வன்முறையை தூண்ட வேண்டாம், கலந்துரையாடல் நடத்துங்கள் : ஹாங்காங் கிறிஸ்தவ தலைவர்கள் அழைப்பு 


Catholic Herald

ஹாங்காங்கில் பொதுமக்கள் மத்தியில் கோபத்தையும், வன்முறையையும் தூண்டியுள்ள சர்ச்சைக்குரிய ‘நாடுகடத்தல்’ குறித்த சட்ட வரைவை திரும்பப் பெறுவதன் வழியாக, அங்கு இடம்பெறும் வன்முறை முடிவுறும் என்று, ஹாங்காங்க் கிறிஸ்தவத் தலைவர்கள் கூறியுள்ளனர். “ஹாங்காங்கில் காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையே தொடர்ந்து இடம்பெற்றுவரும் மோதல்கள் தொடர்பாக, அவசர விண்ணப்பம்” என்று தலைப்பிட்டு, ஹாங்காக் மறைமாவட்டமும், கிறிஸ்தவ அவையும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களை கோபத்தின் உச்சத்திற்கு இட்டுச்சென்றுள்ள ‘நாடுகடத்தல்’ குறித்த சட்ட வரைவை திரும்பப் பெறுமாறு அரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஹாங்காக் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகி கர்தினால் ஜான் டாங் அவர்களும், ஹாங்காக் கிறிஸ்தவ அவைத் தலைவர் Eric So Shing-yit அவர்களும் கையெழுத்திட்டுள்ள இந்த அறிக்கையில், ஹாங்காக்கில் இடம்பெறும் வன்முறைகள் குறித்த உண்மைகளைக் கண்டறிவதற்கு, விசாரணைக் குழு ஒன்றை உருவாக்குமாறும், கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஹாங்காங்கிலிருந்து தப்பியோடிய குற்றவாளிகள் குறித்த சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதற்கென பரிந்துரைக்கப்பட்டுள்ள சட்டவரைவுக்கு எதிராக பொதுமக்கள் பெருந்திரளாக அணிதிரண்டு நடத்திவரும் பேரணிகள், காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல்களை உருவாக்கி, நிலைமையை மோசமடையச் செய்துள்ளன என்று, அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்நிலவரம் குறித்து, ஹாங்காக் மக்கள் ஆழ்ந்த கவலையும் வேதனையும் அடைந்துள்ளனர் என்றும், இந்த வன்முறை நிறுத்தப்பட்டு கலந்துரையாடல்கள் துவங்கப்பட வேண்டும் என்றும், அவ்வறிக்கை அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

(ஆசியா நியூஸ், வத்திக்கான் நியூஸ் )

Add new comment

5 + 10 =