புனித அன்னாளும் பேரரசர் சார்லமேனனும் | St. Anne and Emperor Charlemagne

 

புனித அன்னாளைப் பற்றி கிபி 170 ஆண்டு கிடைத்த யாக்கோபின் முதல் நற்செய்தி, பரம்பரிய கதைகள் மற்றும் மக்களின் அனுபவச் சாட்சிகள் வழியாக நாம் அறிகின்றோம்.  எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய மகள் அன்னை மரியாவின் வழியாக அவற்றை வாழ்வின் அனுபவமாக நாம் பெற்றுக்கொள்கின்றோம்.

பிரான்ஸ் நாட்டில் சார்லமேன் பேரரசரின் அமைதியான ஆட்சிக்காலத்தில் பிரான்சின் தென் பகுதியில் அமைந்துள்ள ஆப்ட் என்னும் இடத்தில் பல்வேறு காலசூழ்நிலையால், சீற்றங்களால், போர்களால் சிதைக்கப்பட்டிருந்த புனித அன்னாளின் சிற்றாலயம் மீண்டும் மாபெரும் பேராலயமாக கட்டப்பட்டது. 792 ஆம் ஆண்டின் உயிர்ப்பு பெருவிழா அன்று, அந்த ஆலயத்தின் அர்ச்சிப்பு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

பேரரசரும் தன்னுடைய உள்ளுணர்வால் தூண்டப்பெற்று, அந்த நிகழ்வில் கலந்துகொள்ள நெடும்பயணம் மேற்கொண்டு ஆப்ட் நகருக்கு வந்து சேர்ந்தார். ஆலயம் புனிதப்படுத்தும் நிகழ்வு தொடங்கியது. திடீரென அங்கு இருக்கையில் தன் பெற்றோருடன் அமர்ந்திருந்த, பிறப்பிலிருந்து காதுகேட்காத, வாய்பேசாத, கண்தெரியாத, 14 வயது சிறுவன் தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து பீடத்தை நோக்கி நடதுசென்று. பீடத்திற்கு செல்லும் படிகட்டில், ஒரு படியை மட்டும் தன்னுடைய துணைக் கம்பினால் ஓங்கித்தட்டிக் கொண்டே இருந்தான். அவனுடைய பெற்றோரும் மற்றவரும் அவனை தடுக்கமுயற்சித்தும் அவனைக் கட்டுபடுத்தமுடியவில்லை.  

கடைசியாக பேரரசனின் கண்கள் அவன்மீது பதிந்தது, அவனுடைய உடலின் இயலாமையினால் கொணரமுடியாத, மனதில் பொங்கிக்கொண்டிருக்கும், எண்ணஓட்டத்தை அவர் உணர்ந்தார்.  அவனும் விடாப்பிடியாகத் தட்டிக்கொண்டே இருந்தான். உடனே அந்த படிக்கட்டை அகற்ற பேரரசர் வேலையாட்களுக்கு உத்தரவிட்டார். அதை நீக்கியபோது, உள்ளே ஒரு குகைப்பாதை இருந்தது, சிறுவன் உள்ளே குதித்து நடக்கலானான். அவனை பேரரசரும், குருக்களும், வேலையாட்களும் மெழுகுதிரி வெளிச்சத்துடன் பின்தொடர்ந்தார்கள். 

மீண்டும் அவர்களுடைய பாதையை ஒரு பெரிய சுவர் தடுத்தது. அந்த சிறுவன் அந்த சுவரைத் தட்ட, வேலையாட்கள் பேரரசரின்; ஆணைக்கிணங்க, அதையும் நீக்கினார்கள். மீண்டும் ஒரு நீண்ட பாதை தோன்றியது. அதன் வழியே சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் ஒரு திருவிழிப்பு விளக்கு குறைந்த வெளிச்சத்துடன் எரிந்துகொண்டிருப்பதைக் கண்டார்கள். அது விண்ணக ஒளிபோன்று ஒளிர்ந்தது. அவர்கள் அந்த விளக்கின் அருகில் சென்றபோது, அந்த விளக்கின் ஒளி அணைந்தது, அதே வேளையில் அந்த சிறுவனுடைய காதுகள், கண்கள், வாய் திறக்கப்பட்டு குணம்பெற்றான், இது அவர்தான் என்று அந்த சிறுவன் கத்தத் தொடங்கினான். பேரரசரும் எதுவும் அறியாமல் அவனோடு கத்தினார். சத்தத்தைக் கேட்ட ஆலயத்தில் கூடியிருந்த மக்கள், ஏதோ விண்ணகக் காட்சி என உணர்ந்து, முழந்தாளிட்டு செபிக்க ஆரம்பித்தார்கள். 

விளக்கின் அருகில் ஒரு நிலவறை இருந்தது. அதனைத் திறந்தார்கள். அங்கே ஒரு பெட்டியில் சவச்சீலையிருந்தது. அதில் புனித மாட்சிபெற்ற கன்னி மரியாவின் தாய் புனித அன்னாவின் உடல் என்று எழுதப்பட்டிருந்தது. அதனுள் புனித அன்னாவின் புனித பண்டங்கள் இருந்தன. பெருமகிழ்ச்சியால் ஆட்கொள்ளப்பட்ட பேரரசன் அனைவரோடும் இணைந்து பல மணிநேரம் முழந்தாளிட்டு செபித்தார். பின்னர் தன்னுடைய அரண்மனைக்கு திரும்பி, புனித திருத்தந்தை மூன்றாம் லியோ அவர்களுக்கு நடந்தவைப் பற்றி தனது கைப்பட ஒரு கடிதம் எழுதி புனித பண்டத்துடன் அனுப்பினார். இது பலமுறை திருத்தந்தையர்களால் அவர்களுடைய ஆணை மடலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. 

எப்படி புனித அன்னாவின் உடல் அங்கு வந்தது என்பதனை கேன்டர்பரி பாரம்பரியக் கதைகளிலிருந்து அறிகிறோம். அதாவது இயேசு இறந்த 14 ஆண்டுகள் கழித்து, எருசலேமில் இயேசுவைப் பின்பற்றியவர்களை யூதர்கள் துன்புறுத்தியபோது, புனித அன்னாளின் அழகிய உடல் இகழ்ச்சிக்குள்ளாக்காமல் காக்க, புனித மகதலேன் மரியா, புனித மார்த்தா மற்றும் புனித இலாசர் ஆகியோர் ஒரு படகில் தப்பித்துச் சென்றனர். அந்த படகு கடல் இன்னலுக்குப்பின் பிரான்சின் தென்பகுதியில் ஆப்ட் என்ற இடத்திற்கு வந்தடைந்தது. அங்கே புனித அன்னாவின் உடலை அவர்கள் புதைத்தார்கள். அவரின் பெயரில் ஒரு சிற்றாலயம் அமைத்தார்கள். பிரான்சிஸ் நாட்டில் நிலவிய அமைதியற்ற சூழலால் அந்த ஆலயம் இடிந்தது என்று இந்த பாரம்பரியக் கதை நமக்குக் கூறுகிறது.

ஆக, நான் நினைவில் கொள்ளவேண்டியது, புனித அன்னாள் மக்களின் நம்பிக்கை வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். தன்னுடைய பரிந்துரையால் மக்களுக்கு ஆசியை பெற்றுதந்திருக்கிறார். எனவேதான் அவரின் பரிந்துரையை மக்கள் நாடியிருக்கிறார்கள். 

எனவேதான் புனித அன்னாவின் பெயரைத் தாங்கிய நிறுவனங்களும் துறவற சபைகளும் உலகளவில் அதிகமாக இன்று பரவியிருக்கின்றது. நம்பிக்கையால் இணைந்த நமக்கே அவருடைய வாழ்வு இவ்வளவு தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது என்றால், அவருடைய சொந்த மகளின் வாழ்வில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பார்.
 

Add new comment

1 + 1 =