அப்பாவிகளின் ‘மரணத்திற்கு’ யார் காரணம்?


Death

நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தேன். அவருடைய கேள்விகள் சமீபத்தில் நடந்த சாத்தான்குளம் படுகொலைகள் பற்றி திரும்பியது: சாத்தான்குளத்தில்‘தந்தையும், மகனும்’இறந்து போனதற்கு யார் காரணம்? அந்த ‘அப்பாவிகள்’ செய்த தவறு என்ன? அவர்கள் ஏன் ‘அநியாயமாக’ கொல்லப்பட வேண்டும்? அந்த குடும்பம் என்ன தவறு செய்தது? ‘அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய ‘கொடூரன்’ஒருவன் செய்ததவறுக்காக, ‘அப்பாவிகள்’ உயிர் எதற்காகப் பறிக்கப்பட வேண்டும்? யாரோ செய்கிற குற்றத்திற்கு, அந்த குடும்பத்தில் இருக்கிற பெண்கள் ஏன், காலம் முழுவதும் துன்பத்தை அனுபவிக்க வேண்டும்?

கடவுள் நினைத்திருந்தால், உண்மையில் ‘கடவுள் இருந்திருந்தால்’ அந்த இரண்டு அப்பாவி உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாமே? அவர்கள் வலியால் துடித்தபோது, அந்த கதறல் கடவுளுக்கு எப்படி, கேட்காமல் இருந்திருக்கும்? கடவுள் ‘நீதியின்’ கடவுள் அல்லவா? யார் வழியிலாவது, அவர் அந்த இரண்டு உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாமே? அவர்கள் அப்பாவிகள் இல்லையா? ஏழைகள் இல்லையா? ஆதரவற்றவர்கள் இல்லையா? சாக வேண்டியவர்கள் இல்லையே? - என்றெல்லாம் வரிசையாக, கேள்விக்கணைகளைத் தொடுத்த வண்ணம் இருந்தார். அவருடைய கேள்வியின் அடிநாதம் இதுதான்:

‘அப்பாவிகளின் துன்பத்திற்கு யார் காரணம்? ‘நோ்மையாளர்கள்’ எதற்காக துன்பப்பட வேண்டும்? Why Innocent People suffer?

இந்த கேள்விகளோடு அவர் நிறுத்தி விடவில்லை. ‘இந்த உலகத்தில், நல்லவரெல்லாம் துன்பப்பட்டுக்கொண்டிருக்க, கெட்டவர்கள்மட்டும் எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்கிறார்களே! இவ்வளவு அநியாயம்செய்தும், இவ்வளவு ‘தெரிந்து’ செய்தும்,   ‘கெட்டது’ ஒன்றும் அவர்களுக்குநடக்கவில்லையே? தண்டனை எதுவும், இந்த உலகத்தில்கிடைக்கவில்லயே?’ என்று சொன்னவர், கடைசியில், இவற்றுக்கெல்லாம் காரணமே, ‘கடவுள்’ தான்’ என்றார். அத்தோடு நிறுத்திவிடவில்லை, ‘கடவுள் ஒரு கொடூர உள்ளம் படைத்தவர். அடுத்தவர் துன்பத்தைப் பார்த்தும் பாராமுகமாய் இருக்கிற ‘ஸடிஸ்ட்’. குற்றம் செய்கிறவர்களுக்கு உடனடியான‘நீதி’ வழங்காதவர். அவர் மனச்சாட்சியே இல்லாதவர்என்றெல்லாம், அவருடைய ஆதங்கத்தை அடிக்கிக்கொண்டே போனார்.

உண்மையில், இந்த கேள்விகள், அவருடைய கேள்விகள் மட்டுமல்ல, கடவுளை ‘நம்புகிற’ஒட்டுமொத்த மானுட குலத்தின் கேள்வி. கடவுள் ஏன் ‘அநீதிகள்’நடக்கிறபோது, அமைதியாக இருக்கிறார்?‘தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்’என்று, அநீதி இழைத்தவர்களே இந்த வார்த்தைகளை, தங்கள் வாயால் சொல்லி ‘தர்மத்தையே’ கேலிக்கூத்தாக்குகிறபோதும், கடவுள் பதில் தரமாட்டாரா? ‘கடவுளின் வார்த்தைகள்’என்று நாம் சொல்கிற ‘மத நூல்கள்’வெறும் ‘புராணம்’தானா? அப்பாவிகளின் ‘மரணத்திற்கு’, ‘நீதிமான்களின் துன்பத்திற்கு’ கடவுள், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகத்திலேயே‘நீதி’வழங்க மாட்டாரா? What is the answer for the Innocent Suffering from God?

முதலில், ‘கடவுள் துன்பத்தைக் கொடுக்கிறவரா? தீமை கடவுளிடமிருந்து வர முடியுமா?’ என்கிற கேள்விகளுக்கு, நாம் பதில் கண்டுபிடிப்போம்.  யாக்கோபு எழுதிய திருமுகத்தில் (1:13) “சோதனை வரும்போது, ‘இச்சோதனை கடவுளிடமிருந்து வருகிறது’ என்று யாரும் சொல்லக்கூடாது. ஏனெனில், கடவுள் தீமையின் தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை. அவரும் எவரையும் சோதிப்பதில்லை” என்று சொல்லப்பட்டிருந்தாலும், பழைய ஏற்பாடு யோபுவின் புத்தகத்தில், ‘யோபுவைச் சோதிப்பதற்கு, சாத்தானுக்கு,கடவுளே அனுமதியளிப்பதையும்’ வாசிக்கிறோம். இது முரண்பாடு தானே? இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்?

 ‘எல்லாவற்றிற்கும்’ கடவுளைத் தொடர்புப்படுத்தி பார்க்கிற பார்வை, இஸ்ரயேல் மக்களுடைய பார்வை. இந்த உலகத்தில் நடக்கிற எல்லாவற்றிற்கும் ‘இறைவனே’ காரணம் என்பது தான், அவர்களின் ‘கடவுளைப்’ பற்றிய பார்வை. நம் இந்து சகோதரர்கள் கூட, ‘எல்லாமே விதிப்படி தான் நடக்கும்’ என்கிற பார்வையை, கடவுளைப் பற்றி வைத்திருக்கிறார்கள். இது ‘இறையியல்’ அல்ல. ஏனென்றால், அறிவியல், சிந்தனை, ஆன்மீக வளர்ச்சி ஏற்படுகிறபோது, இந்த ‘பார்வை’  பற்றிய நம்முடைய புரிதல் மாற்றம் பெறும்,‘மாவுக்கோலம்’வீட்டு வாசலில் எதற்காகப் போடுகிறோம்? என்பதே தெரியாமல் தான், நாம் வீட்டு வாசலில் ‘கெமிக்கல் கோலம்’வரைக்குச் சென்று விட்டோம். ஆனால், ‘அறிவியல்’வளர்ந்து, அதனை நமக்குப் புரிய வைக்கிறபோது, ‘அதனை’நாம் மாற்றிக்கொள்கிறோம். நம் முன்னோர்களின் ‘உன்னதமான’மனம் கண்டு புளங்காகிதம் அடைகிறோம்.

இதேபோலத்தான், இஸ்ரயேல் மக்கள், கடவுளைப் பற்றிப் பார்த்த ‘விவிலிய’பார்வை, இரண்டாயிரும் ஆண்டுகளுக்கு முந்தைய பார்வை. அறிவியல் வளர்ந்திருக்கிற இப்போதும், அதே பார்வையில் பார்க்க வேண்டும் என்கிற தேவையில்லை. எனவே, எல்லாவற்றிற்கும் கடவுளைக் காரணமாக பார்க்கும் அவர்களின் ‘பார்வையே’ யோபு புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கிறதே தவிர, கடவுள் எப்போதும் துன்பத்திற்கு காரணமாக இருக்க முடியாது என்பது தான், அடிப்படை இறையியல்.‘பார்வைகள்’மாறும். ஆனால், ‘இறையியல்’ எப்போதுமே மாறாது. ஆக, ‘கடவுள் துன்பத்தைத் தருகிறவர் அல்ல’ என்பதும், ‘சோதனை எதுவும் கடவுளிடமிருந்து வருவதல்ல’ என்பதும் இப்போது முதல் கட்ட தெளிவு. நம்முடைய கேள்விக்கு வருவோம்: அப்பாவிகள் ஏன் தண்டிக்கப்படுகிறார்கள்? நீதிமான்கள் எதற்காக துன்பப்படுகிறார்கள்? அந்த நேரத்தில் கடவுள் ஏன் அமைதியாக இருக்கிறார்?

இன்று, நம் தமிழகத்தில், ‘நோ்மையாளர்களுக்கான’ துன்பமாக நாம் பார்க்கப்படுவது என்ன? ‘சவால்கள், அநீதி, மிரட்டல், கொலை, பொய் வழக்குகள், அவமானம். ‘அப்பாவிகளின் துன்பமாக’ பார்க்கப்படுவது என்ன?  விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகள், சாத்தான்குளம் படுகொலை, மன வளர்ச்சியில்லாத குழந்தைகளின் பிறப்பு, ஆணவக்கொலைகள், ஊனமுற்ற குழந்தைகளின் பிறப்பு, குழந்தையில்லாதவர்கள், கைசூம்பிப்வோனவர்கள். – இத்தனை துன்பங்களும் கடவுளிடமிருந்து வந்ததா? என்று ஒரு நிமிடம், சற்று பொறுமையாக நாம் சிந்தித்தோம் என்றால் பதில்,‘கண்டிப்பாக இல்லை’ என்பது தான். ஏனென்றால்,‘இந்த ‘உலகத்தில்’ நடக்கிற 90 விழுக்காடு துன்பங்களுக்கு கடவுள் காரணமில்லைஎன்பதை, “நவீன அறிவியல் உலகின் குழந்தைகள்” என்று மார்தட்டிக்கொள்கிற நமக்கு, சொல்லித் தெரியவேண்டியதில்லை.

அப்படியென்றால் யார் காரணம்? இங்கிருக்கிற ‘ஆட்சியும்’ ‘அதிகாரமுமே’ இந்த உலகத்தில் நடக்கிற அனைத்தையும், ஏன் மேற்சொன்ன 90 விழுக்காடு ‘அப்பாவிகளின்’ ‘நோ்மையாளர்களின்’ துன்பத்திற்கான காரணிகள். ‘மக்களுக்கு’ ஒன்றும், ‘தங்களுக்கு’ ஒன்றுமாக, ஒவ்வொன்றிலும் பிரித்துப் பார்க்கிற மனநிலை உள்ளவர்களால், ‘துன்பத்திற்கு’ காரணமானகத்தான் இருக்க முடியுமே தவிர, இந்த துன்பத்தை ‘மண்ணிலிருந்து’ அகற்றுவதற்கு, முயற்சி எடுக்கிறவர்களாக இருக்க முடியாது.

உதாரணமாக, கொரோனா நோயின் கொடுமையின் உச்சத்தில் இருக்கும் நம் தமிழகத்தில், நோய்க்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க முடியாத நிலையில், ‘இறப்பு’ என்பதைத் தடுக்க முடியாதது என்பது உண்மை தான். ஆனால், இங்கே நிகழ்ந்த பல‘இறப்புகள்’ கண்டிப்பாக, தவிர்க்கப்பட்டிருக்க முடியும். அரசு மருத்துவமனையை ‘உலகத்தரத்தில்’ இருக்கிறது என்று சொல்கிற ‘ஆட்சியாளர்கள்’, தங்களுக்கு மட்டும் ‘கொரோனா தொற்று’ஏற்படுகிறபோது, ஏன் ‘தனியார்’ மருத்துவமனைகளுக்குச் செல்கிறார்கள்?” என்கிற ஒற்றைக் கேள்விக்கான பதில் தான், மேலே எழுந்த அத்தனை கேள்விகளுக்குமான ஒரே பதில்.

ஆனால், இவர்களை மட்டும் குற்றம் சொல்லி, அவ்வளவு எளிதாக நாம் கடந்து சென்று விட முடியாது. இந்த குற்றப்பழியில் ‘பெரும்பான்மையான’பங்கு, நமக்குத்தான். எல்லாவற்றிற்கும்‘கடவுள் என்ன செய்கிறார்?’ என்று கடவுளைக் கேட்பதற்கு முன்னதாக, ‘ஆட்சியாளர்கள் தான் காரணம்’ என்று, அவர்களை  மட்டும் வசைபாடுவதற்கு முன்னதாக, எதனால் இத்தகைய ‘இழிநிலை’ ஏற்பட்டது? என்பதையும், அறத்தின்பால் சிந்தித்துப் பார்ப்பது தான், நியாயமான வாதமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஏனென்றால், இங்கு நடக்கிற அத்தனை துன்பங்களுக்கும் யார் காரணம்? என்று தெரிந்திருந்தும், மீண்டும் மீண்டும் இந்த அநீதிச் செயல்களுக்குக் காரணமானவர்களையே, ‘ஆட்சியில்’ அமர வைப்பது யாருடைய குற்றம்? உண்மையில், இவர்களுக்கு வாக்களித்த, ‘ஒவ்வொருவரும்’தான், இந்த ‘அப்பாவிகளின்’ மரணத்திற்கும், ‘நோ்மையானவர்களின்’ மரணத்திற்கும் முழுமுதற் காரணமானவர்கள். It is not “INNOCENT SUFFERING”, but our selfishness, our irresponsibility, our ‘No Guilty Conscience’ to vote for money, CAUSE the INNOCENT& the HONEST suffer.

வறுமையில் வாடும் விளிம்பு நிலை மக்களின் கதறல் தங்கள் ‘காதுகளைக்’ கிழித்தாலும், கடைசி வரை யாருக்கும் உபயோகம் இல்லாமல் ‘ஆயிரம் கோடிகளை’ தன்னோடு வைத்துக்கொண்டு புதைந்து போகும், ஆட்சியாளர்களுக்கே காலம் முழுவதும் ஓட்டுப்போடும் ‘நாம்’‘ஸடிஸ்ட்’களா?அல்லது, ‘இழப்பது தன் மகனே என்றாலும், இந்த உலகத்தை மீட்க அவனுடைய உயிர் தேவைப்படும் என்றால், அதனை கொடுக்கவும் தயார்’ என்று, இந்த பூமியில் வாழும் அத்தனை மக்களையும் காப்பாற்ற ‘தன் ஒரே மகனை’தாரை வார்த்த அந்த கடவுள் ‘ஸடிஸ்ட் மனநிலை கொண்டவரா?

இலட்சக்கணக்கான மக்கள் கொத்து கொத்தாக மடிந்து கொண்டிருக்கின்றபோது, ஆட்சியிருந்தும், அதிகாரத்தில் இருந்தும், ‘சுயநலத்திற்காக’நாடகமாடி, “தன்”வாரிசுகளுக்குப் பதவியைப் பெறுவதிலேயே காலம் கழித்த ஆட்சியாளர்களுக்கு, ‘கண்ணிருந்தும் குருடராக இருந்து’வாக்கு செலுத்திய ‘நாம்’கொடுமையாளர்களா? அல்லது, “கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதாமல், தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பாகி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச்சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்ட”கடவுள் கொடூரமானவரா? (பிலிப்பி 2:6-8).

‘தம்மையே’ பலியாக்கி, பெறுதற்கரிய எட்டாத இடத்தில் இருந்த ‘மீட்பின்’திறவுகோலை, தன் விலைமதிப்பில்லாத இரத்தத்தைக் கொடுத்து “வாழ்வின் கதவுகளைத்” எளிதாகத் திறக்கும் வகையில், அதனை நம் கையிலேயே கொடுத்தாலும், அதையும் ‘திருடர்கள்’கையில் கொடுத்துவிட்டு,திருடர்கள் என்று தெரிந்தே கொடுத்துவிட்டு, புறங்கைகளைக் கட்டிக்கொண்டு, நடக்கிற கொடுமைகளையெல்லாம் ‘யாருக்கோ’நடப்பதைப் போல வேடிக்கைப் பார்க்கும் நாம், அதைப்பிடுங்குவதற்கு அதிகாரம் இருந்தும்,‘கடவுளே’‘மந்திரம்’செய்து, ‘தந்திரம்’செய்து, திருடர்களிடமிருந்து காப்பாற்றி,நம் கையில் ஒப்படைக்க வேண்டும் என்று நினைப்பது, எவ்வளவு மூடத்தனம்? தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள்: பழத்தை உறித்துக் கொடுத்தால் மட்டும் போதாதா? வாயிலும் ஊட்ட வேண்டுமா? என்று. அதேபோலத்தான், நாம் கடவுளைப் பார்த்துக் கேள்வி கேட்பதும்.

சாத்தான்குளத்தில் இரண்டு அப்பாவிகள் தங்கள் உயிரை இழந்ததற்குக் முதன்மையான காரணம்,‘அதிகாரத்திமிர்’. ஏனென்றால், எதைச்செய்தாலும், தன்னை ‘அதிகாரவர்க்கம்’ காப்பாற்றும் என்கிற ஆணவம்.எவ்வளவு ஆணவம் கொண்டிருந்தாலும், தோ்தல் நேரத்தில் ‘வீசுவதை வீசி எறிந்தால்’,மக்கள் தங்களுக்கு மாறி மாறி வாக்களித்து, அதிகாரக் கட்டிலில் உட்கார வைத்து விடுவார்கள் என்கிற, மமதையே, இங்கு நடக்கிற எல்லா அப்பாவிகளின் துன்பங்களுக்கும், நீதிமான்களின் துன்பங்களுக்கும் மூல காரணம். இந்த இரண்டையும் தாண்டி, இவற்றிற்கெல்லாம், ‘முக்கியமான காரணம்’ இந்த திமிரும், செருக்கும், ஆணவமும் இவர்களின் தலைக்கேற முக்கிய காரணமாயிருக்கிற,‘சாதி, இனம், மொழி, மதம், சுயநலம் மற்றும் ‘கட்சி’ சின்னங்களைப் பார்த்து, வாக்களிக்கும் ஒவ்வொரு ‘மதியிழந்த’ வாக்காளனும், இந்த ‘அப்பாவிகள்’மற்றும் ‘நீதிமான்கள்’ துன்பப்பட காரணம்.

‘நான் ஒருவன் மட்டும், நோ்மையாய் இருந்தால், இந்த உலகம் மாறிவிடவாப் போகிறது? ‘இங்கு யார் தான் அநியாயம் செய்யவில்லை?’ என்கிற, ‘அறமற்ற’ வார்த்தைகளை, ‘ஈவு இரக்கமின்றி’ சொல்லி விட்டு, எவ்வளவு ‘எளிதாக’ நம்முடைய ‘குற்றப்பழியிலிருந்து’ தப்பித்துக் கொள்ள பார்க்கிறோம்?

‘குன்கா’ என்கிற ஒற்றை ‘நேர்மை’ மனிதன் தானே, நீதியின்பால் மக்கள் இன்னும் ‘கொஞ்சம்’ நம்பிக்கை கொண்டிருக்க காரணமாக இருக்கிறது?

‘சகாயம்’ என்கிற ஒற்றை மனிதனின் ‘நோ்மை’ தானே, ‘கடவுள் இன்னும் இருக்கிறார்’ என்கிற நம்பிக்கை விதைத்துக் கொண்டிருக்கிறது?

‘பொன் மாணிக்க வேல்’ என்கிற ஒற்றை மனிதனின் நோ்மை தானே, கடவுளையே, இந்த திருடர்களிமிருந்து காப்பாற்ற வேண்டிய அவலநிலையை நமக்கு எடுத்துக் காட்டியிருக்கிறது?

இவர்கள் ‘மனிதர்கள்’ தானே? இவர்களால் எப்படி இவ்வளவு ‘நெஞ்சழுத்தத்தூடு’ அதிகாரத்தை எதிர்த்து நிற்க முடிகிறது?

வருடம் முழுவதும் திருப்பலி கண்டு, நற்கருணை உண்டாலும், வாக்குச் செலுத்தும் அந்த ஒருநாளில் கூட, அத்தனை சுதந்திரம் இருந்தும்,‘நோ்மையாக’நம்முடைய கடமையைச் செய்ய, திராணியற்றவர்களாக அல்லவா இருக்கிறோம்? “இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வதை விட, அவ்வாறு செய்பவரது கழுத்தில், ஒரு எந்திரக் கல்லைக் கட்டி, அவரைக் கடலில் தள்ளிவிடுவது அவருக்கு நல்லது’ (லூக்கா 17:2) என்கிற இயேசுவின் வார்த்தைகள், நம்மை நோக்கிச் சொல்வது போல இல்லையா? இந்த ‘ஆட்சி’ செய்கிறவர்களின் யோக்கியதையை, கடந்து 30 ஆண்டுகளாக தெரிந்திருந்தும், மீண்டும் மீண்டும் அவர்களையே, இந்த அதிகாரபீடத்தில் அமர வைத்து, அவர்கள் மீண்டும் மீண்டும் தவறுகள் செய்வதற்கு ‘காரணம்’ நாமே, நாம் மட்டுமே, கடவுள் அல்ல.‘தீர்வுகள்’இல்லாத பிரச்சனைகள் என்று இங்கு எதுவுமே இல்லை. ஆனால், இங்கிருக்கிற ‘ஆட்சியாளர்களின்’சுய இலாபத்திற்காக’பல பிரச்சனைகளுக்கு ‘தீர்வுகள்’ தேடப்படாமலும், மறைக்கப்பட்டும் கிடக்கின்றன என்பதே, ‘உண்மை’.

தூத்துக்குடியில் வெட்ட வெளியில், பட்ட பகலில், உலகமே பார்த்துக் கொண்டிருந்தபோது, மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையே, நிராயுதபாணியாக நின்ற மக்களைக் ‘கொலை வெறியோடு’ கொன்றது. தூத்துக்குடி மக்கள் என்ன செய்தார்கள்? இந்த திட்டத்தைக் கொண்டு வந்த கட்சிக்கும், இந்த திட்டத்தை ஆதரித்து மக்களைச் சுட்டுக்கொன்ற கட்சிக்கும் தானே, வாக்களித்தார்கள்? இவர்களுக்கு வாக்களித்த ஐந்து இலட்சம் பேரும், இப்போது நடந்து கொண்டிருக்கிற எல்லா‘அப்பாவிகளின் துன்பத்திற்கும்’ ஒருநாள் ‘கடவுளுக்கு’ கணக்கு கொடுக்க வேண்டியவர்களே! பட்டாலும், சுட்டாலும் புத்தி வராத மக்கள் காரணமா? அல்லது கடவுள் காரணமா?

‘அறியாமை’ என்கிற‘வெற்று’ வார்த்தைச் சொல்லி, அவ்வளவு எளிதாக, கடந்து போய் விட முடியாது. விடிய, விடிய இரவு முழுவதும்,வீடு புகுந்து காவல்துறை செய்த அடாவடித்தனத்தை அனுபவித்திருந்தும், கண்ணெிதிரே வீதியில் இவர்களின் அரக்கத்தனமான ஆதிக்க வெறிக்கு, ஒரு 17 வயது இளைஞன்துடித்து துடித்துச் செத்துக்கொண்டிருந்தபோது, அவனை ஏளனமாக, ‘மிருகத்தனமாக’ பூட்ஸ் காலால் உதைத்த ‘காட்சிகளை’ப் பார்த்த பின்னும், ஒரு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியின் ‘வாயிலே’ பட்ட குண்டு, தலை வழியாக துளைத்து வந்த கோரத்தை நேரடியாகப் பார்த்த பின்னும், ஆயிரக்கணக்கான பொய் வழக்குகளைச் சந்தித்த பின்னும், விசாரணை என்ற பெயரில் இரண்டு ஆண்டுகள் ‘நீதி’ வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், அந்த இரத்தக்கறைகளோடு, குற்றப்பழியோடு, ‘பிச்சைக்காசுக்காக’ அநீதிக்கு‘வாக்களிக்க’ மனமிருந்தால், அது அறியாமை அல்ல, அறிந்தே செய்யும் ‘படுகொலை’.

இவர்களை விடுங்கள். மற்றவர்கள் என்ன செய்தோம்? இதே கட்சிகளுக்குத்தானே மாறி மாறி வாக்களித்தோம்? ஒரு கட்சி, மாஞ்சோலையில் ஊதிய உயர்வுக்காக போராடிய தொழிலாளிகளை தாமிரபரணியில் ‘மூழ்கடித்து’ கொன்றது என்றால், மற்றொரு கட்சி, தூத்துக்குடியில் துப்பாக்கியால் கொன்றது? இரண்டு பேருக்கும் என்ன வேறுபாடு? உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்த ஒருவன், அதற்கான தண்டனை அனுபவித்து விட்டுவந்தாலும், அவன் சாகிறவரை, ‘கொலைகாரன்’ பட்டம் கட்டுகிற ‘பகுத்தறிவாதிகளாக’இருக்கிற நாம், அறவழியில், வாழ்விற்காக, வாழ்வாதாரத்திற்காக போராடிய மக்களை, வெறிகொண்டு தாக்கிய, ஒரு நிகழ்வை அல்ல, மாஞ்சோலை, கூடன்குளம், தூத்துக்குடி, பரமக்குடி...என்று எத்தனையோ வன்கொடுமைகளை, தொலைக்காட்சிகளில் ‘உச்சு’ கொட்டி, நெஞ்சம் பதைபதைக்க நம் கண்களால் பார்த்திருந்தும், காதால் கேட்டிருந்தும், ‘பாராமுகமாய்’ வெகு எளிதாக கடந்து போக முடிகிறது என்றால், ‘குற்ற உணர்வேயில்லாமல்’ மீண்டும் மீண்டும் அவர்களுக்கே வாக்கு செலுத்த முடிகிறது நம்மால், ‘சிறிது கூட குற்ற உணர்ச்சியே இல்லாமல்’, அதனால் ஏற்படும் ‘விளைவுகளுக்கு’ மட்டும், கடவுளைப் பழிபோட எப்படி மனம் வருகிறது?

இங்கே ஆட்சி செய்கிறவர்கள் அவர்களாக வருவதற்கு, ‘மன்னராட்சி’ அல்லவே இது!, ‘சர்வாதிகார ஆட்சி’ இல்லையே!, ‘ஏகாதிபத்திய ஆட்சியும்’ அல்லவே!. இங்கு தோ்தல் முறை‘மக்களாட்சி’ தானே? மக்களாகிய நாமே இவர்களை ‘முழு பலத்தோடு’அதிகாரத்தில் உட்கார வைத்து விட்டு, கடவுள் ‘மந்திரம்’ செய்து காப்பாற்ற வேண்டும் என்று, நினைப்பது எவ்வளவு வெளிவேடத்தனம்? அறிவீனமான எண்ணம்? இதுவா அறிவியல் வளர்ச்சி? இதுவா பகுத்தறிவு? இதுவா ஆன்மீகம்?

அடுத்து, நாம் கேட்கலாம்: இங்கு நடக்கிற எல்லா தீர்வுகளுக்கும், மனிதர்களாகிய நாமே, தீர்வு காண வேண்டுமென்றால், கடவுள் எதற்கு? கடவுளிடம் எதற்காக மன்றாட வேண்டும்? கடவுளை எதற்காக தேட வேண்டும்? போன்ற வினாக்களை, நம் ‘அறிவும்’ ‘பகுத்தறிவும்’ ‘ஆன்மீகமும்’ எழுப்பலாம். இங்கே தான், அதற்கான பதிலை ‘இறையியல்’ தருகிறது. ஆன்மீகம் என்பது, வெறும் சடங்குகளும், சம்பிரதாயங்களும் அல்ல. அது ‘கடவுள் மீது நம்பிக்கை கொண்ட’ ஓர் ஆழமான இறையியல்.

 மானிட சமுதாயத்தின், கண்ணீரும்,  கதறல்களும் எங்கெல்லாம், எப்போதெல்லாம் கேவல்களாக, விம்மல்களாக வரலாற்றில் எழுந்திருக்கிறதோ, அப்போதெல்லாம் கடவுள் அவர்களை ‘அநீதியின்’ பிடியிலிருந்து விடுவித்திருக்கிறார் என்பதே, விவிலியம் நமக்கு வழங்கும் மீட்பின் வரலாறு. இது ‘கற்பனை’ அல்ல, ‘கதை’ அல்ல, ‘ஆன்மீக சொற்பொழிவு’ அல்ல, அது ‘ஆழமான இறையியல்’. இதிலே தான், நம் நம்பிக்கை கட்டப்பட்டுள்ளது. ஏனென்றால், கடவுள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கான கடவுள் அல்ல, உலகம் அனைத்திற்கும் அவரே கடவுள்.

எகிப்தில் இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாய் இருந்தபோது, கடவுள் “எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன். அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன். ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன்” (விடுதலைப்பயணம் 3:7) என்று சொல்கிறார். அந்த கதறல்கற்பனை அல்ல, ஆழமான இறையியல் உண்மை. ‘இந்த கதறல் யாருடையது? ‘இந்த கண்ணீர் எவருடையது?’

உண்மையில், இந்த கண்ணீரும், கதறலும், அநீதிகளுக்குத் துணைபோய்விட்டு, வீட்டில் முழந்தாட்படியிட்டு ‘செபிக்கிற’வெளிவேடக்காரர்களான ‘நம்முடைய’ குரல்கள் அல்ல, மேடைகள் எழுப்பி, நற்செய்திக் கூட்டங்கள் நடத்தும் போதகர்களின் ‘கத்தலும்’ அல்ல, மாறாக,செய்யாத குற்றத்திற்காக, தங்களின் ‘வாழ்க்கைக் கணக்கு’ முடியும் முன்பே, அநியாயமாக கொல்லப்பட்ட ஒவ்வொரு ‘அப்பாவிகளின், ‘நீதிமான்களின்’ குரல்களே இவை. ஆண்டவர் காயீனிடம், “நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல், மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது” (தொ.நூல் 4:10) என்ற கேள்வியை, கடவுள் எழுப்பியது,  மாசுமருவற்ற ‘ஆபேலின்’ கதறலைக் கேட்டு மட்டும் தான். இன்றைக்கும், அதே ‘ஆபேலின்’குரல் தான், கடவுளை ‘நீதிக்கான’காலத்தை, தீர்மானிக்கச் செய்வதாக இருக்கும்.

சாலை விதிகளை மீறி, தங்களுடைய சுயநலத்திற்காக ஆண்ட, ஆளும் கட்சியின் ‘அதிகார பலத்தால்’ விதிகளுக்குப் புறம்பாக சாலையை துளையிட்டு வைக்கப்பட்ட பேனரினால், இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டிய உயிரை, அநியாயமாக இழந்த சென்னையைச் சேர்ந்த சுபஸிரி, கோவையைச் சோ்ந்த ரகுபதி இவர்களின் ‘அழுகுரலே’ கடவுளின் காதுகளை எட்டியிருக்கும்!

வயிற்றுப்பசியோடு காத்திருக்கும் தன் குடும்பத்திற்கு, தன் உழைப்பால் உணவு கொண்டு வர, சீறி எழும் அலைகளைக் கண்டும் கலங்காது, ‘கடலன்னை இருக்கிறாள் தன்னோடு’ என்கிற பாசத்தோடு, இராமேஸ்வரம் கடலில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞன் பிரிட்ஜோ, வாழ வேண்டிய வயதில், அரசியல் ஆதாயத்திற்காக, அதிகாரவர்க்கத்தின் ‘இன’வெறிக்காக, நடுக்கடலில் படுகொலை செய்யப்பட்டானே! அந்த இளவலின் ‘கேவலே’, கடவுளின் செவிகளைத் துளைத்திருக்கும்!

திருச்சியில் உஷா என்கிற பெண்ணும், அவள் வயிற்றிற்குள்ளாக இந்த உலகம் எப்படி இருக்கும்? என்பதைப் பார்ப்பதற்கு முன்னதாகவே, ‘அதிகாரவர்க்கத்தின்’ மூர்க்கத்தால், எட்டி உதைக்கப்பட்டு, அநியாயமாக உயிரிழந்த, அந்த இரண்டு அப்பாவி உயிர்களின் பரிதாபச் ‘சாவே’, கடவுளின் கண்களில் கண்ணீர் வரவழைத்திருக்கும்!

இரண்டு ‘தலை’களின், அதிகார பலத்தைக் காட்டுவதற்காக, சுயஇலாபத்திற்காக, தந்திரமாக ‘நாட்டுப்பற்று’ என்று உணர்வேற்றப்பட்டு, இரண்டு நாட்டு மக்களின் உள்ளத்திலும் ‘வெறுப்புணர்வு’ விதைக்கப்பட்டு, அநியாயமாக இந்திய – சீன எல்லையில் உயிர்விட்ட, ‘காரணமே’ தெரியாமல் அழுது புலம்பும், அந்த இராணுவ வீரர்களுடைய, குடும்பங்களின் ‘கண்ணீரே’ கடவுளை, தமிழகத்தின்பால் திருப்பியிருக்கும்.

ஏனென்றால், தங்கள் வாழ்க்கையின் காலம் முடிவதற்கு முன்னதாகவே, ஒரு சிலரின் சுயநலத்திற்காக, பேராசைக்காக, பண, அதிகார பலத்திற்காக, ‘வாழ வேண்டிய’ வயதில், அவர்கள் கனவுகள் நிறைவேறுவதற்கு முன்னதாகவே, இவர்களின் வாழ்வு பறிக்கப்பட்டதை, அவர்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அவர்களின் ‘ஆன்மா’ நம் நடுவே தானே, இன்னும் கேவிக் கேவி அழுது கொண்டிருக்கும்!‘எங்கள் வாழ்க்கை, எங்களிடமிருந்து ‘அநியாயமாக’ பறிக்கப்படுவதற்கு, நாங்கள் என்ன தவறு செய்தோம் கடவுளே?’ என்று, அந்த ‘ஆன்மாக்களின்’நெஞ்சின் ஆழத்திலிருந்து ஓங்கி ஒலிக்கிற கேவல் தான், ‘நீதியின்’ கடவுளை, தன் திட்டத்தைச் செயல்படுத்த, விரைவுபடுத்துவதாக இருக்கும்!

இவர்களுடைய குரல் மட்டுமல்ல, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், ‘அநீதி’ எங்கெல்லாம் நடக்கிறதோ, அங்கெல்லாம் தன்னந்தனியாக நின்று, எத்தனை வெறிநாய்கள் தன்னை நோக்கிக் குரைத்தாலும், அதிகாரவர்க்கம், தன் அதிகாரம் என்கிற இரும்புக்கரம் கொண்டு, குரல் வளையை நெறித்தாலும், சளைக்காமல், ‘நீதி’க்காக ஓங்கி குரல் கொடுத்துக்கொண்டிருக்கும், ‘நந்தினி’, ‘வளர்மதி’‘கோவன்’ இவர்களைப் போன்ற, இன்னும் நூற்றுக்கணக்கான, உன்னதமான ‘ஆன்மாக்களின்’ குரல்களும், இவர்களோடு இணைந்து, ‘நீதியின்பால்’ தாகம் கொண்ட, இயலாமையால் ஒன்றும் செய்ய இயலாத நிலையிலிருக்கிற, அநீதிக்கு எப்போதும் துணைபோகாத, ‘தன்னலமில்லாத’ ஆன்மாக்களின்’மன்றாட்டுமே, கடவுளின் இரக்கப்பார்வையை நம் ‘தமிழகத்தின்’ மீது படரச்செய்திருக்கும்!

‘இதோ! தமிழகத்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்!அநீதி இழைக்கப்பட்டது தெரிந்தும், நீதி பெற வழி தெரியாமல் கணவன், சகோதரனை இழந்து, தெருவில் நின்று கதறி அழும், அந்த தாய் எழுப்பும் குரலையும் கேட்டேன்” என்பது தானே, நாம் ‘நம்பும்’ கடவுளின் வார்த்தையாக இருக்க முடியும்? நம் கடவுள் பேரன்பு கொண்டவர் தான். சினம் கொள்ள தாமதிப்பவர் தான். ஆனால், அவர் ‘நீதி’யின் கடவுள். அவர் ‘அமைதியின் அரசர்’ தான். ஆனால், ‘அமைதியான அரசர்’ இல்லை.

ஏற்றத்தாழ்வுகளை அகற்றும், கோணலை நேராக்கும், ‘அமைதியை’நிலைநாட்டும் அரசர். “நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்” (மத்தேயு 10:34) என்கிற இயேசுவின் வார்த்தைகளைின் பொருள், ‘சமத்துவம்’என்னும் விழுமியத்திற்கு எதிராக நிற்கும், அத்தனை பேருக்குமான ‘வாளாக’த்தானே, இருக்க முடியும்?‘உடன்பிறந்தவனே என்றாலும், நீதிக்கு முன்னால் எல்லாரும் சமம்’என்பது தானே, அதன் பொருளாக இருக்கும்! ஏனெனில், அவர் ‘சமத்துவத்தின்’கடவுள். ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து, ‘சமத்துவத்தை’நிலைநாட்டும் கடவுள்.

எங்கெல்லாம் தீய சக்தி அதிகாரவர்க்கத்தில் உட்கார்ந்து கொண்டு, ‘ஆதிக்கம் செலுத்தி’சமத்துவத்தைக் குலைக்க முயல்கிறதோ, அங்கெல்லாம், சாதாரணமான ‘தாவீதைக்’ கொண்டு, வெறும் கூலாங்கல்லால், மலையையும் சாய்த்து, ‘சமத்துவத்தை’ நிலைநாட்டியவர் நாம் ‘நம்பும்’ கடவுள். கடவுள் இஸ்ரயேலை தேர்ந்தெடுத்தது, ‘ஆதிக்கம்’ செலுத்தி ‘ஏற்றத்தாழ்வுகளை’ உண்டாக்க அல்ல, மாறாக, இந்த உலகத்தில் ‘சமத்துவத்தை’ ஏற்படுத்த. விவிலிய நிகழ்வுகள் கற்பனை அல்ல. நாம் நம்பும் ‘ இறையியலின்’ ஆணிவோ்.

அன்றைக்கு, இஸ்ரயேல் மக்களை விடுவிக்க, மோசேயை தோ்ந்தெடுத்தார். மோசேயின் அழைப்பு, அந்த நேரத்தில் அவருடைய ‘இசைவுக்கானதாக’ இருந்திருக்கலாம். ஆனால், இஸ்ரயேல் மக்களை மீட்க, கடவுள் எப்போதோ, ‘தாயின் கருவில் உருவாவதற்கு முன்னதாகவே’ மோசேயைத் தோ்ந்தெடுத்திருக்க வேண்டும். ஏனென்றால், “நாம் கேட்பதற்கு முன்னரே, நம் தேவையை நம் கடவுள் அறிந்திருக்கிறார்” (மத்தேயு 6:8) என்பது தான், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள்.

எனவே, இப்போதைய நம்முடைய நம்பிக்கை, நிச்சயம், ‘காலம் கனிகிறபோது’ தன்னுடைய மீட்புத்திட்டத்தை நிறைவேற்ற தன்னுடைய ‘கருவி’யை எப்போதோ தெரிந்தெடுத்திருப்பார்’ என்பதே. நம் தமிழகத்தை சூழ்ந்து கொண்டிருக்கும் ‘இருளின்’ பிடியிலிருந்து மீட்பதற்கு, நிச்சயம் திருவுளம் கொண்டிருப்பார் என்பதே, நம் ஆழமான இறையியல் நம்பிக்கை!

உலகத்தின் பார்வையில், நம்முடைய ‘நம்பிக்கை’ மடமையாக தெரியலாம். ஒருவேளை, அப்படி நடக்கவில்லையென்றால், தூய பவுலடியாரின் வார்த்தைகளைப் போல, “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நாங்கள் பறைசாற்றி நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாகி” விடுமே! (1கொரி 15:14).  நாம் கடவுள் மீது கொண்டிருக்கின்ற ‘நம்பிக்கையும்’ வீணாகிப்போய்விடுமே! ‘இது எப்படி நிகழும்? இங்கே இருக்கிற அதிகாரத்தின் பலன், அநீதிச் சக்திகள், அசுர பலமாக இருக்கிறபோது, கடவுள் எப்படி இவற்றைச் செயல்படுத்த முடியும்? என்கிற சந்தேகம் நமக்குள் எழலாம். ஆனால், அந்த சந்தேகங்கள் எழுந்தபோதும், “இதோ! ஆண்டவருடைய அடிமை. உம் சொற்படியே எனக்கு ஆகட்டும்” என்று ஏற்றுக்கொண்டதால் தானே, அன்னை மரியாள் விசுவாசத்தின் தாய்!

“குறித்த காலத்தில் நிறைவேறுவதற்காகக் காட்சி இன்னும் காத்திருக்கின்றது. முடிவை நோக்கி விரைந்து செல்கின்றது. ஒருக்காலும் பொய்க்காது. அது காலந்தாழ்த்தி வருவதாகத் தோன்றினால், எதிர்பார்த்துக் காத்திரு. அது நிறைவேறியே தீரும். காலம் தாழ்த்தாது” (அபகூக்கு 2: 3). காத்திருத்தல் தானே நம் விசுவாசம்! “மனித ஞானத்தை விட கடவுளின் மடமை ஞானம் மிக்கது. மனித வலிமையை விட, அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது” (1கொரி 1: 25). இதுவே நம் விசுவாசம். ஏனென்றால், “கடவுள், ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தோ்ந்து கொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தோ்ந்து கொண்டார்” (1கொரி 1:27). இவை வெறும் வார்த்தைகள் அல்ல, ஆழமான இறையியல் உண்மை.                      

கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறநாம், இந்த நேரத்தில் செய்ய வேண்டியது என்னவாக இருக்கும்? இயேசு சொல்கிறார்:“இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்” (மத்தேயு 24: 13). இங்கு நடக்கிற குழப்பங்களும், அநியாயங்களும் நமக்கு மன வருத்தத்தைக் கொடுக்கலாம். கொரோனா போன்ற கொடிய நோய்களும், பஞ்சங்களும், சாத்தான்குளம் போன்ற வேதனையான சம்பவங்களும், உலகம் அழியப்போகிறதோ? என்கிற பயத்தை உண்டு பண்ணலாம். ஆனால், அது உலகம் அழிவதற்கான அறிகுறிகளாக இருக்க முடியாது. ஏனென்றால், கடவுள் இந்த உலகத்தை அழிப்பதற்காக உண்டாக்கவில்லை. நாம் ‘மகிழ்ச்சியாக’ வாழ்வதற்கே படைத்தார். படைத்த உலகம் மனிதனின் ‘கீழ்ப்படியாமையால்’ அழிவுக்குச் சென்றபோதும், தன் மகனின் ‘கீழ்ப்படிதலால்’ இந்த உலகத்தை மீட்கிற அளவுக்கு, கடவுள் நம் மீதும், இந்த உலகின் மீதும் அன்பு கொண்டிருக்கிறார். எப்போதெல்லாம், இந்த உலகம் ஆணவத்தினால், பதவி வெறியினால், ‘தங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது’ என்று அகங்காரத்தினால் ‘அதிகாரவர்க்கம்’ அதிகாரம் செலுத்த முயன்றதோ, அப்போதெல்லாம், கடவுள் தான் தேர்ந்தெடுத்த சாதாரண ‘கருவிகளைக்’ கொண்டு, சமத்துவத்தை நிலைநாட்டியிருக்கிறார்.

அவர் ‘அழிவை விரும்புகிற கடவுள்’ அல்ல. ‘மனமாற்றத்தை’ எதிர்பார்க்கிற கடவுள். ‘நீதிமான்களை அல்ல, பாவிகளையே மீட்க வந்தேன்’ என்பதே, நம் ஆண்டவர் இயேசுவின் அமுத மொழிகள். அப்படியென்றால் ‘நடக்கிற நிகழ்வுகளை’ நாம் எப்படிப் புரிந்து கொள்வது? விவிலியம் சொல்கிறது: “இவையனைத்தும் பேறுகால வேதனைகளின் தொடக்கமே” (மத்தேயு 24:8). நம் கடவுள், எங்கோ தொலைவில் இல்லை. அவர் நம்மோடு, நம்மில் ஒருவராகவே இருக்கிறார். ‘இம்மானுவேல்’ என்றால், கடவுள் நம்மோடு என்பது தானே பொருள்!

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

 

Add new comment

1 + 0 =