இடியின் மக்கள்| அருட்தந்தை அருண்


இன்றைய வாசகங்கள் (25.07.2020) - பொதுக்காலத்தின் 16ஆம் சனி-I. 2 கொரி 4:7-15;II.மத். 20:20-28

புனித சந்தியாகப்பர் திருவிழா

இயேசுவில் அன்புக்குரியவர்களே!

அன்னையாம்  திருஅவையானது,  இன்றைய நாளில் மாபெரும் புனிதர், அப்போஸ்தலர், மறைசாட்சியர் என்ற புகழுக்குரியவரான  புனித  சந்தியாகப்பரின்  திருவிழாவினைக் கொண்டாடி மகிழ்ந்திட அழைக்கின்றது.

புனித தோமையாரைப் போன்று, இன்றைய புனித சந்தியாகப்பர் கடல் கடந்து இறைவனின்  நற்செய்திப் பணியை திறம்பட செய்து மறைசாட்சியாக உயிர் நீத்தவர். புனித சந்தியாகப்பர் ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று ஏராளமான மக்களுக்கு கிறிஸ்துவைப் பற்றியும், அவரின் நற்செய்தியை பற்றியும் போதித்தார்.

புனித சந்தியாகப்பருக்கு தனிச்சிறப்பு உண்டு. திருவிவிலியத்தில் மற்ற  அப்போஸ்தலர்களைக்  காட்டிலும் இவருக்கு அதிகபடியான ஆதாரங்களை கொண்டுள்ளார். புனித அப்போஸ்தலர், யோவானின் சகோதரர் என்றும், சந்தியாகப்பர் மற்றும் யோவானை “இடியின் மக்கள்” என்றும், இவர்களது தந்தை  செபதேயு தாய் சலோமி  என்றும், இவர்கள் மீன்பிடித் தொழில் செய்ததாகவும், வசதி படைத்த குடும்பத்தினர் ஆவர் என்றும் கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு பணிவிடை செய்ய பணியாளர்கள் இருந்தார்கள் என்றும், குறிப்பாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நெருங்கிய உறவினர்கள் என்றும் ஆதாரங்கள் இருக்கின்றன. புனித சந்தியாகப்பர் அவர்கள் இரண்டாவது மறைசாட்சியாக தனது உயிரை நீத்தார்.

புனித சந்தியாகப்பரின் திருவிழாவினை ஸ்பெயின் நாட்டில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஸ்பெயின் நாட்டில் உள்ள கலிசியா(Galicia) மாகாணத்தில்,( Santiago de Compostela) சந்தியாகோ தே கம்போஸ்டாலா என்ற இடத்தில் மாபெரும் திருத்தலம் சந்தியாகப்பருக்காக   அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு நமது “அன்னை வேளாங்கண்ணி மாதா”திருத்தலத்திற்கு மரியாவின் பக்தர்கள் நடைபயணம் மேற்கொள்வார்களோ அதைப்போல பல்வேறு நாடுகளிலிருந்து குறிப்பிட்ட தூரம் வாகனங்களில் வந்தப் பிறகு(400-800km), இந்த சந்தியாகோ தே கம்போஸ்டாலாவிற்கு நடந்துசென்று சந்தியாகப்பருக்கு வணக்கம் செலுத்துவார்கள். குறிப்பாக   போர்ச்சுகல்,  பிரான்ஸ், பிரேசில், இத்தாலி, அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் இருந்து பக்தர்கள் இவரை மகிமைப்படுத்துவார்கள். இவ்வாறு இன்றைய புனிதரை பேசிக்கொண்டே இருக்கலாம்.

இன்றைய நற்செய்தியின் உரையாடலில் இயேசு, அவர்களிடம் (சந்தியாகப்பர்,  யோவான்)  “நான் குடிக்கும் கிண்ணத்தில் உங்களால் பருக இயலுமா?” என்ற கேள்வி எழுப்புவார். இதன் உள்ளார்ந்த கருத்து என்ன என்று சற்று யோசித்தால், பிற்காலத்தில் இயேசுவிற்காக இறக்க நற்செய்தியை பறைசாற்றும் போது ஏற்படக் கூடிய எல்லா விதமான சவால்களையும், துன்பங்களையும், துயரங்களையும் ஏன் இறப்பதற்கும் உங்களால் இயலுமா? என்பதற்கு விடையாக புனித சந்தியாகப்பர் மறை சாட்சியாக உயிர் நீத்தார். ஆகவே அன்பார்ந்தவர்களே, இன்று நாம் கொண்டாடும் புனித சந்தியாகப்பரைப் போன்று துணிவுடன் நற்செய்தியை வாழ்ந்தும், பறைசாற்றவும் அருள்வேண்டி தொடர்ந்து, இறைவனிடம் மன்றாடுவோம். ஆமென்.

அருட்தந்தை அருண் sdc.

ஸ்பெயின்..

 

Image Credits: whatsapp

 

 

Add new comment

2 + 3 =