கவலையில எம்மனசு கல்லாகி போயிடுச்சு | அஸ்வின்


Ashwin

அர அடி வயித்துக்கு
அடிமாடா உழச்சாலும்
நித்தம் ஒருவேள மட்டும் 
நோன்புலதான் போகுது...!!

படிச்சா பய பாத்துக்குவானு 
அடிமையா உழச்சு அப்பன்
தினம் பாதி தின்னு எனை
பட்டமும் படிக்க வச்சான்...!!

பாஸ் மார்க்கு வாங்கீட்டு
பகட்டா ஓடி வந்தா
படுபாவி கைநீட்டம் கொடுத்தாதான்
வேலையின்னு சொல்லிபுட்டான்...!!

நாட்டுல வேல இல்ல
வீட்டுல வசதியில்ல
சோத்துக்கு வழிதேடி
சேத்துல கால வச்சேன்...!!

தோட்டுல தண்ணியில்ல
காட்டுல விளச்சலில்ல
காதலிச்சு கைபிடிச்சதுக்கு
கஞ்சி ஊத்தவும் வக்கில்ல...!!

வேதனைய பாடையேத்த
விளஞ்ச நிலத்த வித்துபுட்டு
விமானம் ஏறி நானும்
வெளிநாடு பறந்துட்டேன்...!!

பத்து காசு பார்க்கணும்னு
பகலிரவா வேலபாத்து 
களைப்புல வீடு வந்தா அங்க
கண்டுக்கிட ஆளு இல்ல...!!

சீக்கிரம் வந்திடு மாமா
உம் புள்ள உதைக்குறான்னு
கட்டுனவ கண்கலங்க, கவலையில
எம்மனசு கல்லாகி போயிடுச்சு...!!

செத்ததுக்கும் போகாமா
பெத்ததையும் பார்க்காம,
பணம் பறிக்க பறந்துவந்து
பல வருடம் ஓடிடுச்சு...!!

வீட்டுல அடுப்பெரிய
அயல்நாட்டு அடிமையாகி,
நல்லதுக்கும் போகாம
சொந்தமெல்லாம் தொலச்சுபுட்டேன்...!!

உழச்சதெல்லாம் போதுமுன்னு
ஊருக்கு திரும்ப‌ நினச்சா,
கூட்டி வந்த வாலிபத்த
அங்கேயே அழிச்சுபுட்டேன்....!!

#Ash | அஸ்வின்

Add new comment

3 + 0 =