சோபியா பல்கலைக்கழகத்தில் திருத்தந்தை

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, ஜப்பான் நாட்டில் என் பயணத்தை நிறைவு செய்து உரோம் திரும்பும் இந்நேரத்தில், உங்களோடு சிறிது நேரம் செலவழிப்பது, எனக்கு பெரும் மகிழ்வளிக்கிறது. இந்நாட்டில் நான் மேற்கொண்ட பயணம், மிகவும் குறுகியதாகவும், ஆழ்ந்த உணர்வுகளுடன் கூடியதாகவும் இருந்தது. புனித பிரான்சிஸ் சேவியர், மற்றும் பல மறைசாட்சிகள், கிறிஸ்துவ நம்பிக்கைக்கு வித்திட்ட இந்நாட்டை காண நீங்கள் வழங்கிய வாய்ப்புக்கு நன்றி. கத்தோலிக்கத் திருஅவைக்கு இந்நாட்டில் வழங்கப்படும் மரியாதையை நான் நேரில் கண்டேன். பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டுள்ள இந்நாட்டில், இன்னும் ஆழமான உண்மைகளைக் காண்பதற்கும், மனிதாபிமானம் மற்றும் பரிவு நிறைந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கும் நீங்கள் ஆர்வம் கொண்டுள்ளீர்கள் என்பதை நான் உணரமுடிந்தது.

கல்வியும், தியானமும் ஒவ்வொரு கலாச்சாரத்தின் அங்கங்களாக உள்ளன. ஜப்பானிய கலாச்சாரம் தன் பழம்பெரும் மரபைக் குறித்து பெருமை கொண்டுள்ளது. ஜப்பானிய கலாச்சாரத்தை உள்வாங்கி, அறிவை வழங்கும் அஷிகாகா (Ashikaga) கல்விக்கூடம், புனித பிரான்சிஸ் சேவியரை மிகவும் கவர்ந்தது. கல்வி, தியானம் கலாச்சாரம் ஆகியவற்றை வழங்கும் மையங்கள், இன்றைய கலாச்சாரத்திற்கும் முக்கிய பங்காற்றுகின்றன. வருங்காலத் தலைவர்களை உருவாக்குவதில் பல்கலைக்கழகங்கள் முதலிடம் வகிப்பதால், அவர்கள், வாழ்வின் அனைத்து தளங்களிலும் சிறந்து விளங்கும் வகையில் கல்வி வழங்கப்படவேண்டும்.

Sophia - உயர் மெய்யறிவு

Sophia, அதாவது, உயர் மெய்யறிவு. நம்மிடம் உள்ள வளங்களை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்த, நமக்கு உண்மையான மெய்யறிவு தேவை. போட்டிகள் நிறைந்த, அதேவேளை, தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள இன்றைய ஜப்பானில், அறிவுத்திறனில் உருவாக்கம் வழங்கவும், நல்லதொரு சமுதாயத்தைக் கட்டியெழுப்பவும் இந்தப் பல்கலைக்கழகம் மையமாக விளங்கவேண்டும். 'இறைவா உமக்கே புகழ்' என்ற எனது சுற்றுமடலின் ஓர் எதிரொலியாகவும், இயற்கை மீது அன்புகூருதல் என்ற ஆசிய கலாச்சாரத்தின் எதிரொலியாகவும், நம் பொதுவான இல்லமான பூமியைக் காக்கும் வழிமுறைகள், இந்தப் பல்கலைக்கழகத்தில் கற்றுத்தரப்பட வேண்டும்.

சோஃபியா பல்கலைக்கழகம், எப்போதும், மனிதாபிமானம், கிறிஸ்தவம், பன்னாட்டுணர்வு என்ற பண்புகளை வெளிப்படுத்தி வந்துள்ளது. இது நிறுவப்பட்ட காலத்திலிருந்து, பல நாடுகளின் பேராசிரியர்கள், அதிலும் சிறப்பாக, போர்களில் ஈடுபட்டிருந்த நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்களும் இங்கு கல்வி புகட்டி வந்துள்ளனர். ஜப்பானில் வாழும் இளையோருக்கு வாழ்வின் மிகச்சிறந்தவற்றை வழங்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அவர்கள் இணைந்து உழைத்தனர். இதே பண்பு இன்னும் தொடர்ந்து வருவதோடு, ஜப்பான், மற்றும், உலகின் பல பகுதிகளில், மிகவும் தேவைகளில் இருப்போருக்கு, இந்தப் பல்கலைக் கழகம் உதவி வருகிறது. இஞ்ஞாசியாரின் மரபில் ஊன்றியுள்ள சோஃபியா பல்கலைக்கழகம், சிந்தித்தல், தேர்ந்து தெளிதல் என்ற பண்புகளில், இங்கு பணியாற்றும் பேராசியர்களையும், பயிலும் மாணவர்களையும், வளர்க்கவேண்டும். எந்த ஒரு கடினமானச் சூழலிலும், எது நீதியானது, மனிதாபிமானம் மிக்கது, பொறுப்பானது என்பதை தேர்ந்து தெளியும் சக்தியை அனைவரும் பெறவேண்டும்.

இயேசு சபையின் திருத்தூது விருப்பத்தெரிவுகள்

இவ்வாண்டு, இயேசு சபையால் முன்வைக்கப்பட்டு, நான் ஒப்புதல் தந்த, உலகளாவிய திருத்தூது விருப்பத்தெரிவுகளில், இளையோருடன் இணைந்து பயணிப்பது மிக முக்கியமான விருப்பத் தெரிவாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இளையோருடன் இணைந்து செல்வது, இஞ்ஞாசியாரின் கொள்கைகளைக் கொண்ட அனைத்து நிறுவனங்களிலும் பின்பற்றப்படவேண்டிய முயற்சி. இளையோரை மையப்படுத்தி நடைபெற்ற ஆயர்களின் மாமன்றமும், அகில உலக திருஅவையும், நம்பிக்கையோடும், ஆர்வத்தோடும், இளையோரின் மீது கவனம் செலுத்துவதை, முக்கியமானதாகக் கருதுகின்றன.

அனைவருக்கும் தரமான உயர் கல்வி

இயேசு சபையின் மற்றொரு விருப்பத்தெரிவான, வறியோர் மற்றும் புறக்கணிக்கப்பட்டோருடன் பயணிப்பது, சோஃபியாவின் பாரம்பரியத்தில் உள்ளது. சமுதாயத்தின் ஓரங்களுக்கு தள்ளப்பட்டுள்ளோர், இந்த பல்கலைக்கழகத்தின் முயற்சிகளில் இணைக்கப்படவேண்டும். தரமான உயர்ந்த கல்வி, ஒரு சிலரின் உரிமையாகமட்டும் இருந்துவிடாமல், அனைவரையும் சென்றடைவது, இந்த பல்கலைக்கழகத்தின் முக்கிய குறிக்கோளாக இருக்கவேண்டும். "ஏழைகளுக்கு உதவிசெய்ய மறக்கவேண்டாம்" (கலாத்தியர் 2:10) என்று, பேதுரு, பவுலுக்கு வழங்கிய அறிவுரை, இன்றும் மிக உண்மையானதோர் அறிவுரையாகத் திகழ்கிறது.

அன்பு இளையோரே, பேராசியர்களே, மற்றும் சோஃபியா பல்கலைக்கழகத்தின் பணியாளர்களே, நான் வழங்கிய இக்கருத்துக்கள், உங்கள் வாழ்வில் பலன் தருவதாக. தேடுதல், கண்டடைதல் மற்றும் தெய்வீக மெய்யறிவை பரப்புதல் என்ற பணிகளில், உங்கள் பங்களிப்பை, ஆண்டவரும், அவரது திருஅவையும், நம்பியுள்ளனர். எனக்காகவும், தேவையில் இருப்போர் அனைவருக்காகவும் செபியுங்கள்.

ஜப்பான் நாட்டைவிட்டு புறப்படும் இந்நேரத்தில், உங்களுக்கு நன்றி கூறுகிறேன். உங்கள் வழியே, இந்நாட்டின் அனைத்து மக்களுக்கும், நன்றி கூறுகிறேன். உங்கள் அனைவரையும் என் செபங்களில் ஏந்திச் செல்கிறேன்.

நன்றி: வத்திக்கான் செய்திகள்
 

Add new comment

1 + 15 =