இயேசுவின் உடனிருப்பை உணர தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் 13ஆம் செவ்வாய்
I: ஆமோ:  3: 1-8; 4: 11-12
II: திபா 5: 4-5. 6. 7
III: மத்: 8: 23-27

மனித வாழ்க்கையில் உடனிருப்பு என்பது மிகவும் அவசியம். ஒரு குழந்தை தன் தாய் தந்தையுடன் உடனிருக்க வேண்டும். கணவன் மனைவியுடன் உடனிருக்க வேண்டும். மனைவி கணவருடன் உடனிருக்க வேண்டும். மனிதர் மற்ற மனிதர்களோடு உடனிருக்க வேண்டும். உயிரினங்கள் இந்த உலகத்தோடு உடனிருக்க வேண்டும். அதேபோல மனித வாழ்வு ஆசிர்வாதமாக மாறி இறையருளை பெற்றிட இறைவனோடு உடனிருக்க வேண்டும்.

தங்கச்சி மடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது ஒரு வயதான பாட்டியின் வீட்டை சந்தித்தேன். அந்த பாட்டியின் கண்களில் மகிழ்ச்சியை கண்டேன். அவருக்கு மொத்தம் நான்கு மகன்கள். ஆனால் அனைவருமே தனியாக சென்று தங்கள் குடும்ப வாழ்வு அமைத்துக் கொண்டார்கள். கடைசி காலத்தில் தன் தாய்க்கு கூட உணவு வழங்க ஆளில்லை. இருந்தபோதிலும் அந்தத்தாய் தன் மகன்களுக்காக செபித்து கொண்டிருந்தார்‌. "எவ்வாறு இவ்வளவு தைரியமாக உங்களால் இருக்க முடிகிறது?" என்று கேட்டதற்கு, அவர்" ஆண்டவர் இயேசு என்னோடு எப்போதும் இருப்பதை உணர்கிறேன். எனவே தான் என்னுடைய படுக்கையின் அருகில் ஒரு நாற்காலியை போட்டு இருக்கிறேன். இந்த நாற்காலி ஆண்டவர் இயேசுவுக்காக போடப்பட்ட நாற்காலி" என்று கூறினார். அவரின் நம்பிக்கை உண்டு என் மனம் சற்று மகிழ்ச்சி அடைந்தது.
 
நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும்  மனித வாழ்வு ஆசிர்வாதமாக மாறி இறையருளை பெற்றிட இறைவனோடு உடனிருப்பை நம்முடைய செபத்தின் வழியாகவும் நம்பிக்கையின் வழியாகவும் உணரும் பொழுது வாழ்வில் ஆசிர்வாதத்தை காணமுடியும். இதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு காற்றையும் கடலையும் அடக்கும் நிகழ்வை வாசிக்கிறோம். சீடர்களோடு இயேசு பயணித்த போதும் சீடர்கள் இயேசுவின் மீது நம்பிக்கை குறைந்தவர்களாக அவரை எழுப்பினர்.  அதற்கு  "இயேசு அவர்களை நோக்கி, ``நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?'' என்று கேட்டு, எழுந்து காற்றையும் கடலையும் கடிந்து கொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று. நம்முடைய வாழ்க்கையில் துன்பங்கள் துயரங்கள் வருகின்ற பொழுது, நாம் அஞ்சத் தேவையில்லை. இறைவனின் உடனிருப்பபை முழுமையாக உணர வேண்டும். அப்பொழுது யார் நம்மை கைவிட்டாலும் ஆண்டவர் இயேசு நம்மை கைவிடமாட்டார். ஆண்டவர் இயேசுவின் உடனிருப்பை உணர்ந்து, இறைவனின் அருளைப் பெறுவோம்.

 இறைவேண்டல் 
வல்லமையுடன் இறைவா! எந்நாளும் உமது உடனிருப்பை உணர்ந்து, இறையருளைப் பெற்றிட வரம் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

3 + 4 =