கவனம் அவரின் அழைப்பில், அற்புதத்தில் அல்ல! | ஆர்.கே. சாமி | VeritasTamil

15 ஏப்ரல் 2024                                                                                           

பாஸ்கா 3ஆம் வாரம் - திங்கள்

தி. பணிகள்  6: 8-15                                             

யோவான் 6: 22-29

முதல் வாசகம்:

இந்த வாசகப் பகுதியில், திருத்தொண்டர்களில் ஒருவராகிய ஸ்தேவான் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வு விவரிக்கப்படுகிறது.  அவர் மக்கள் மத்தியில் தனது ஞானத்திற்கும், அவர் மக்களிடையே நிகழ்த்திய வல்ல செயல்களுக்கும் சிறந்து விளங்கினார்.  

ஸ்தேவானுக்கும்  தொழுகைக் கூடத்தைச் சேர்ந்த சிலரும் சிரேன், அலக்சாந்திரியா நகரினரும் சிலிசியா மற்றும் ஆசியா மாநிலத்தவர்களுக்கிடையேயும்   விவாதம் ஏற்பட்டது.  ஸ்தேவானின் போதனைகளை எதிர்க்க இயலாமையால் விரக்தியடைந்த சிலர், அவர் மோசே மற்றும் கடவுளுக்கும் எதிராக அவதூறான வார்த்தைகளைப் பேசியதாகக் கூறி, அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை  தலைமைச் சங்கத்தார் முன்னிலையில் அடுக்கினார்கள்.    

அவை பொய்யான குற்றச்சாட்டுகளாக  இருந்தபோதிலும், விசாரனையின் போது தலைமைச் சங்கத்தார் ஸ்தேவானின்  முகம் வானதூதரின் முகம்போல் ஒளிர்வதைக் கண்டனர்.


நற்செய்தி:

இதற்கு முந்தைய நற்செய்தியில், இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த பிறகு, அவர் கடலின் மேல் நடப்பதை அவருடைய சீடர்கள் கண்டார்கள். 5000 பேருக்கு உணவளித்த போது, உழைக்காது உண்ட அப்பத்தின் சுவை மக்களை மறுநாளும் கவர்ந்தது. எனவே இன்றும் அந்த உணவு கிடைக்குமென்று, அவர்கள் வழிமேல் விழி வைத்து இயேசுவுக்காகக் காத்திருந்தார்கள். பின்னர் இயேசுவைத் தேடி கப்பர்நாகும் ஊருக்கும்    சென்றனர்.  தங்களின் தேவை ஒருமுறை நிறைவானதால், வயிறார அப்பத்தை உண்டதால் .. இப்போதும் இயேசுவைத் தேடுகிறார்கள்.

ஆனால், அந்த அரும் அடையாளத்தின் உட்பொருளை அவர்கள் உணரவில்லை. மறுகரையில்  இயேசுவைக் கண்டதால், ‘ராபி, எப்போது இங்கு வருவீர்’ என்று உரையாடலைத் தொடக்கப் பார்க்கிறார்கள்.  இயேசு நறுக்கென்று  “நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ என்று பதிலளிக்கிறார்.  

அவர் மீண்டும், ‘அழிந்து போகும் உணவுக்காக உழைக்காதீர்கள், ஆனால் நிலைவாழ்வுக்கான  உணவுக்காக உழையுங்கள்’ என்றார்.  அடுத்து, "கடவுளின் செயல்களை நிறைவேற்ற நாங்கள் என்ன செய்ய வேண்டும் ?" என்று அவர்கள் கேட்கவே,  "கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கு ஏற்ற செயல்” என்றார்.

சிந்தனைக்கு:

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னைப் பின்தொடர்ந்து வந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து “நீங்கள் அரும் அடையாளத்தைக் கண்டதால் அல்ல, மாறாக அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம், நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்” என்கிறார்.  யோபு நூல் 1:21-ல், “என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியனாய் யான் வந்தேன்; அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் யான் செல்வேன்’ என்று யோபு ஒப்புவித்ததை ஆழ்ந்தறிந்தால், இறந்ததும் உடன் கொண்டு செல்லப்போவது ஒன்றுமில்லை. ஆனால், பெரும்பாலான நேரங்களில் நமது வாழ்க்கையே இயேசு கூறுவதுபோன்று அழிந்துபோகும் செல்வதைத் தேடுகின்ற ஒரு பயணமாக முடங்கிபோய்விடுகின்றது. 

முதல் வாசகத்தில் தலைமைச் சங்கத்தார்  அழிந்துபோகக் கூடிய இந்த உலக வாழ்வை நிலைநாட்டிக் கொள்ள ஸ்தேவானுக்கு  எதிராகப் பழிச்சுமத்தினார்கள். அவர்கள் ‘ஐயோ, வீண் பழி போடுகிறோமே’ என்று கிஞ்சிற்றும் எண்ணவில்லை. இன்றும்,  நம்மில் சிலர் தங்கள் குற்றங்களில் இருந்து, தங்களைத் தற்காத்துக்கொள்ள  பிறர் மேல் பொய் குற்றச்சாட்டை சுமத்துவதைப் பார்க்கிறோம். 

இரு வாசகங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மிக எளிதான வகையில் பிரச்சனைகளை முடித்துகொள்ள மக்கள் வழிதேடுவைதை அறிகிறோம். முதலாவதாக,  எதிர்த்து வாதிட  முடியாமல் போகும்போது, சிலர் அவர்கள் கையில் எடுக்கக்கூடிய ‘மிகக்கேவலமான ஆயுதம்’ தான் பொய்க் குற்றம் சாற்றுதல்.   அடுத்து, உழைக்க மனமில்லாதவர்கள் அடுத்தவர் உதவியை நாடிச் செல்வது. 

நாம் நற்செய்தயைப் புரட்டும்போது, இயேசுவிடம் வந்தவர்கள் கொண்ட தவறான புரிதலைக் காண்கிறோம்.  அவர்கள் இன்னும் அற்புதங்களை விரும்பி இயேசுவிடம்  வருகிறர்கள்.   அவர்கள் தங்களுடைய உடனடி ஆசைகளில் கவனம் செலுத்தாமல் வாழ்க்கையின் முக்கியமான விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று இயேசு அவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.   கடவுள் அனுப்பிய அவர் மேல் நம்பிக்கைகொள்ள அழைக்கிறார்.

கிறிஸ்தவர்கள் என்பதில் நாம் மகிழ்ச்சியடையும் வேளையில் நமது கவனம் எதில் உள்ளது என்பதை சிந்திக்க இன்று இயேசு அழைக்கிறார்.  

இயேசுவின் சீடர்களாக பயணிப்போர் சொந்த ஆசைகள் நிறைவேறுகிறதா அல்லது நிறைவேறாதா என்று  கவலைப்பட மாட்டார்கள்.  ஏனென்றால் நம்முடைய தேவைகள் கடவுளால் கவனிக்கப்படுகின்றன என்ற   நம்பிக்கை நமக்குள் இருக்கும்.  நாளும் பொழுதும் அற்புதங்களுக்காக  நாம் இயேசுவைத் துரத்த மாட்டோம்.   அவர் நம்மில் வாழ்கிறார் என்பதே ஓர் அற்புதம்தான். 

புனித ஸ்தேவான் அவர் கேட்டறிந்த உயிர்த்த இயேசுவின் மீது நம்பிக்கை வைத்துச் செயல்பட்டார்.  அதுவே ஒரு திருத்தொண்டராக அவரது பணியை  நிறைவேற்ற அவருக்கு அதிகாரம் அளித்தது. அவ்வாறே, பெயர் அளவில் அல்ல, சுயநலத்திற்காக அல்ல, இறைமக்களின் பொது நலத்தில்  நாம் கவனம் செலுத்த வேண்டும். சிலர் அற்புதமாகப் பேசி மக்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதையும், தங்கள் திட்டங்கள் நிறைவேற இறைமக்களைப் பயன்படுத்துவதையும் பார்த்திருக்கிறோம். இது அழிவுக்கு வழிவகுக்கும்.

நாளும் அவரோடு உறவில் வாழ முதலில் முற்படுவோம், அதுவே ஓர் உன்னத அற்புதமாக மாறும்.   கடவுளில் நம் முதன்மை கவனம் இல்லை என்றால், மற்ற அனைத்தும் விரைவில் நம் கவனத்தை ஈர்க்கும். நாம் படுகுழுயில் விழுவோம். 

இறைவேண்டல்:

எங்கள் ஆன்ம உணவாக வந்தவரே, இயேசுவே, உம்மில் அற்புதங்களை அல்ல, உமது அருளுக்காகவும் உமது பணியை நிறைவேற்றும் திடனுக்காவும் நீர் என்னில் உறைந்திட வேண்டும் என்று உம்மை மன்றடுகிறேன். ஆமென்.

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452