போதைப்பொருள்களுக்கு எதிரான வன்முறை நடவடிக்கை 

பிலிப்பைன்ஸ் அரசுத்தலைவர் ரொட்ரிக்கோ துத்தர்தே அவர்கள் தொடங்கியுள்ள போதைப்பொருளுக்கு எதிரான வன்முறை நடவடிக்கையில் இடம்பெறும் கொலைகள் உட்பட, அந்நாட்டில் கொலைகள் அதிகரித்துவருவது குறித்து, ஐ.நா.வின் மனித உரிமைகள் அவை, விரிவான விசாரணையைத் தொடங்கும் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஐ.நா.வின் மனித உரிமைகள் அவையில், ஐஸ்லாந்து நாடு பரிந்துரைத்த இந்த விசாரணைக்கு ஆதரவாக, பல நாடுகள் இவ்வெள்ளியன்று வாக்களித்துள்ளன.

அரசுத்தலைவர் துத்தர்தே அவர்களின் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையில், இதுவரை 6,600க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்றும், கடந்த ஆறு மாதங்களில் மட்டும், 1,600 பேர் பலியாகியுள்ளனர் என்றும், பிலிப்பைன்ஸ் தேசிய காவல்துறை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

அதேவேளை, 27 ஆயிரத்திலிருந்து, முப்பதாயிரம் பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் என, ஊடகங்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கணித்துள்ளனர்.

இதற்கிடையே, ஐ.நா. மனித உரிமைகள் அவை இயக்குனர் மிச்செல்லே  பசேலெட் அவர்கள், பிலிப்பைன்ஸ் நாட்டில் மனித உரிமைகள் நிலவரம் குறித்து விரிவான அறிக்கை ஒன்றைத் தயாரிக்குமாறு ஆணைப் பிறப்பித்துள்ளார் எனவும், இந்த அறிக்கை 2020ம் ஆண்டு ஜூன் மாதத்தில், ஐ.நா.வில் சமர்ப்பிக்கப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. 

(ஆசியா நியூஸ் , வத்திக்கான் நியூஸ் )

Add new comment

3 + 17 =

Please wait while the page is loading