வாழ்வின் அர்த்தம் | dr. ஃபஜிலா ஆசாத்


நீ பெரியவனாகும் போது யாராக இருக்க விரும்புகிறாய்? 

இந்த கேள்வியை எதிர் கொள்ளாத சிறு வயதே இல்லை எனலாம். பெரும்பாலும் இதற்கான பதில் டாக்டர், டீச்சர், விஞ்ஞானி, தொழிலதிபர் என்றே இருக்கும். இந்த விதமான பதிலை எதிர்பார்த்தே கேட்பவரின் மனநிலையும் இருக்கும்.

ஐரோப்பாவில் உள்ள பள்ளியில் இந்த கேள்வியை ஜான் லெனன் என்ற சிறுவனிடமும் அவர் ஆசிரியர் கேட்கிறார். ஜான் நீ பெரியவானாகும் போது யாராக இருக்க விரும்புகிறாய். சட்டென்று அந்த மாணவன் சொல்கிறான் நான் மகிழ்ச்சியானவனாக இருப்பேன்.

அந்த பதிலை எதிர்பார்க்காத ஆசிரியர் மிண்டும் அவனிடம் கேட்கிறார் ஜான் நீ என் கேள்வியை சரியாக புரிந்து கொள்ளவில்லை. நான் என்ன கேட்கிறேன் என்றால்…

அவர் சொல்ல வந்ததை முடிக்கு முன் அவரை குறுக்கிடும் அந்த சிறுவன் மிக தெளிவாக தலை நிமிர்ந்து சொல்கிறான்.. இல்லை மேடம் நீங்கள் தான் சரியாக வாழ்க்கையை புரிந்து கொள்ளவில்லை. அதனால் உங்கள் கேள்விக்கான என் பதிலின் அர்த்தம் உங்களுக்கு புரியவில்லை. 

இப்போது அந்த டீச்சருக்கு ஜான் என்ன சொல்ல வருகிறான் என்பது நச்சென்று புரிகிறது. ‘தான்’ யாராக விரும்பினாலும் அதன் குறிக்கோள் ‘தான்’ மகிழ்ச்சியாக இருத்தலும், பிறரை மகிழ்ச்சி படுத்துவதும் தானே என்பதை உணர முடிகிறது. உடன் அவர் ஜானை அருகில் அழைத்து அவன் சொல்ல வந்ததை மற்ற மாணவர்களுக்கும் புரியும்படி எடுத்து சொல்லி அவனைப் பாராட்டி மகிழ்கிறார்.

மகிழ்ச்சியாக இருப்பதே வாழ்க்கையில் மிக முக்கியமானது என வாழ்வின் உண்மையான அர்த்தத்தை தனக்குள் விதைத்த, தன்னை வெற்றியாளனாக உருவாக்கிய தன் தாயை பின்னாட்களிலும் நன்றியோடு நினைவு கூறும் ‘ஜான் லெனன்’ உலக புகழ் பெற்ற பீட்டில்ஸின்(Beatles) இணை நிறுவனர்.

பொதுவாக எல்லோருமே ‘தான்’ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். ஆனால் அதற்காக வாழ்க்கையில் நாம் எதைத் தேடி ஓடுகிறோம் என்பதில் தான் குழம்பிக் கொள்கிறோம். 

நான்கு பேர் சேர்ந்து ஒருவரை இரயிலில் பயணம் அனுப்ப சென்றார்களாம். பிளாட்பாரத்தில் நின்று கொண்டு அவர்கள் சுவாராஸ்யமாக பேசிக் கொண்டே நின்றதில் இரயில் கிளம்பும் போது தான் கவனிக்கிறார்கள். உடனே பரபரவென்று மற்ற நான்கு பேர்களும் ஏறி விட்டார்கள் யாரை அனுப்ப வந்தார்களோ அவர் மட்டும் தனியாக பிளாட்பாரத்திலே நின்று கொண்டிருக்கிறார்.

இப்படித் தான் வாழ்க்கையிலும் நடக்கிறது, மகிழ்ச்சி ஒன்றிற்காக தான்  அத்தனை முயற்சியும் எடுக்கிறோம். ஆனால் நம் பரபர ஓட்டத்தில் மகிழ்ச்சியை விட்டு விட்டு மற்றதை நோக்கி ஓடி பெரு மூச்சு விட்டுக் கொள்கிறோம். நம் வாழ்க்கைக்கு தவறான அர்த்தம் கற்பித்து மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். 

எது உங்களை அழகான முறையில் முன்னேற்றக் கூடும். வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக மாற்றக் கூடியது எது?! என்ற கேள்விக்கு கடந்த 21 ஆண்டுகளில் உலகளாவிய வகையில் நடந்த ஆய்வுகள் பலவும் நமக்கு சொல்லக் கூடியது மகிழ்ச்சிக்கென்ற ஒரே மாடல் எல்லாவற்றிற்கும் பொருந்தாது. ஒருத்தரை மகிழ்ச்சி படுத்தக் கூடிய ஒன்றும் வேறு ஒருத்தருக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கக் கூடும். 

ஒருத்தருக்கு பாதுகாப்பான வேலை தான் மகிழ்ச்சி தரும் என்றால் வேறொருவருக்கு ரிஸ்க் எடுத்து அட்வென்ட்சராக செய்யும் வேலை தான் மகிழ்ச்சியை தரும். நேற்று உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய ஒன்று இன்று நினைத்தால் உங்களுக்கு வேடிக்கையானதாக இருக்கலாம். இன்று உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒன்று நாளை வேறுபடலாம். இது தான் உங்களை மகிழ்ச்சி படுத்தும் என்பதற்கு ஒரு single receipe என்று ஒன்று இல்லை. ஏனென்றால் உங்கள் மகிழ்ச்சி என்பதை நீங்கள் பொருளில் தேடினால் அது ஒரே விஷயத்தை சார்ந்து இருப்பதில்லை. 

ஆனால் மகிழ்ச்சியான மன நிலையுடன் இருக்கும் எல்லோரிடமும் இருக்கக் கூடிய ஒரு பொதுவான விஷயம் என்னவென்றால், அவர்கள் சமுகத்தோடு நல்ல முறையில் உறவுடன் இருக்கிறார்கள். உற்றார் உறவினர் சுற்றம் நட்புடன் சுமுகமாக இருக்கிறார்கள். சமுகத்தோடு ஒன்றிய நல்ல உறவு இல்லாதவர்களால் மகிழ்ச்சியோடு இருக்க முடியாது. அவர்களிடம் ஏதோ ஒரு விரக்தி நிலை, விடுபட்ட நிலை இருக்கும் என்கிறது ஆய்வுகள். 

சிறு குழந்தைகளை பார்த்திருப்பீர்கள். அவர்கள் விளையாடுவதற்கு துணை இருந்தால் மிக்க மகிழ்ச்சியோடு ஆக்டிவாக இருப்பார்கள் .அப்படி ஒருவரும் இல்லாத சூழலிலும் தன்னுடைய விளையாட்டு பொருட்களையே, தன் விளையாட்டு பொம்மையையே ஒரு நட்பாக பாவித்து அவைகளுடன் பேசிக் கொண்டும் கொஞ்சிக் கொண்டும் தானே ஒரு நட்பையும் சுற்றத்தையும் குடும்பத்தையும் உருவாக்கிக் கொண்டு குதூகலமாக விளையாடுவார்கள். கற்பனையில் ஒரு நட்பை உருவாக்கிக் கொண்டு அவர்களுடன் சிரித்து மகிழ்ந்து குதூகளிப்பார்கள். 

சில பல குறைகள் இருப்பதாக தனக்குள் புதைந்து போகக் கூடியவர்களையும் பிறரோடு சிரித்து பேசி மகிழ செய்யும் போது அவர்கள், தங்கள் குறைகளையும் பிரச்னைகளையும் மறந்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்கிறது ஆய்வுகள். 

ஆனால் நல்ல மனநிலையில் இருக்கும் போது பழகக் கூடிய உறவுகளையே இன்று நாம் நிறைத்து வைத்திருக்கிறோம். ஏதாவது மன வருத்தம் ஏற்பட்டால் யாருக்கும் அது தெரிந்து விடக் கூடாது என்று ஒதுங்கிக் கொள்ளவே முயல்கிறது மனம். 

உங்களுக்கு தெரியுமா? மன அழுத்தம் என்றால் என்ன என்பதற்கு மனஇயல் அகராதியில் பதினெட்டு விதமான அர்த்தங்கள் கொடுத்திருக்கும். ஆனால் மகிழ்ச்சி என்றால் என்ன என்பது பற்றி அந்த அகராதியிலேயே இருக்காது. இது நமக்கு எவ்வளவு பெரிய முக்கியமான விஷயத்தை எடுத்து சொல்கிறது என்று பாருங்கள். மகிழ்ச்சியான மனநிலையோடு இருப்பவர்களுக்கு மனஅழுத்தத்திற்கு இடமில்லை என்ற பெரும் புரிதலை இது ஏற்படுத்துகிறது. 

முன்பு மனஇயலில், உங்களுக்கு என்ன பிரச்னை, எது உங்களிடம் சரியாக இல்லை அதை எப்படி சரி செய்வது என ஒருவரின் மனதில் இருக்கும் நெகடிவ் எண்ணங்களை மனோதத்துவ முறையில் அணுகி அவற்றை களைந்து விடும் முறையே இருந்தது. ஆனால் இப்போது அதற்கு பதிலாக பாசிட்டிவ் எண்ணங்களை மனதில் விதைத்து அதன் தாக்கத்தை அதிகப் படுத்தும் பாஸிடிவ் சைக்காலஜி என்ற புதிய அனுகுமுறை வந்து விட்டது. இருளை அள்ளி வெளியில் வீசுவதற்கு பதில் ஒரு விளக்கை ஏற்றி இருளை நீக்கும் இந்த அனுகுமுறை உங்கள் நிறைகளை பார்த்து அதை மேலும் மேலும் அதிகரிக்கும் யுக்திகளை கையாளும். 

இந்த முறையை நாம் ஒவ்வொருவரும் புரிந்து அதை நம் அன்றாட வாழ்க்கையில் கையாள முயன்றால்... ஒவ்வொருவரிடமும் இயல்பாக இருக்கக் கூடிய அன்பும், கனிவும், பாசமும், நன்றியுணர்ச்சியும், புரிதலும், பெருந்தன்மையும் அழகான முறையில் போற்றப் பட்டு இன்னும் அதிகரிக்கும். அது மன அழுத்தம் என்ற சொல்லுக்கே இடம் இல்லாமல் இனிமையான மகிழ்ச்சியான உள்ளத்தையும் கறை இல்லாத எண்ணங்களையும், நல்ல உறவுகளையும் வாழும் திருப்தியையும் தரும். 

மற்றவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்ளவே முடியாமல் சமுகத்தோடு ஒன்றாமல் இருப்பவர்கள் மகிழ்ச்சியற்று தவிக்கிறார்கள் என்கிறது ஆய்வுகள். 

மகிழ்ச்சியான மனநிலை நல்ல உறவுகளைத் தரும். நல்ல உறவுகள் மகிழ்ச்சியான மனநிலையை தரும். 

மனிதர்களிடம் உண்மையான அன்பு இல்லாமல் மேலோட்டமாக பழகும் போது அவர்கள் கேட்டது எல்லாம் கிடைத்தாலுமே அவர்கள் மனம் வெறுமையாகவே இருக்கிறது. உண்மையில் உணர்வு பூர்வமான உறவுகளே மனதில் ஒரு பாதுகாப்பை ஒரு வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுக்கிறது. அதை உணர்ந்து கொண்டால் மகிழ்ச்சி மனதில் என்றும் இருக்கும்.

 

Dr. ஃபஜிலா ஆசாத்

Watch "Dr. Fajila Azad" on YouTube

Add new comment

6 + 1 =