கொரோனாவை அழிக்கும் சிலுவை

Message on Good Friday by Dr. Joe Arun SJ

கொரோனாவை அழிக்கும் சிலுவை
 

இன்று புனித வெள்ளி. சிலுவையைப் பார்க்கிறோம். பாடங்களைக் கற்றுக்கொண்டு நம் வாழ்வை வாழ்வோம். 

பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த நாவல் ஆசிரியர் ஆல்பர்ட் கமியோ. அவர் பிளேக் என்ற நாவலை அண்மையில் எழுதினார். அந்த நாவல் பிரான்ஸ் நாட்டில் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய கதை. அந்த நாவலின் இறுதிப் பகுதியில் மருத்துவர் ஒருவர் செத்துக்கிடக்கும் உடல்களை குழந்தைகள், பெண்கள், ஆண்கள், முதியவர் என்று தனித்தனியாக பிரித்து அடுக்கிக்கொண்டிருந்தார். அவ்வழியே சென்ற வழிப்போக்கன் ஒருவன் மருத்துவரைக் கேட்பான், ஏன் இந்த பிணங்களை இப்படி பிரித்து அடுக்குகிறீர்கள், அவர்கள்தான் செத்துவிட்டார்களே என்றான். 

அவர் அந்த மருத்துவர் சொல்வார்: இந்த இடத்தில் நான் ஒரு அர்த்தத்தைப் பார்க்கிறேன். ஒழுங்கற்ற சூழ்நிலையில் ஒழுங்கைப் பார்க்கிறேன் (I see order in disorder; meaning in meaninglessness) என்று கூறினார். எங்கிருந்து கற்றுக்கொண்டீர்கள் என்று அந்த வழிப்போக்கன் கேட்கிறான். அந்த நாவல் இவ்வாறு முடிகிறது - துயரத்திலிருந்துக் கற்றுக்கொண்டேன். உலகம் முழுவதும், இந்தியா, ஏன் தமிழகமும் துயரத்தில் இருக்கிறது. பயமும், வேதனையும் நிறைந்த சூழலில் தான் நாம் வாழ்கிறோம். துயரம் நம் வாழ்வைச் செதுக்கும் உளியாகச் செதுக்கிக்கொண்டிருக்கிறது. 

சிலுவையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது - சுமைகள்தான் நம் வாழ்வில் சுகத்தைத் தரும். இந்த சிலுவை நமக்கு ஒரு மருந்து. நம்முடைய உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்து. வாழ்வை எதிர்கொள்வதற்கும், போராட்டத்தைச் சந்திக்கவும், அதிலிருந்து வெற்றி பெறுவதற்கான சிறந்த கருவி. 

இது மருந்தும், ஊட்டசத்துமாவது எப்போது: சிலுவையை பார்த்தோமென்றால், இரு நேர்கோடுகளால் இணைக்கப்பட்டுள்ளது. படுக்கைக்கோடு என்பது கிடப்பு நிலை. அது நம் மக்களோடு நாம் கொண்டுள்ள உறவு. அவர்களை எப்படி புரிந்துகொண்டு எப்படி வாழ்கின்றோம் என்பதைக் குறிப்பதாகும்.

செங்குத்துக்கோடு என்பது கடப்பு நிலை. இது இறைவனோடு நமக்குள்ள உறவு. கிடப்பு நிலையிலிருந்து கடப்பு நிலைக்குச் செல்லவேண்டும் என்றால் பிறருடைய வலியை பகிர்ந்துகொண்டு, பயணிக்கின்றபோது நம்மை இறைவனிடம் கொண்டுபோய் சேர்க்கும், குணம்தரும்.

சிலுவை வாழ்க்கை என்பது பிறர் சுமைகளைச் சுமப்பது. இன்று தினக்கூலிகள், வேலையில்லாதவர்கள், சாலையோரம் உள்ளவர்கள், வெளியிலிருந்து இங்கு வேலைக்கு வந்து, குடும்பத்தைவிட்டு தவிப்பவர்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருடன் அவர்களின் துன்பங்களையும், சுமைகளையும் நாம் பகிர்ந்துகொள்ளும்போது, சிலுவைச் சுகமாக இருக்கும். 

மற்றவருடைய சுமையை நம்முடைய சுமையாக ஏற்றுக்கொள்ளும் வாழ்வு மாற்றம்தான் நம்மை குணப்படுத்தும், வாழ்வைத் தரும். சிலுவை என்னும் ஊட்டச்சத்தை உண்டு எதிர்ப்பு சக்தியை வளர்த்து குணம் பெறுவோம். சுமை சுமப்பதால் இந்த உலகில் சுகம் பெறுகிறோம், குணம்பெறுகிறோம். 

பிறர்மேல் சுமைகளைச் சுமத்தினால் குணம் பெறமாட்டோம். குணம் பெறுபவர்களாக இருக்க நம் குணங்களை மாற்றுவோம்.

தொடர்பில் கொடுக்கப்பட்ட காணொளிக்காட்சியின் சுருக்கம்

Add new comment

11 + 2 =

Please wait while the page is loading