அன்னையை அனுபவத்தில் வளர்த்த அன்னாள் | அருள்பணி. இம்மானுவேல் மரியான்

அன்னாள், உங்களையும் என்னையும் நம்; தாய் பெற்றதுபோல, 10 மாதங்கள் கருவிலே சுமந்து மரியாவைப் பெற்றார்கள். அதுவும் தவமிருந்து பெற்றார்கள். தவமிருந்து பெறுவதின் ஆழமான உணர்வுகளை நாம் எளிதில் வார்த்தைகளால் விவரிக்கமுடியாது. அது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். அத்தகையை பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும் என்ற அவர்களின் கனவின் நிஜமே அன்னை மரியாள். அதன் விளைவே இயேசு கிறிஸ்து, நம் மீட்பர். அப்படியென்றால் அன்னாவின் இறையாட்சிக் கனவு எப்படி இருந்திருக்ககூடும்: 

அது ஒரு அனுபவப் பகிர்வு. என்னுடைய குருத்துவ வாழ்வின் தொடக்கத்தில் என்னுடைய அசட்டையான பேச்சை கேட்கும் ஒரு சில நண்பர்கள் விளையாட்டாகச் சொல்வார்கள் - எப்படிப்பட்ட அப்பா அம்மாவிற்கு இப்படிப்பட்ட பிள்ளை பிறந்திருக்கு பாரு? ஆனால் காலம் கடந்தபோது எல்லாம் மாறிவிட்டது. இப்பொழுது எல்லோரும் உணர்வார்கள் - இது இவனுடைய பெற்றோரிடமிருந்து வந்தது என்று. 

ஆக, பெற்றோரின் அனுபவப் பகிர்வே பிள்ளைகளை வலுப்படுத்தும் வளப்படுத்தும். என்னுடைய பெற்றோர்கள் தங்கள் வாழ்வின் எல்லா அனுபவத்தையும் என்னுடன் பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்கள் சந்தித்த தருணங்கள் நமக்கு வருகின்றபோது அவை வழிகாட்டுதலாக இருக்கும்.

யூதர்களிடம் உள்ள வழக்கம்போல, அவர்கள் தங்கள் வாழ்வில் அனுபவத்த அனைத்தையும், கடவுளின் வழிநடத்துதலையும் அன்னை மரியாவிடம் பகிர்ந்திருப்பார்கள். எனவேதான் ஒரு சூழமைவில் அன்னை மரியாவால் மரியாவின் பாடல் என்று சொல்லப்படுகின்ற அந்த பாடலை கடவுளின் மாபெரும் செயலோடு ஒப்பிட்டுப் பாடமுடிந்தது. இது அவருடைய பெற்றோர் கற்றுக்கொடுத்த, அனுபவப் பாடம். இதன் எடுத்துக்காட்டுகள் இங்கே:

1.  குழந்தையின்மை: இன்று மக்கள் சந்திக்கின்ற கொடுமையான, அதே வேளையில் புரிந்துகொள்ள முடியாத வாழ்வின் அனுபவம். ஆனால் யூத சமூகத்தில் இது இன்னும்  கொடுமையானது. குழந்தையின்மை என்பது அவர்கள் செய்த பாவத்திற்கான கடவுளின் தண்டனையாக நம்பினார்கள். அதனால் அவர்கள் மிகவும் ஏளனப்படுத்தப்பட்டார்கள். எந்த அளவிற்கு என்றால் சுவக்கின்; அன்னாவும் ஆலயத்திற்கு சென்று பலிசெலுத்தும்போது, குழந்தைவரம் இல்லாத காரணத்தால் அனுமதிக்கப்படாததால், சுவக்கின் தனியாக காட்டுக்குள் சென்று தன்னையே தனிமைப்படுத்திக்கொண்டார். அன்னா வீட்டிலே கனவனை நினைத்தும், தனக்கு ஏற்பட்ட இழிநிலையையும் கடவுளிடம் ஒப்படைத்து மன்றாடிக்கொண்டே இருக்கிறார். அவர்கள் இருபது ஆண்டுகள் குழந்தையில்லாமல் இருந்திருக்கிறார்கள், இந்த சமூகம் அவர்களுக்கு எப்படிப்பட்ட கொடுமைகளைச் செய்திருக்கும். 

அதேபோல கணவனை அறியமால் குழந்தையைப் பெற்றாலும் அவர்கள் கல்லெறிந்துகொள்ளப்படுவார்கள் என்பது பற்றிய அனுபவத்தையும் அன்னாள் அன்னை மரியாவுடன் பகிர்ந்துகொண்டார். எனவேதான் மரியாள் கன்னியாக கருவுற்றபோது சமூகத்தை எதிர்கொள்ள தயாராக இருந்தார்.

2. குழந்தைப்பேறு என்பது கொடை: 20 ஆண்டுகள் அவர்கள் குழந்தை இல்லாமல் இருந்தார்கள். அவளுடைய உடல் அதற்கு ஏற்றார்போல இல்லை. எனவே கடவுளின் அருளை நம்பி குழந்தை வரத்தைப் பெறுவதற்கு தன்னை தயாரித்தார் என்று புனித ஜெரோம் கூறுகிறார். பாரம்பரியம் சொல்கிறது: தன்னுடைய கணவன் காட்டிற்குள் சென்றவுடன் அன்னாள் ஒரு தோட்டத்தை அமைத்தார். அவை கனிகள் தந்தன. ஒரு நாள் அவர் அந்த தோட்டத்தில் அமர்ந்தபோது சிட்டுக்குருவி அங்கு கூடுகள் அமைத்தன. சில மாதங்களில் அவை குஞ்சுகள் பெறித்தன. அப்பொழுது அவர் சிட்டுகுருவிகள் கூடுகள் அமைத்தவுடன் அதற்கு குஞ்சுகளைக் கொடுத்தீர். எனக்கும் தாரும் குழந்தை தாரும் என்று கடவுளிடம் வேண்டினார். ஆக, அவர் பெற்றுக்கொண்டார். 

எனவேதான் குழந்தை பெற்றெடுப்பது என்பது வரம். அது நம்முடைய உடலையும் தாண்டி, கடவுளிமிடமிருந்து வருகின்றது. நமது கருவை தயார்படுத்தி உருவாக்குகிறார் என்று அன்னை மரியாள் நம்பினார். அவர் தூய ஆவியால் கருவுற்றபோது, கடவுளின் மாபெரும் அருளை நம்பி அவரால் ஏற்றுக்கொள்ள முடிந்தது.

யோபு 10:8-9 கூறுவதுபோல: என்னை வனைந்து வடிவமைத்து உண்டாக்கின உம் கைகள்; இருப்பினும், நீரே என்னை அழிக்கின்றீர். தயை கூர்ந்து நினைத்துப் பாரும்! களிமண்போல் என்னை வனைந்தீர்; அந்த மண்ணுக்கே என்னைத் திரும்பச் செய்வீரோ?

3.  அன்னா கடவுள்மீது ஆழமான பற்றுறுதி கொண்டிருந்தார். கடவுளின் திருவுளத்தை நம்பினார். எனவேதான் கனவனைவிட்டு வெகுதூரத்திலிருந்து, நம்பிக்கையிழந்த தருணங்களில் கடவுளை சிக்கெனப் பற்றிக்கொண்டார். கடவுளின் மாபெரும் செயல்களை உள்ளத்தில் வைத்துச் சிந்தித்துக்கொண்டிருந்தார். எனவேதான் கபிரியேல் வானதூதர் காட்டில் சுவக்கினுக்கும், வீட்டில் அன்னாவுக்கும் தோன்றி மரியா என்ற மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை அறிவித்தார். குழந்தை பால்குடி மறந்தவுடன் கோவிலில் அவரை விட்டுவிட்டு வரும் சக்தியையும் பெற்றிருந்தார். 

எனவேதான் கோவிலில் உரையாடிக்கொண்டிருந்த இயேசு நான் என் தந்தையின் இல்லத்தில் இருக்கவேண்டும் என்பது உங்களுக்கு தெரியாதா என்று சொன்னவுடன், அவரால் ஏற்றுக்கொள்ளமுடிந்தது, உள்ளத்தில் வைத்து சிந்திக்க முடிந்தது. தன்னை தன் தாய் இறைவனின் கோவிலில் அர்ப்பணித்தை அப்பொழுது நினைவுகூர்ந்தார். 

தன் தாய் அன்னா, அறைக்குள் அமர்ந்து கனவனைப் பிரிந்திருக்கும் தனிமையில் கடவுளை நோக்கி மன்றாடியதுபோல, இயேசுவின் இறப்பிற்குபின்னர் நம்பிக்கையற்று அறைக்குள் பயந்து நடுங்கிய சீடர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தி, கடவுளின் திருவுளத்தை நம்பி செபிக்கவைக்க மரியாவால் முடிந்தது.

இயேசுவும் இதை உறுதிசெய்கிறார். நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் (யோவான் 16:23).

4.  பிறருக்கு கொடுப்பதில்தான் வாழ்வு: அவர்களுடைய செல்வத்தை கடவுளுக்கும், அனாதைகள்-ஏழைகள்-பயணிகளுக்கும், தங்களுக்கும் என 3 பகுதிகளாகப் பிரித்தார்கள். அது மட்டுமல்ல, அவர்கள் விளைபொருட்களையும் அவ்வாறே பிரித்தார்கள் என புனித ஜெரோம் கூறுகிறார். இவ்வாறு பிறரை மையப்படுத்திய வாழ்வாக அவர்களுடைய நம்பிக்கை வாழ்வு இருந்தது. 

உன் உடமையிலிருந்து தர்மம் செய். நீ தர்மம் செய்யும்போது முகம் கோணாதே; ஏழை எவரிடமிருந்து உன் முகத்தை திருப்பிக் கொள்ளாதே. அதனால் கடவுளும் தம் முகத்தை உன்னிடமிருந்து திருப்பிக்கொள்ளமாட்டார். மேலும் தருமம் சாவினின்று காப்பாற்றும், எல்லா பாவத்தினின்றும் தூய்மையாக்கும். தருமம் செய்வோரின் வாழ்வை அது நிறைவுள்ளதாக்கும் என தோபித்து கூறுகிறார் (4:7;12:9). 

தன்னுடைய தாயைவிடவும் காத்திருந்து கருவுற்ற எலிசபெத்தினைச் சந்தித்து உதவிசெய்யப் போகிறார். கானாவூர் திருமணத்தில் திக்கற்றவர்களுக்கு உதவ தன் மகனைத் தூண்டுகிறார். உலக மீட்புக்காக தன்னையே அர்ப்பணிக்கும் மகனின் பகிர்வில் உடன் பயணிக்கிறார். 

இயேசுவும் தன் தாயின் வழியில் சென்ற இடமெல்லாம் அனைவருக்கும் உதவிசெய்துவிட்டு, நீங்கள் துயருறுவீர்கள், ஆனால் உங்கள் மகிழ்ச்சியை உங்களிடமிருந்து யாராலும் எடுக்கமுடியாது என்ற வாக்குறுதியைக் கொடுக்கின்றார் (யோவான் 16:22). 

அன்பிற்குரியவர்களே, புனித அன்னாவுக்கு விழா எடுக்கும் நாம், அவரைப்போல எல்லாச் சூழ்நிலையில் நம்பிக்கையோடு அவரின் பெயருக்கு ஏற்ப கடவுளின் அருளுக்காகக் காத்திருக்கவேண்டும். நம்முடைய வாழ்வின் அனுபவத்தை நம்முடைய குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும். நம்முடைய நம்பிக்கை வாழ்வின் தொடர்நீச்சியான பிறருடைய வாழ்வின் வளர்ச்சியில் பங்குகொள்ளும் பகிர்வினை வாழ்வின் அடையாளமாகக் கொள்ளவேண்டும். அப்பொழுது நம்முடைய மகிழ்ச்சி நிறைவடையும்.
 

Add new comment

6 + 8 =