ஜப்பான் நாட்டு இளையோருடன் திருத்தந்தை

அன்பார்ந்த இளம் நண்பர்களே, உங்கள் ஆர்வத்தில், மகிழ்வில், நம்பிக்கையில் பங்கேற்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. தங்கள் இதயங்களை துணிவுடன் திறந்து, தங்கள் வாழ்வைப் பகிர்ந்துகொண்ட லியோனார்தோ, மீகி, மசாக்கோ (Leonardo, Miki, Masako) ஆகிய மூவருக்கும் நன்றி. இங்கு கூடியிருக்கும் பல இளையோர், வேற்று நாடுகளிலிருந்து, இங்கு புகலிடம் தேடி வந்திருப்பதை அறிவேன். நாம் அனைவரும் இணைந்து நாளைய சமுதாயத்தைக் கட்டியெழுப்புவோமாக.

பல வண்ணங்கள் கொண்ட சமுதாயம்

பல்வேறு மதங்கள், கலாச்சாரங்களைச் சேர்ந்த அனைவரையும் இணைத்து நீங்கள் உருவாக்கியிருக்கும் இச்சந்திப்பு, நாளைய உலகம், ஒரே வண்ணம் கொண்ட உலகம் அல்ல, அது, பல வண்ணங்கள் கொண்ட சமுதாயம் என்பதை, தெளிவாகக் காட்டுகிறது. நல்லிணக்கத்திலும், அமைதியிலும் வாழ்வது எப்படி என்பதை, மனித குடும்பம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. சந்திக்கும் கலாச்சாரம் சாத்தியம் என்பதை உங்களிடையே நிலவும் மகிழ்வு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

ஏளனக்கொடுமை என்ற பழக்கத்தை ஒழிக்க...

ஏளனக்கொடுமை, பிரிவினை என்ற துன்பங்களை அடைந்துள்ள லியோனார்தோ, தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி. நான் இளைஞனாக இருந்தபோது, இத்தகையக் கொடுமைகளைப்பற்றி கேள்விப்பட்டதில்லை. பள்ளியிலும், கல்லூரியிலும் இன்று நாம் சந்திக்கும் ஏளனக்கொடுமை, என்ற துன்பம் நம் நம்பிக்கையைக் குலைக்கிறது. பிறரைப்போல தான் இல்லை என்ற தாழ்நிலை உணர்வால், தவறான முடிவுகளுக்கு இளையோர் செல்ல நேரிடுகிறது. ஆனால், உண்மையில், மற்றவர்களை ஏளனக்கொடுமைக்கு உள்ளாக்குவோரே, உண்மையில், மிகவும் வலுவற்றவர்கள். அவர்கள், தங்கள் வலுவற்ற நிலையை வெளிப்படுத்த பயந்து, மற்றவர்களை ஏளனத்திற்கு உள்ளாக்குகின்றனர். ஏளனக்கொடுமை என்ற பழக்கத்தை ஒழிக்க அனைவரும் இணையவேண்டும். கல்வி நிறுவனங்கள் உருவாக்கும் சட்ட திட்டங்கள் மட்டும் இந்தக் கொடுமையை நிறுத்த இயலாது. இளையோர் இணைந்து இந்தக் கொடுமையை நிறுத்த முன்வரவேண்டும்.

அச்சம் கொள்ள வேண்டாம்

நன்மைத்தனம், அன்பு, அமைதி ஆகிய உயர்ந்த விழுமியங்களுக்கு, அச்சம் ஓர் எதிரியாக உள்ளது. உண்மையான உயர்ந்த மதங்கள் சொல்லித்தருவது எல்லாம், சகிப்புத்தன்மை, நல்லிணக்கம் மற்றும் கருணை ஆகியவையே. அச்சம், பிரிவு மற்றும் மோதல் அல்ல. இயேசுவும் தன்னைப் பின்தொடர்வோரிடம் அச்சம் கொள்ள வேண்டாம் என்று சொல்லித்தந்தார். ஏனெனில், நாம் உண்மையில் இறைவனையும், நம் சகோதரர், சகோதரிகளையும் அன்பு கூர்ந்தால், அந்த அன்பில் அச்சத்திற்கு இடமில்லை; மாறாக நிறை அன்பு அச்சத்தை அகற்றிவிடும்.  (காண்க. 1 யோவான் 4:18)

தான் ஒரு குடியேற்றதாரர், ஒரு அந்நியர் என்பதால், மற்றவர்களைவிட தான் வேறுபட்டவர் என்பதை லியோனார்தோ உணர்ந்தார். இயேசுவும், தான் வேறுபட்டவர் என்பதை உணர்ந்தார், இருப்பினும் அவர் மற்றவர்களுக்கு வாழ்வளிக்க முடியும் என்பதை உணர்ந்தார். லியோனார்தோ, நீங்கள் உங்களிடம் என்ன இல்லை என்பதில் கவனம் செலுத்தாமல், பிறருக்கு வழங்க உங்களிடம் என்ன உள்ளது என்பதில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

தனிமை, ஒரு பெரும் நோய்

போட்டி போடுதல், அதிகம் உருவாக்குதல் என்பனவற்றை முதன்மைப்படுத்தும் இந்த சமுதாயத்தில், இளையோர், இறைவனுக்கு எவ்விதம் இடம் தர இயலும் என்று, மீகி கேட்டார். வெளித்தோற்றத்தில் மிகவும் வளர்ச்சியும், முன்னேற்றமும் அடைந்துள்ள சமுதாயம், உள்ளார்ந்த வாழ்வில் மிகவும் பின்தங்கியிருக்கக் கூடும். அத்தகைய சமுதாயத்தில் வாழ்வோர், துடிப்புள்ள வாழ்வை இழந்து, முடுக்கிவிடப்பட்ட பொம்மைகளைப் போல் இருப்பர். வெளித்தோற்றத்தில் செல்வச் செழிப்புடன் காணப்பட்டாலும், உள்ளே, ஓர் அடிமையாக, வறுமைப்பட்டு இருப்பர். முன்னேற்றமும், செல்வமும் அடைந்துள்ள பல நாடுகளில், தனிமை, ஒரு பெரும் நோயாகக் காணப்படுகிறது. "தனிமை, மற்றும் அன்பற்ற நிலையே, இவ்வுலகில் மிகப்பெரும் வறுமை" என்று புனித அன்னை தெரேசா கூறியுள்ளார்.

ஆன்மீக வறுமைக்கு எதிரானப் போராட்டத்தில் இளையோராகிய உங்களுக்கு தனி பங்கு உள்ளது. எது முக்கியம் என்பதைத் தேர்ந்தெடுக்கும் வழிகளை நீங்கள் நிர்ணயிக்க முடியும். சந்திக்கும் கலாச்சாரம், அனைவரையும் ஏற்றுக்கொள்ளுதல் என்ற விழுமியங்கள் அடங்கிய சமுதாயமே முக்கியம் என்பதை இளையோராகிய நீங்கள் இவ்வுலகிற்கு சொல்லித்தர முடியும்.

ஆன்மாவை 'செல்ஃபீ' எடுக்கும் கருவி

மசாக்கோ, ஒரு மாணவராக, ஆசிரியராக தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். இளையோர் தங்கள் உள்ளார்ந்த தகுதியையும், நன்மைத்தனத்தையும் எவ்வாறு கண்டுபிடிக்கமுடியும் என்று அவர் கேட்டார். இன்றைய உலகம் பல்வேறு கருவிகளைக் கண்டுபிடித்துள்ளது. ஆனால், நல்லவேளை, இன்னும், ஆன்மாவை 'செல்ஃபீ' எடுக்கும் கருவியைக் கண்டுபிடிக்கவில்லை. உண்மையில் நம் உள்ளார்ந்த மதிப்பை உணர, அடுத்தவர் துணை நமக்குத் தேவை. அடுத்தவர் எடுக்கும் 'போட்டோ'வுக்கு இணையானது இது. நாம், நம்மைவிட்டு வெளியேறி, அடுத்தவரை, குறிப்பாக, தேவையில் இருப்போரைத் தேடிச் செல்லவேண்டும். அத்தகைய சந்திப்பில், நம் உள்ளார்ந்த தகுதியையும், நன்மைத்தனத்தையும் கண்டுபிடிக்கமுடியும்.

நல்ல கேள்விகளைக் கேட்பதில் ஞானம்

ஞானத்தின் வளர்ச்சி, நல்ல பதில்களைத் தேடுவதில் அல்ல, மாறாக, நல்ல கேள்விகளைக் கேட்பதில் அடங்கியுள்ளது என்று அறிவொளி மிகுந்த ஓர் ஆசிரியர் கூறினார். நீங்கள் தகுதியான, சரியான கேள்விகளைக் கேட்டு, உங்கள் உள்ளார்ந்த மதிப்பையும், நன்மைத்தனத்தையும் கண்டுகொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

அன்பு இளம் நண்பர்களே, உங்கள் வாழ்வை என்னுடன் பகிர்ந்துகொண்டதற்கும், இதுவரை பொறுமையுடன் எனக்குச் செவிமடுத்ததற்கும் நன்றி. ஒருபோதும் மனம் தளரவேண்டாம், உங்கள் கனவுகளை புறந்தள்ள வேண்டாம். அவற்றிற்கு அதிக இடம் கொடுத்து, உள்ளத்தின் தொடுவானங்களை இன்னும் பரந்து விரியச் செய்யுங்கள். அனைவரையும் மகிழ்வோடு வரவேற்கும் உங்கள் இளைய இதயம், ஜப்பானுக்கும், இந்த உலகத்திற்கும் அதிகத் தேவை. ஆன்மீக ஞானத்தில் வளர்ந்து, உண்மையான மகிழ்வை நீங்கள் கண்டடையவேண்டும் என்று செபிக்கிறேன். எனக்காக செபியுங்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர், மற்றும், நண்பர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களையும், ஆசீரையும் வழங்குகிறேன்.

நன்றி: வத்திக்கான் செய்திகள்
 

Add new comment

16 + 1 =