அறிஞர்கள்,மற்றும் ஆளும் ஆட்சியாளர்கள்  போன்றவர்களால் முடக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் வெளிப்பாடு தான் அவர்கள் இயேசுவைக் கொலை செய்தது. ஆனால் இறையாட்சி மதிப்பீட்டிற்காகத் தன் உயிரையே கொடுப்பவர்களை ஒருபோதும் கடவுள் கைவிடமாட்டார் என்ற ஆழமான உண்மையை இயேசுவின் உயிர்ப்பு சுட்டிக்காட்டுகிறது.

எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் இறையாட்சியின் மதிப்பீடுகளான உண்மை, அன்பு, நீதி, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் போன்ற மதிப்பீடுகளுக்கு சான்று பகரும் பொழுது, நாம் பல்வேறு துன்பங்களைச் சந்திக்க நேரிடும் ;உயிரைக் கூட இழக்க நேரிடும். ஆனால் கடவுள் நம்மை கைவிடமாட்டார். இந்த உலகம் சார்ந்த மக்கள் நம் உடலை மட்டும் தான் கொல்ல முடியும். ஆனால் நாம் விதைக்கின்ற இறையாட்சி மதிப்பீடுகளை ஒருபோதும் அழிக்க முடியாது. எனவே இயேசுவின் இறப்பும் உயிர்ப்பும் உண்மைக்கான தேடலாகும்.அவை நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கையை ஆழப்படுத்துகின்றது.

இயேசு உண்மையிலேயே உயிர்த்தாரா? என்ற கேள்வியானது பலரால் முன்வைக்கப்பட்டது. ஆனால் இயேசு உண்மையிலேயே உயிர்த்தார் என்பதற்கு நான்கு நற்செய்தியாளர்களுமே சான்று பகர்ந்து உள்ளனர். காலியான கல்லறை, இயேசுவின் தோற்றம், சீடர்களின் அனுபவம் போன்றவை இயேசுவின் உயிர்ப்புக்கு சான்றாகும்.

இயேசுவின் உயிர்ப்பு நமக்குத் தரும் முக்கியமான செய்தி இறப்பு என்பது ஒரு முடிவல்ல. இலட்சிய போராளிகள் ஒவ்வொருநாளும் மக்கள் மத்தியில் உயிர்த்து கொண்டிருக்கிறார்கள். இறந்து கொண்டிருக்கும்   மதிப்பீடுகளும் கொள்கைகளும் ஒவ்வொரு நாளும் உயிர்த்தெழ நாம் உழைக்க வேண்டும் என்ற ஆழமானச் சிந்தனையை உயிர்ப்பு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.  அன்பு, உண்மை, நீதிக்கு என்றுமே சாவு இல்லை என்ற ஆழமான சிந்தனையை கொடுப்பதாக இருக்கின்றது. உயிர்ப்பால் இன்றும் இயேசு நம்மோடு இருந்து உறவாடுகின்றார். எனவே நாமும் இந்த உயிர்ப்பு பெருவிழாவில் இயேசு கண்ட இறையாட்சி மதிப்பீடுகளை ஒவ்வொரு நாளும் உயிர்த்தெழச்  செய்வோம். அப்பொழுது நம்முடைய கிறிஸ்தவ வாழ்வானது இயேசுவுக்குச் சான்று பகரும் நம்பிக்கை வாழ்வாக மாறும். நாம் இயேசுவை முழுமையாக நம்பி அனுபவித்து அதைப் பிறருக்கு அறிவிக்கும் கருவிகளாக மாற இந்த உயிர்ப்பு பெருவிழா நம்மை சிறப்பான விதத்தில் அழைக்கின்றது. எனவே நம்மையே முழுமையாக உயிர்த்த ஆண்டவரிடம்  ஒப்படைத்து நம்பிக்கையோடு சான்று பகரக் கூடிய கிறிஸ்தவ வாழ்வு வாழத் தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் : 
உயிர்த்த இயேசுவே! எங்களுடைய அன்றாட வாழ்வில் உம்முடைய இறையாட்சி மதிப்பீடுகளுக்குச் சான்று பகர்ந்து நம்பிக்கையுள்ள கிறிஸ்தவ வாழ்வு வாழ்ந்திடத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.

Add new comment

6 + 3 =