அன்னைக்கு ஏன் விண்ணேற்பு | Why Assumption | Fr. Emmanuvel Mariyan

அன்னை விண்ணுக்கு எடுத்துச் செல்லப்பட்டார் என்று நினைத்து மகிழும் நேரத்தில், இயேசுவின் விண்ணேற்புக்கும் (Ascension), அன்னை மரியாவின் விண்ணேற்புக்கும் (Assumption) உள்ள வித்யாசத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இயேசுவின் விண்ணேற்பு என்பது இயேசு தன்னுடைய தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றிய தன்னுடைய தந்தையின் திட்டப்படி விண்ணகத்திற்கு செல்கிறார். அன்னை மரியாள் இறைதந்தையின் திருவுளத்தை இவ்வுலகில் நிறைவேற்றியதால் விண்ணகத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறார். 

இது இயேசு நமக்குக் கொடுத்த வாக்குறுதியான நிலைவாழ்வும், இறந்தோரின் உயிர்ப்பு உண்டு என்பதையும் நமக்கு அறிதியிட்டுக் கூறுகிறது. தன்னுடைய மண்ணுலக வாழ்வு நிறைவுற்றபோது, அன்னை மரியாள் விண்ணிற்கு எடுத்துச் செல்லப்பட்டார். 

அன்னை மரியாவுக்கு ஏன் விண்ணேற்பு, எந்த வகையில் நமக்கு முன்மாதிரியாக இருக்கின்றது. விண்ணகத்திற்கு எடுத்துச் செல்வது சாத்தியமா என்ற கேள்விகள் எழலாம். விண்ணகத்திற்கு உடலோடு எடுத்துச் செல்வது, விவிலிய வரலாற்றிலும் நிகழ்ந்துள்ளது. தொடக்கநூலில் 5 ஆம் அதிகாரத்தில் பார்க்கின்றோம். ஏனோக்கு உடலோடு கடவுளிடம் எடுத்துக்கொள்ளப்பட்டார். அரசர்கள் இரண்டாம் புத்தகம் இரண்டாம் அதிகாரம் கூறுகிறது எலியா விண்ணகத்திற்கு சூறாவளிக் காற்றினால் எடுத்துக்கொள்ளப்பட்டார் எனக் காண்கிறோம். ஆக விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்படுவது விவிலிய வரலாற்றில் சாத்தியமே. 

ஏன் அவர்களை எடுத்துக்கொண்டார்: அந்த நபர்களில் பொதுவான ஒன்று உண்டு. அது என்னவென்றால் அவர்கள் கடவுளோடு நடந்தார்கள் என்று விவிலியம் கூறுகின்றது. எரேமியாவின் புத்தகம் 29:13 கூறுகிறது - உங்கள் முழு இதயத்தோடும் என்னைத் தேடும்பொழுது நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள். ஏனோக்கு யூதாவின் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். அவர் தீமையையும் தீமைசெய்தவர்களையும் கண்டித்தார். ஏற்கெனவே அறிவித்துள்ளார். எபிரேயருக்கு எழுதிய திருமுகம் 11:5-6 ஏனோக்கு கடவுளுக்கு உகந்தவர் என்று கடவுள் சான்று பெற்றவரானார். நோவா கடவுளோடு நடந்தார் எனக் குறிப்பிடப்படுகின்றது.

அன்னை மரியா தன்னுடைய வாழ்வின் எல்லாச் சூழ்நிலையிலும் கடவுளோடு நடந்ததால் அவரும் விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார் என்பது எதார்த்தமான உண்மை. அன்னை மரியா ஒரு சாதாரணப் பெண்தான். வாழ்வின் எல்லாச் சூழ்நிலையிலும் நம்மைப்போல வாழ்ந்தார், ஆனால் கடவுளோடு நடந்தார். 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அன்னை மரியா இயேசு கிறிஸ்துவை உலகிற்கு கொண்டுவருவதன் வழியாக தன்னுடைய மகனுடைய மகிழ்ச்சியையும், அருளையும் நமக்குத் தருகிறார். அது நம்மை கடினமான நேரத்திலும், சோர்வுற்ற நேரங்களிலும் திடப்படுத்தும் என்கிறார். ஆக நம்பிக்கை வாழ்வில் நமக்கு அன்னை மரியா முன்னோடியாக இருக்கின்றார். நமக்கு நம்பிக்கைக்கும், அருள்வாழ்வுக்கும் வழிகாட்டியாக இருக்கின்றார். 

2010 இல் ஒரு காணொளிச் செய்தி வந்திருந்தது. கப்பலோனியா, பெரிய கிரேக்க தீவுகளில் ஒன்று அங்கு ஏறக்குறைய 50000 மக்கள் வாழ்கின்றனர். அந்த தீவில் மார்க்கபோலோ என்ற இடத்தில் வாழும் மக்கள் ஒரு பாரம்பரிய கதையைச் சொல்கிறார்கள். 

ஒரு முறை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மக்கள் கடலின் சீற்றத்தில் மாட்டிக்கொண்டபோது கடல் கொள்ளையர்கள் அந்த இடத்திற்குள் வந்து இறங்கினார்கள். அதைக் கண்ட அங்கிருந்த ஒரு துறவற இல்லத்தில் துறவிகள் ஆலயத்தில் சென்று அன்னை மரியாவின் விண்யேற்புத் திருவுருத்தை நோக்கி மன்றாடினார்கள். 

மறுபுறம் கொள்ளையர்கள் வந்தார்கள். மரக்கதவினை உடைத்தார்கள். உள்ளே வந்தார்கள். ஆனால் அவர்கள் அதற்குமேல் வரமுடியவில்லை. காரணம் கறுப்பு வரிப்பாம்புகள் அவர்களை எதிர்கொண்டது. எனவே பயந்துஓடி மன்னிப்புவேண்டினார்கள்.  

1705 இருந்து இந்த திருவிழாவிற்கு முன்னதாக இந்த பாம்புகள் வந்துவிட்டுச் செல்வதாக கூறுகின்றனர். இந்த பாம்புகள் யாரையும் காயப்படுத்துவதில்லை. தங்களை கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்க அன்னை மரியாவிடம் வேண்டியபோது, அவர்கள் இந்த பாம்பின் வழியாக காப்பாற்றப்பட்டதாகக் கூறுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த பாம்புகள் வருகின்றன. அமைதியாக சென்றுவிடுகின்றன. இவை வராமல் இருந்தது, இரண்டாம் உலகப்போரின்போதும், 1953 நிலநடுக்கத்தின்போதும்தான். திருவிழா முடிந்தவுடன் அவை மீண்டும் சென்றுவிடுவதாகவும் சொல்கிறார்கள். ஏன் இது வருகின்றது என்றால் கடவுளின் பிரசன்னத்தை நாம் உணர்வதற்காக.

கடவுளின்மீது ஆழந்த நம்பிக்கைக் கொண்டு, அதற்கு ஏற்றவாறு வாழ்ந்த அந்த சகோதரிகள், தங்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்த அன்னை மரியா வழியாக மன்றாடினார்கள். கடவுள் அவர்களை காப்பாற்றினார். 

ஆக, வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளையும் அனுபவித்தார். ஆனால் இறைவனோடு நடந்ததால் அது சாத்தியமாகிற்று. அன்னை மரியா நம்மைப் போல மனிதர்தான் இவ்வுலகில் வாழ்ந்தபோது, துன்பங்கள் வேதனைகள் அனைத்தும் அவருக்கு இருந்தது. பல மக்களால் நிந்தைக்குட்படுத்தப்பட்டவர்கள் ஏராளம். அவரை வாழத்தெரியாதவர் என்றும்கூட பலரும் சொல்லியிருக்கலாம். ஆனால் கடவுளை நம்பினார், அவரோடு நடந்தார். 

நம்முடையை வாழ்வுச் சூழ்நிலையில் நாம் அத்தகைய வாழ்வு வாழ்கின்றோமா? துன்பங்கள் சோதனைகள் வருகின்றபோது நாம் கடவுளை விட்டு வெகுதூரத்தில் சொன்றுவிடுகிறோமா? கடவுளின்மீதுள்ள நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகின்றோமா? கடவுளை மறுதலித்து வாழ்கின்றோமா என்று சிந்தித்துப் பார்ப்போம். 

அன்னையைப் பின்பற்றி கடவுளோடு நடக்க முயலுவோம். கடவுளோடு நடந்தால் விண்ணேற்பு நமக்கும் சாத்தியமே.
 

Add new comment

10 + 3 =