ஆயர் சார்லஸ் தி போர்பின்-ஜேன்சன்

Exreordinary Missionary Month

நற்செய்தி அறிவிப்பு பணியின் சாட்சிகள்
அக்டோபர் 6
ஆயர் சார்லஸ் தி போர்பின்-ஜேன்சன்

யார் இவர்...
1785 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் ஒரு இராணுவக் குடும்பத்தில் பிறந்தார். அவர் பிறந்து நான்கு ஆண்டுகள் கழித்து பிரஞ்ச் புரட்சி வந்தது. அவருடைய குடும்பம் ஜெர்மனியில் தஞ்சம் புகுந்தது. அங்கு அவர்கள் அகதியாக, ஏழ்மையில், பாதுகாப்பற்ற நிலையில் பயத்தில் வாழ்ந்தார்கள். 

அவருடைய வாழ்வை பாதித்தது இரண்டு துருவங்கள். ஒன்று குழந்தைப் பருவத்தின் நிலை மற்றொன்று நற்செய்தி அறிவிப்புப் பணியின் இயலாத்தன்மை. இந்த இரண்டும்தான் பிற்காலத்தில் இவருடைய நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு புரிதல் படிவம் கொடுத்தது. 

மீண்டும் பிரான்ஸ் நாடு திரும்பியபோது அவர் முதல் நற்கருணையைப் பெற்றார். தன்னுடைய இளம் வயதிலேயே பின்தள்ளப்பட்ட மக்களுக்கு உதவும் நிறுவனங்களில் சேர்ந்து சிறைவாசிகளையும், நோயாளிகளையும் சந்தித்தார்.  

அப்பொழுது சீனாவில் நற்செய்தி அறிவிப்புப் பணிப்பற்றி கேள்விப்பட்டு அதில் ஆர்வம் கொண்டார். அதே வேளையில் மன்னன் நெப்போலியன் தனது மாநில மாமன்ற மேற்பார்வையாளராக பணிசெய்ய அவருக்கு வாய்ப்புக் கொடுத்தார். ஆனால் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கான கடவுளின் அழைத்தலை உணர்ந்து அதற்கு செவிகொடுத்தார். 

இவர் 1811 குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 1824 இல் வட பிரான்சில் உள்ள நான்சி-டவுள் என்னும் மறைமாவட்டத்தின் ஆயரானார். ஆயராக இருந்தபோதும் சீனாவில் நற்செய்தி அறிவிப்புப் பணி பற்றி ஆர்வமுடன் இருந்தார். 1830-இல் புரட்சி வெடித்தபோது, இவர் தனது மறைமாவட்டத்திலிருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டார். பின்னர் ஆயர்களின் அழைப்பிற்கினங்க வட அமெரிக்கா, கனடா நாடுகளில் நற்செய்தி அறிவிப்புப் பணியைக் காணச் சென்றார். 
அவர் மீண்டும் வந்தபோது சீனாவில் குழந்தைகள் அதுவும் பெண் குழந்தைகள் திருமுழுக்கு பெறமுடியாத நிலையிலேயே கொல்லப்படுகிறார்கள், கைவிடப்படுகிறார்கள் என்னும் செய்திகேட்டு அவர் மிகவும் வருந்தினார். அவர்களை காப்பாற்றவேண்டும் என பாரிஸ் வெளிநாட்டு நற்செய்தி அறிவிப்புப் பணி சபையிடமிருந்து ஒரு அவரச வேண்டுகோள் இவரிடம் வந்தது அதற்காக முழு முயற்சியுடன் உழைத்தார்.

அவருடைய இரண்டு கனவுகளும் நிறைவேறவில்லை: சீனாவிற்கு நற்செய்தி அறிவிப்புப் பணிக்காக செல்வது மற்றும் அருள்சகோதரிகளை சீனாவிலுள்ள புறந்தள்ளப்பட்ட குழந்தைகளுக்கு பணிசெய்வதற்காக அனுப்பிவைப்பது. இறுதியாக 1844 ஆம் ஆண்டு இறந்தார். திருஅவை அப்பணியை திருத்தந்தையர்களின் முயற்சியோடு செய்து முடித்தது.

அப்படியென்ன சிறப்பு இவருக்கு?
கிறிஸ்தவ நாட்டிலுள்ள குழந்தைகளைக் கொண்டு நற்செய்தி அறிவிப்புப் பணியகத்திலுள்ள குழந்தைகளுக்கு எவ்வாறு உதவுவது என்று சிந்தித்தார். பாதுகாப்பான குழந்தைபருவமும், ஆழமான நற்செய்தி அறிவிப்புப் பணியும் சந்திக்கின்ற மையம் எது எனச் சிந்தித்தார். 

இந்த சிந்தனையுடன் 1842 ஆம் ஆண்டு லியோனுக்குச் சென்று திருமதி. பவுலின் ஜாரிகட்டினைச் சந்தித்தார். அவருடைய ஆலோசனையுடன் தனது மறைமாவட்டத்திலுள்ள குழந்தைகளை ஒன்றுதிரட்டினார். அவர்ளுக்கு இருநிலைப் பணியைக் கொடுத்தார். 

ஒன்று நற்செய்தி அறிவிப்புப் பணியிலுள்ள குழந்தைகளுக்காக ஒரு அருள்நிறைந்த மரியேயுடன் ஒரு சிறிய செபமும், அதே வேளையில் நற்செய்தி அறிவிப்புப் பணியகத்திலுள்ள குழந்தைகளுக்கு உதவுவதற்கு பத்து சென்ட் நாணயமும் கொடுக்கும் பணியை ஒப்படைத்தார். இவ்வாறு 1843, மே 19 இல் மாசில்ல குழந்தைகள் சபை – HOLY CHILDHOOD (இயேசுவின் குழந்தைப் பருவத்தை குறிக்கும்) உருவானது. மாசில்ல குழந்தைகள் சபை பிரான்ஸ், பெல்ஜியம் மட்டுமல்ல உலகெங்குமிருந்து ஆதரவைப் பெற்றது. இது திருத்தந்தையின் நம்பிக்கை பரப்பு ஆணையத்துக்கு உறுதுணையாக இருந்தது. 

மாசில்லாக் குழந்தைகள் சபையின் விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் தன்னுடைய இறப்பிற்கு 4 மாதத்திற்கு முன்னதாக வரையறுத்துக்கொடுத்தார் ஆயர் சார்லஸ். 1922 ஆம் ஆண்டு திருத்தந்தை பதினொராம் பத்திநாதர் மாசில்ல குழந்தைகள் சபையை திருத்தந்தையின் ஆணையமாக அங்கிகரித்தார். இந்த சபையானது இறையழைத்திலுள்ள பிரச்சனைகளையும் தீர்க்கமுனைந்தது. இவ்வாறு 1889 இல் புனித திருத்தூதர் பேதுருவின் சபை உருவாக வழிவகுத்தது. 

நம் என்ன செய்யலாம்: 

நமது குழந்தைகளுக்கும் அவர்களுடைய சேமிப்பிலிருந்து ஏழைகள், கைவிடப்பட்டவர்களுக்கு உதவும் நற்செய்திப் பணி செய்ய கற்றுக்கொடுக்க வேண்டும்.
மேலும் கூடுதல் தகவல்களை: www.tamil.rvasia.org  என்னும் இணையதள முகவரியில் காணலாம்.

 

Add new comment

6 + 5 =

Please wait while the page is loading