ஆறுவகை நிலங்கள்னா இது தானா | பேராசிரியர் யேசு கருணா


15 sunday ordinary time

12 ஜூலை 2020 ஆண்டின் பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு|I. எசாயா 55:10-11 II. உரோமையர் 8:18-23 III. மத்தேயு 13:1-23

'விதைப்பவர் எடுத்துக்காட்டை' வாசிக்கும்போதெல்லாம், 'மனசே! ரிலாக்ஸ் ப்ளீஸ்' நூலில் இருக்கும் கதை ஒன்று நினைவிற்கு வரும். விவசாயி ஒருவர் இருந்தார். அவருக்குத் தக்காளித் தோட்டம் ஒன்று இருந்தது. சில தக்காளிப் பழங்கள் நன்றாகவும், சில பழங்கள் பூச்சி விழுந்தும் அல்லது வெடித்தும் இருந்தன. பூச்சி விழுந்த, வெடித்த, செடியிலே அழுகிய பழங்களைத் தூக்கி எறிய விரும்பாத அந்த விவசாயி, அவற்றைப் பன்றிகளுக்கு இடலாமே என நினைத்து, தன் தோட்டத்திலேயே சிறிய பன்றிக்கூடம் ஒன்றையும் வைத்தார். ஒரு முறை அவருடைய தக்காளித் தோட்டத்தில் நல்ல விளைச்சல். பக்கத்துத் தோட்டத்துக்காரர்கள் எல்லாம் இவரைக் கொஞ்சம் பொறாமையுடன் பார்த்தனர். 'உன் தோட்டத்தில் இந்த ஆண்டு தக்காளி விளைச்சல் நிறையவும், நன்றாகவும் இருக்கிறது' என்று அவரைப் பாராட்டினர். ஆனால், அந்த விவசாயியோ, 'ஐயோ! இந்த முறை நான் பன்றிகளுக்கு எதைப் போடுவேன்?' என்று நினைத்து அழத் தொடங்கினார்.

விதைப்பவர் எடுத்துக்காட்டைக் கேட்கின்ற எவருக்கும் ஒரு கேள்வி வரும்:

'எல்லா நிலங்களுமே பயன்தர வேண்டுமா என்ன?'

'எல்லாத் தக்காளிகளுமே நன்றாக இருக்க வேண்டுமா என்ன?'

'உடைந்த, அழுகிய, பூச்சி விழுந்த தக்காளிகளுக்கும் பயன் இருக்கத்தானே செய்கிறது. இல்லையா?'

ஃப்யோடோர் டாஸ்டாவ்ஸ்கி என்னும் ரஷ்ய நாவலாசிரியரின் சிறந்த புதினங்களில் ஒன்று, 'க்ரைம் அன்ட் பனிஷ்மெண்ட்' ('குற்றமும் தண்டனையும்'). ரஸ்கோல்நிகோவ் என்ற ஒரு இளவல்தான் இப்புதினத்தின் முதன்மைக் கதைமாந்தர். இந்த உலகத்தில் உள்ளவர்களை 'சாதாரணமானவர்கள்,' 'அசாதாரணமானவர்கள்' என இரண்டாகப் பிரிக்கலாம் என்று சொல்கின்ற அவன், 'சாதாரணமானவர்களுக்குத்தான்' சட்டங்கள் இருக்கின்றன என்றும், 'அசாதாரணமானவர்கள்' சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதில்லை, மாறாக, சட்டங்களே அவர்களுக்குக் கீழ்ப்படிகின்றன என்று, தன்னுடைய சமகாலத்து சமூகத்தின் அவலநிலையை எடுத்துச் சொல்கின்றான். 'சாதாரணமான' இவன், தானும் 'அசாதாரணமானவன்' என்று தனக்கும் மற்றவர்களுக்கும் காட்டுவதற்காக இரட்டைக்கொலை செய்கிறான். அந்தக் கொலைதான் அவன் செய்த குற்றம். அந்தக் கொலைக்குத் தண்டனை கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்பதுதான் கதையின் வேகம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 13:1-23), நாம் 'சாதாரணமான' மற்றும் 'அசாதாரணமான' மனிதர்களைச் சந்திக்கின்றோம். இவர்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிதலின் அடிப்படையில் அல்ல, மாறாக, இறைவார்த்தைக்குச் செவிமடுத்தலின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றனர்.

இன்றைய நற்செய்தி வாசகம் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது: (அ) விதைப்பவர் உவமை, (ஆ) உவமைகளின் நோக்கம், மற்றும் (இ) விதைப்பவர் உவமைக்கு இயேசு கொடுக்கும் விளக்கம். 'விதைப்பவர் உவமை' என்று இந்த எடுத்துக்காட்டு அறியப்பட்டாலும், இந்த எடுத்துக்காட்டு விதைகளைப் பற்றியது அல்ல. மாறாக, நிலங்களை அல்லது விதைகளை வாங்கும் தளங்களைப் பொருத்ததாக இருக்கிறது. ஆக, 'நிலங்களின் எடுத்துக்காட்டு' என்று சொல்வதே தகும்.

மேலோட்டமான வாசிப்பில் நான்கு வகை நிலங்கள் இருப்பதுபோலத் தெரிந்தாலும், மொத்தத்தில் ஆறுவகை நிலங்கள் இருக்கின்றன. முதல் மூன்று வகை நிலங்கள் சாதாரண நிலங்கள். இரண்டாவது மூன்று வகை நிலங்கள் அசாதாரணமானவை. முதல் வகை நிலங்கள் பலன் தரவில்லை - விதைப்பவருக்குத் தரவில்லை. ஆனால், அவற்றால் மற்ற பயன்கள் இருக்கவே செய்கின்றன. இரண்டாம் வகை நிலங்கள் பலன் தருகின்றன. ஆனால், இங்கே நிலங்கள் ஒன்றாக இருந்தாலும் பலன்கள், முப்பது, அறுபது, நூறு என வேறுபடுகின்றன.

ஆறுவகை நிலங்கள் எவை? (1) வழி என்னும் நிலம், (2) பாறை என்னும் நிலம், (3) முட்செடிகள் நிறைந்த நிலம், (4) முப்பது மடங்கு பலன்தரும் நிலம், (5) அறுபது மடங்கு பலன்தரும் நிலம், மற்றும் (6) நூறு மடங்கு பலன்தரும் நிலம்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 55:10-11), பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக் கிடந்த இஸ்ரயேல் மக்களுக்கு நாடுதிரும்பும் நம்பிக்கையின் செய்தியைத் தருகின்றார் ஆண்டவராகிய கடவுள். கடவுளுடைய வார்த்தையை எப்படி நம்புவது என்று மக்கள் தயக்கம் காட்டிய நேரத்தில் ஆண்டவர் அவர்களுக்கு தரும் உறுதி இதுதான்: 'மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன ... என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் அவ்வாறே இருக்கும்.' ஆக, எப்படி மழையும் பனியும் தாம் இறங்கி வந்த நோக்கத்தை நிறைவேற்றாமல் மேலே செல்லாதோ, அவ்வாறே ஆண்டவராகிய கடவுளும் தன் வார்த்தைகள் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றாமல் தன்னிடம் திரும்பாது என்கிறார். 

நற்செய்தி வாசகத்தில், இயேசுவும், இந்த எடுத்துக்காட்டைப் பயன்படுத்தி, இறைவார்த்தையை ஏற்றுப் பயன்தருதல் அல்லது பலன்தருதல் குறித்து விளக்குகின்றார்.

இரண்டு வாசகங்களையும் இணைத்தால், ஆண்டவரின் வார்த்தை நம்மிடம் விதைபோல இறங்கி வருகிறது. நாம் எப்படிப்பட்ட நிலமாக இருக்கிறோமோ, அப்படிப்பட்டதாக நாம் தரும் பயன் அல்லது பலன் இருக்கிறது.

நற்செய்தி நூல்களில் நாம் சந்திக்கும் சில கதைமாந்தர்களின் பின்புலத்தில் மேற்காணும் ஆறு நிலங்களைப் புரிந்துகொள்வோம்:

1. வழி என்னும் நிலம் - பெரிய ஏரோது

'பெரிய ஏரோது' (Herod the Great) என்னும் கதைமாந்தரை நாம் மத் 2:1-12இல் சந்திக்கிறோம். 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' என்று கேட்டு அவரைத் தேடி வருகின்ற ஞானியர் வழியாக, 'மீட்பரின் பிறப்பு' என்னும் விதை அவருடைய உள்ளத்தில் விதைக்கப்படுகிறது. ஆனால், கொஞ்ச நேரத்தில், அந்த விதையானது, 'பொறாமை,' 'பகைமை,' 'பழிதீர்த்தல்,' 'வன்மம்' என்னும் வானத்துப் பறவையால் விழுங்கப்படுகிறது. 

என் உள்ளத்திலும் இறைவார்த்தை வந்து விழலாம். ஆனால், என்னைச் சுற்றி வரும் மேற்காணும் பறவைகளால் அது விழுங்கப்படலாம்.

2. பாறை என்னும் நிலம் - ஏரோது அந்திப்பாஸ்

'சிறிய ஏரோது' அல்லது 'ஏரோது அந்திப்பாஸ்' (Herod Antipas) என்னும் கதைமாந்தரை நாம் மாற் 6:14-29இல் காண்கிறோம். திருமுழுக்கு யோவான் இவருடைய உள்ளத்தில் இறைவார்த்தையை விதைக்கின்றார். 'உன் சகோதரன் மனைவியை வைத்திருப்பது முறையல்ல!' என்கிறார். யோவானின் வார்த்தைகளைக் கேட்கின்ற ஏரோது, 'மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்க்கின்றார்.' ஆக, இறைவார்த்தையைக் கேட்டு வேகமாகவும், மகிழ்ச்சியோடும் ஏற்றுக்கொள்கின்றார். ஆனால், அவரில் வேர் இல்லை. கொஞ்சம் மது உள்ளே சென்றவுடன், தன்னுடைய மாதுவின் வஞ்சக வலையில் விழுந்து, இறைவார்த்தையைச் சொன்னவரையே கொன்றழித்துவிடுகிறார்.

என் உள்ளம் பாறையாக இருக்கும்போது, எனக்கு முதலில் ஆர்வமாக இருக்கும். ஆனால், பாறையின் வெப்பம் விதையை அல்லது விதையின் வளர்தலைச் சுட்டெரித்துவிடும். 

3. முட்செடிகள் நிறைந்த நிலம் - யூதாசு இஸ்காரியோத்து

இவரை நாம் நான்கு நற்செய்தி நூல்களில் காண்கிறோம். இயேசுவின் திருத்தூதர்களில் ஒருவர். இயேசு அன்பு செய்த சீடர் என யோவான் அழைப்பது இவரைத்தான் எனச் சிலர் சொல்கின்றனர். நிதி மேலாண்மையில் சிறந்தவர். இறையாட்சி இயக்கத்தின் பணப்பை இவரிடம்தான் இருந்தது. இயேசுவின் வார்த்தைகளை உடனிருந்து கேட்டவர் இவர். ஆனால், அவை கனி கொடுக்கா வண்ணம், உலகக் கவலை (உரோமை ஆட்சி எப்போது முடியும் என்னும் கவலை) மற்றும் செல்வ மயை (முப்பது வெள்ளிக்காசுகள்) அவரை நெருக்கிவிட்டதால், இறைவார்த்தையை அறிவித்தவரையே விலைபேசத் துணிகின்றார். யூதாசைப் பொருத்தவரையில், அவருக்கு எல்லாப் பொருள்களின் விலை தெரியும், ஆனால் அவற்றின் மதிப்பு தெரியாது. இயேசுவுக்கும் விலை நிர்ணயம் செய்தவர்.

இன்று என்னை நெருக்கும் முட்செடிகள் எவை? அகுஸ்தினார் தன் வாழ்வில் தன்னை நெருக்கிய முட்செடிகளாக, தன்னுடைய ஆணவம், உடலின்பம், மற்றும் பேரார்வம் என்னும் மூன்றைக் குறிப்பிடுகின்றார். 

4. முப்பது மடங்கு பலன்தரும் நிலம் - இயேசுவிடம் வந்த இளவல்

இயேசுவைப் பின்பற்ற விரும்பி அவரிடம் வந்த செல்வந்தரான இளவல் என்னும் கதைமாந்தரை நாம் மாற் 10:17-31இல் பார்க்கிறோம். 'நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?' என்ற கேள்வியுடன் இயேசுவிடம் வருகின்றார். 'கட்டளைகளைக் கடைப்பிடி!' என்று இயேசு சொன்னவுடன், 'இளமையிலிருந்தே கடைப்பிடிக்கிறேன்' என்கிறார். 'இன்னும் ஒன்று குறைவுபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும்' என்று இயேசு சொன்னவுடன், இளவல் முகவாட்டத்துடன் இல்லம் திரும்புகிறார். பாதி வழி வந்த அவருக்கு மீதி வழி வர இயலவில்லை. 'கட்டளைகளைக் கடைப்பிடித்தல்' என்னும் முப்பது மடங்குதான் அவரால் பலன்தர முடிந்தது. அவர் நல்ல நிலம்தான். எந்தத் தவறும் செய்யாதவர்தான். ஆனால், ஊட்டச்சத்து அந்த நிலத்தில் குறைவுபட்டது.

இயேசுவைப் பின்பற்றுவதில் நான் பாதி வழியாவது வந்துள்ளேனா? பாதி வழி வந்துவிட்டால், மீதி வழி நடக்கத் தயாரா? என் முகத்தை இயேசுவை நோக்கி எழுப்புகிறேனா? அல்லது முகவாட்டம் கொண்டு தாழ்த்துகிறேனா? முகவாட்டம் குறைய நிலத்திற்கு ஊட்டம் அவசியம்.

5. அறுபது மடங்கு பலன்தரும் நிலம் - இயேசுவின் பணிக்காலத்தில் திருத்தூதர்கள்

திருத்தூதர்கள் என்னும் எடுத்துக்காட்டை நாம் கவனமுடன் கையாள வேண்டும். இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் அவர்கள் நற்செய்தியின் பொருட்டும், இயேசுவின் பொருட்டும் இன்னுயிரை ஈந்தவர்கள். அவர்களால்தான் நாம் இன்று இயேசுவின் சீடர்களாக இருக்கிறோம். அவர்கள் நூறு மடங்கு பலன் தந்தவர்கள்தாம். ஆனால், இயேசுவின் பணிக்காலத்தில் அவர்கள் இயேசுவைப் புரிந்துகொள்ளவில்லை, தவறாகப் புரிந்துகொண்டனர், மற்றும் அவரை மறுதலிக்கவும் செய்தனர். இவர்கள் அறுபது மடங்குதான் பயன்தந்தனர். 'நீரே மெசியா! நீரே இறைமகன்!' என அறிக்கையிட்டனர். ஆனால், புயலைக் கண்டு பயந்தனர், சிலுவை வேண்டாம் என்றனர், அப்பம் எப்படிப் போதும் எனக் கணக்குப் போட்டனர். இறைவார்த்தையை இயேசுவின் வாய்மொழியாக அன்றாடம் கேட்டாலும், அவர்களால் உடனடியாக முழுமையான பயன் தரமுடியவில்லை. இயேசுவால் அனுப்பப்பட்டு பணிகள் நிறையச் செய்தனர். அவர்களின் பணி அறுபது மடங்குதான் பலன் தந்தது.

என்னால் ஏன் இயேசுவை முழுமையாக நம்ப முடியவில்லை? ஏன் என் நம்பிக்கை தளர்கிறது? அல்லது நம்பிக்கையில் தயக்கம் இருப்பது ஏன்?

6. நூறு மடங்கு பலன்தரும் நிலம் - மரியாள், யோசேப்பு, சிமியோன், அன்னா, சக்கேயு, நறுமணத் தையல்

இறைவார்த்தையைக் கேட்டு, மனத்தில் இருத்தி, கனவுகளில் வழிநடத்தப்பட்டு, ஆவியாரால் உந்தப்பட்டு, தன் வாழ்வையே இறைவேண்டலில் கழித்து, தன்னிடம் உள்ளதில் பாதியையும், ஏமாற்றியதை நான்கு மடங்காகவும், திருப்பி அளித்து, விலையுயர்ந்த நறுமணத் தைலக் குப்பியை அப்படியே உடைத்து, என பல்வேறு நிலைகளில் நூறு மடங்கு பலன்தந்தனர் மரியாள், யோசேப்பு, சிமியோன், அன்னா, சக்கேயு, நறுமணப் பெண் (தைலம்) ஆகியோர். தன்னிடம் உள்ளதை முழுவதுமாக இழந்து, தாங்கள் விதையாக, விதை தாங்களாக என இவர்கள் உருமாறினர்.

என்னால் மேற்காணும் உருமாற்றம் அடைய முடிகிறதா? இறைவார்த்தை என்னுள் மடிந்து என் உயிரில் கலக்கவும், என் உயிர் மடிந்து இறைவார்த்தையில் கலக்கவும் செய்கிறதா?

இறுதியாக,

நீங்களும் நானுமே மேற்காணும் ஆறுவகை நிலங்கள். பலன்தருகின்ற நிலன்கள் பலன் தர இயலாத நிலங்களைக் குறித்து எந்தத் தீர்ப்பும் எழுதக் கூடாது. நம் ஒவ்வொருவரின் சூழல், வளர்ப்பு, விழுமியங்கள், மதிப்பீடுகள் ஆகியவற்றைப் பொருத்து நம் நிலம் அமைகிறது. ஒருவர் பலன் தருவதால் அவர் மேன்மையானவர் எனக் கொண்டாடவோ, பலன் தராததால் தீயவர் என்றோ முத்திரையிடத் தேவையில்லை. இயேசுவும் அப்படி எந்த முத்திரையும் இடவில்லை. நம்முடைய இருத்தலில் பயன் தந்து, அந்தப் பயனால் நாமும் மற்றவர்களும் கொஞ்சம் வளர்ந்தால் அதுவே போதும். இந்த உவமை நமக்கு நிறைய பரிவையும், தாழ்ச்சியையும், தாராள உள்ளத்தையும் கற்றுக்கொடுக்கிறது. 

எல்லாக் கதைமாந்தர்களும் இணைந்தால்தான் நற்செய்தி. எல்லாத் தக்காளிகளும் இணைந்தால்தான் தோட்டம். எல்லா மனிதர்களும் இணைந்தால்தான் சமூகம். எல்லா நிலங்களும் இணைந்தால்தான் பூமி. 

நாம் பேசும்போது, நம் வாயின்மேல் விரலை வைத்துக்கொண்டு பேசினால் நாம் என்ன உணர்கிறோம்? செய்து பாருங்கள்! வார்த்தைகளோடு இணைந்து நம் சூடான மூச்சும் வெளியே வருகிறது. இல்லையா? கடவுளின் வார்த்தையும் அப்படித்தான். அவர் பேசும்போது அவரின் மூச்சும் நம்மேல் படுகிறது.

அவரின் மூச்சு நம்மேல் படுவது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம், இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 8:18-23), ஒட்டுமொத்தப் படைப்பும் நாமும் பெருமூச்சு விடுவதாகப் பவுல் பதிவு செய்கிறார். இரு மூச்சுக்களும் இணைதல் கொரோனா காலத்தில் ஆபத்தாக இருக்கலாம். ஆனால், இறைமூச்சும் நம் பெருமூச்சும் இணைதல் நம் வாழ்வை மாற்றும். ஏனெனில், அவரே, 'ஆண்டு முழுவதும் தமது நலத்தால் நமக்கு முடிசூட்டுகின்றார்' (காண். பதிலுரைப்பாடல், திபா 65:11).

அருள்பணியாளர் யேசு கருணா

பேராசிரியர், புனித பவுல் குருமடம், திருச்சி

Add new comment

12 + 0 =