சுதந்திர மனிதர்களாக வாழ முயற்சிக்கலாமே!

pixabay

முழு விடுதலைக்கானப் போராட்டங்களும் முன்னெடுப்புகளுமே வரலாற்றின் பக்கங்களை நிரப்பியிருக்கின்றன. அதில் சுதந்திரத்தை சுவாசித்தவர்களால்தான் மாற்றங்கள் உருவாகியிருக்கின்றன, அப்படியென்றால் மனிதர்களை தங்கள் சுதந்திரத்தைப் பொறுப்புணர்வுடன் செயல்படுத்தி இவ்வுலகை வளப்படுத்தியவர்களாகவும், சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இவ்வுலகில் மறக்க முடியாத காயங்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தியவர்களாகவும் பிரிக்கலாம். 

சிவ் கேரா தன்னுடைய உரை ஒன்றில் “எஸ் ரூ நோ தலைமுறையினர்” பற்றி கூறுவார். ஏறக்குறை 50 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள்; “நோ” (செய்யக்கூடாது) தலைமுறையினர் (No Generation). பிள்ளைகள் எதற்கு அனுமதி கேட்டாலும், பெரும்பாலான பதில் நோ...நோ...நோ... இந்த ‘நோ’வின் அர்த்ததை உணர்ந்தவர்கள் வாழ்வில் உயர்ந்தார்கள். 

இப்பொழுது “எஸ்” (செய்யலாம்) தலைமுறையினர் (Yes Generation). குழந்தை வருத்தப்படக்கூடாது என்பதற்காக எதைக் கேட்டாலும் ஓ.கே... ஓ.ஸ்.... என்கிறார்கள். இந்நிலை பல நேரங்களில் குழந்தைப் பருவத்திலேயே சுதந்திரம் என்பதன் பொருளையும் அதனுடைய உண்மையான இலக்கையும் மறந்து தவறான வாழ்வுப் பாதையில் அவர்கள் செல்ல காரணமாகிறது. 

தாம் நினைத்ததையெல்லாம் செய்யலாம், நினைத்தபடியெல்லாம் நடக்கலாம் என்பதல்ல சுதந்திரம். கடவுள் நம்மை இவ்வுலகிற்கு தம் பெற்றோர் வழியாக தேர்ந்தெடுத்துக்கொண்டதன் நோக்கத்தை உணர்ந்து, அதில் பிறழாமல் இருக்க நமக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதனை இன்றைய தலைமுறையினருக்கு நாம் கற்றுக்கொடுக்கவேண்டும். 

கிறித்தவர்களுக்கு சுதந்திரம் என்பது சுதந்திரமானது அல்ல, அது கட்டுபடுத்தப்பட்டது - நல்லவர்களாக உருப்பெற, மற்றவர்களுக்காக  வாழ, அவர்கள் வாழ்கையை வளப்படுத்த (Freedom for something not freedom to do anything). இதை உடன்படிக்கைச் சுதந்திரம் என்றுகூடச் சொல்லலாம். 

கடவுள் இஸ்ரயேல் மக்களை அடிமைத்தளையிலிருந்து விடுவித்தபோது அவர்களுக்குக் கொடுத்தது. கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவருடைய உரிமை சொத்தாக இருக்கவேண்டும் என்னும் உடன்படிக்கையின் விடுதலை. இறைவாக்கினர்களை அழைத்தபோதும் ஒரு திட்டத்தோடு அழைக்கின்றார். அதை ஏற்றுக்கொள்வதற்கு நமக்கு சுதந்திரம், ஏற்றபின் எல்லாம் இறைவன் மையம். இயேசுவும் தன் வாழ்வுமுழுவதும் இதை நமக்கு கற்றுத்தருகின்றார்.

சுதந்திர வாழ்வு என்பது இரண்டு அடிப்படைக்கூறுகளை தன்னகத்தே கொண்டது. முதலாவது, நம்பிக்கை. நாம் ஒவ்வொருவரையும் தனித்தன்மையுடன் இவ்வுலகிற்கு நம்பி அனுப்பிவைத்த கடவுளை நம்பவேண்டும் – நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கவேண்டும். கடவுள் நமக்காக கொண்டுள்ள மாபெரும் திட்டத்தை செயல்படுத்த நமக்குக் கொடுக்கப்படுகின்ற வாய்ப்புகளை பொறுப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டும். வருகின்ற தடைகள் மத்தியில் ஏன் மற்றவர்களைப்போல விரும்பியபடி வாழகூடாது என்று நினைத்து திசை மாறிவிடாமல் அழைத்தவரின் உடனிருப்பை நம்பவேண்டும். நம்பி வாழ்வதற்கு மட்டுமே சுதந்திரம். 

இரண்டாவது, சார்புதன்மை. நாம் தனி மனிதர்கள் அல்ல, மாறாக ஒருவர் மற்றவரைச் சார்ந்த ஒரு குழுமம். நம்முடைய சுதந்திரம் மற்றவர்கள் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. 

கடவுள் நமக்கு வைத்திருக்கும் திட்டத்தில் பலருடைய விடுதலையும் அடங்கியிருக்கின்றது. நாம் நம்முடைய சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி அந்த திட்டத்தை நிறைவேற்றவில்லையென்றால், யாரும் அதை நிறைவேற்ற முடியாது, அதன் வழியாக மற்றவர்களுக்கும் விடுதலையும் அளிக்கமுடியாது. நினைவில் கொள்க - நம் வழியாக விடுதலைக்காக காத்திருப்பவர்கள் பலர்.

25 டிசம்பர் 1977 - தன் மௌன நடிப்பால் உலகை ஆரவாரம் செய்ய வைத்து, கவலையோடு இருக்கும் மனிதர் மத்தியில் அமைதியையும் சந்தோசத்தையும் கொண்டுவருவது தன் கடமை என வாழ்ந்த ஒரு சுதந்திர மனிதன், சார்லி சாப்ளின் இறந்த நாள். 

தனக்கு விவிலியக் கதைகளைச் சொல்லிக்கொடுத்து வளர்த்த தன் தாயிடம், “அம்மா நான் உடனடியாக இறைவனைப் பார்க்கவேண்டும்” என்றார் சார்லி சாப்ளின். “இப்போது பார்க்கமுடியாது, இறந்த பிறகுதான் பார்க்கமுடியும்” என்றார் அவருடைய தாய். “அப்படியென்றால் நான் உடனடியாக இறக்கவேண்டும்” என்றார் சார்லி. அப்பொழுது அவருடைய தாய் சொன்னார், “கடவுள் உன்னை ஒரு நோக்கத்தோடுதான் படைத்திருக்கின்றார். உனக்கென்று ஒரு சில கடமைகளைக் குறித்து வைத்திருக்கிறார். அதை நீ மட்டும்தான் நிறைவேற்ற முடியும். அதையெல்லாம் நீ செய்துமுடி பிறகு கடவுளிடம் போகலாம்.” 

சார்லி சாப்ளின் எப்படியும் வாழ்ந்திருக்கலாம். அவருக்கு எல்லா சுகந்திரமும் இருந்தது. ஆனால் முழுமையான சுதந்திரம் என்பது தான் இவ்வுலகில் எதைச் செய்ய வேண்டும் என்பதற்காக அனுப்பிவைக்கபட்டோமோ அதை நிறைவேற்றுவதே என்பதை உணர்ந்து வாழ்ந்தார். நாமும் கடவுளின் நம்பிக்கைக்கு பிரமாணிக்கமாயிருக்க, தனக்கு கொடுத்த சுதந்திரத்தைப் பொறுப்புடன் பயன்படுத்தி அவரின் திட்டத்தை நிறைவேற்றும் திசையில் அதற்கேற்ற விசையில் பயணிப்போம்.

 

Add new comment

9 + 7 =

Please wait while the page is loading