அன்பில் நிறைவுள்ளவர்களாவோம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் பதினொன்றாம் செவ்வாய்
I: 1 அர 21: 17-29
II: திபா 51: 1-2. 3-4ab. 9,14
III: மத்: 5: 43-48

அன்பு - இதைப்பற்றி பேசினால் எவ்வளவு நேரமென்றாலும் எத்தனை நீளமென்றாலும் பேசிக்கொண்டே போகலாம். அன்பின் பல பரிமாணங்களைப் பற்றி பக்கம் பக்கமாகப் புத்தகங்கள் எழுதலாம். ஆனால் அதை ஒரு சதவீதம் வாழ முயற்சித்தோமெனில் வாழ்வில் நிறைவை  நாம் எப்போதோ கண்டிருப்போம். ஆனால் நாமோ எல்லாவற்றிலும் குறையுள்ளவர்களாகவும் குறைகாண்பவர்களாகவும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கிறோம். இதற்குக் காரணம் என்ன? அன்பு இன்மையே ....ஏனெனில் குறையுள்ள அன்புக்குப் பெயர் அன்பில்லை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் அன்பில் நாம் எவ்வாறு நிறைவுள்ளவர்களாக வாழ வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை இயேசு நமக்குக் கற்று தருகிறார்.
இவ்வழிகள் அனைத்தும் நாம் நலமோடும் நிறைவோடும் வாழ்வதற்கே.

**பகைவரையும் அன்பு செய்யுங்கள் என்கிறார் இயேசு. பகைவரை நாம் அன்பு செய்யத் தொடங்கினால் நமக்கு பகைவர் என்று யாருமே இருக்கப்போவதில்லை அல்லவா. பகைமை இல்லாவிடில் நம் உடலும் மனமும் அமைதிபெறும். யாராவது நமக்குத் தீங்கு செய்வார்களோ எனும் பயமிருக்காது.

**துன்புறுத்துபவர்களுக்காக செபிக்கச் சொல்கிறார். நாம் பிறருக்காக செய்யும் இறைவேண்டல் நிச்சயம் கேட்கப்படும்.இவ்வாறு நாம் நம்மைத் துன்புறுத்துபவர்களுக்காக செபிக்கும் போது நம்மிடமிருந்து இறையருள் நிரம்பிய நேர்மறை அதிர்வலைகள் அவர்களைச் சென்றடைகின்றன. அதனால் நம்மைத் துன்புறுத்துபவர்கள் மனம்மாறுகிறார்கள். இது உளவியல் ரீதியாகவும் உண்மை.

**பாகுபாடு இல்லாத அன்பு. கடவுள் நல்லோர் தீயோர் எனப் பாராது அனைவரையும் அன்பு செய்வது போல நாமும் பாரபட்சம் பார்க்காமல் சமநிலையோடு அன்பு செய்யும் போது நமது உறவுநிலை ஆரோக்கியமாகவும் பெருகக்கூடியதாகவும் அமையும். 

மேற்கூறிய அனைத்துமே சற்று கடினமானதாகத் தோன்றினாலும் சாத்தியமானவையே. ஏனெனில் நமக்குள் இருப்பது அன்பே உருவான கடவுள்.தந்தை நிறைவுள்ளவர். நன்மைகளுக்கு எல்லாம் ஆதாரமான அன்பில் அவர் நிறைவுள்ளவராய் இருக்கிறார். அவரைப் போல நாமும் நிறைவுள்ளவராய் விளங்க வேண்டுமெனில் அன்பில் நிறைவுகாண கற்றுக்கொள்ள வேண்டும்.அன்பை நிறைவாய்க் கொடுப்பவர்களாக விளங்க வேண்டும்.  அன்பில் நிறைவுள்ளவர்களாக வாழத் தயாரா?

 இறைவேண்டல் 
அன்பே இறைவா! நீர் அன்பில் நிறைவுள்ளவராய் இருப்பதைப்போல நாங்களும் அன்பில் நிறைவுள்ளவர்களாய் வாழ அருள் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராஜசிங்கமங்கலம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

7 + 5 =